உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் அரசுப் பள்ளி மாணவி!



* முயற்சி


டெல்லியில் 2020ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாட தமிழகத்தைச் சேர்ந்த நாமக்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பி.மாரியம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மாணவி மாரியம்மாளிடம் பேசினோம்...

‘‘சேலம் மாவட்டத்துக்குட்பட்ட சங்ககிரி தாலுகாவில் உள்ள மேக்காடு என்ற சிறிய கிராமம்தான் எனது சொந்த ஊர். அப்பா பாலமுருகன் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். கூலித்தொழிலாளிதான். அம்மா காந்திமதி. எனது அண்ணன் கலையரசன் தற்போது திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் படித்துவருகிறார். அவர் சிறந்த கால்பந்தாட்ட வீரர். சிறுவயதிலேயே எனது அண்ணன் எங்கள் ஊரில் கால்பந்தாட்டத்தில் பல பரிசுகளைப் பெறுவார். அவரைப் பார்த்துதான் எனக்கும் கால்பந்தாட்டத்தின் மீது விருப்பம் ஏற்பட்டது. நானும் விளையாடத் தொடங்கினேன்’’ என்று விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டதை கூறினார் மாரியம்மாள்.

‘‘நானும் அண்ணனும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கும் விடுதியில் தங்கி பயிற்சி எடுக்க விண்ணப்பித்தோம். இருவருக்குமே இடம் கிடைத்தது. கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சிபெற்று விளையாடி வருகிறேன். எனது அண்ணனும் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்குபெற்று வருகிறார்.

நாங்கள் 7ஆம் வகுப்புவரை உள்ளூர் பள்ளியில்தான் படித்தோம். 8ஆம் வகுப்பு முதல் விளையாட்டுப் பயிற்சி விடுதியில் தங்கி படித்ததால் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும், பின்னர் தேசிய அளவிலான இளையோர் மகளிர் கால்பந்து போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவந்தேன். தெலங்கானா, மணிப்பூர், ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று விளையாடினேன். இதில், 2018ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற போட்டியில் 12 கோல்களை அடித்ததால் எங்கள் அணி வெற்றி பெற்றது. மேலும், பஞ்சாப் மாநிலம் பட்டியாலா, ஒடிசா, கட்டாக் போன்ற இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு, மே மாதம் நடைபெற்ற வீராங்கனைகள் தேர்வின்போது நானும் கலந்துகொண்டேன். இதில் இந்திய அளவில் 18 பேர் தேர்வானோம். அதில் தமிழகம் சார்பில் நான் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று சொல்லும் மாரியம்மாள் தொடர் பயிற்சிகளால் படிப்பதில் ஏற்படும் பிரச்னை குறித்து கவலையோடு தெரிவித்தார்.

‘‘கடந்த இரண்டு மாதமாக பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்று வருவதால், பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. விடுதியில் இருந்தபடியே படிக்க வாய்ப்பை வழங்கினால், போட்டிக்குத் தேர்வாவதிலும், படிப்பதிலும் பிரச்னை இருக்காது. தற்போது பயிற்சிக்காக வெளிமாநிலம் செல்கிறேன். இங்கு பயிற்சி மேற்கொள்ள போதுமான வசதியில்லாதது ஒரு குறையாகவே இருக்கிறது. கால்பந்துக்கான விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவை இருந்தால் பயிற்சி மேற்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.

உலகக் கோப்பை போட்டிக்கு 18 பேர் தேர்வானதில், தமிழகத்திலிருந்து நான் மட்டும் தேர்வாகியுள்ளேன். இதனால் பிற மொழி வீராங்கனைகளோடு போட்டி ரீதியாக தொடர்பு கொள்வதில் பிரச்னை இருக்கிறது. இவற்றையெல்லாம் கடந்து உலகக் கோப்பையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நான் தொடர்ந்து சிறப்பான பயிற்சி மேற்கொண்டு இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்கிறார் மாரியம்மாள். மாணவி மாரியம்மாள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறித்து நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பார்வதியிடம் கேட்டோம்.

‘‘அப்படியா..? அந்த மாணவியை பேசச் சொல்கிறேன்’’ என்றார். ஒருநாள் கழிந்தது. மறுநாள் பேசினோம்...‘‘சார் அந்தப் பெண் வகுப்பில் இருக்கிறாள், பிறகு பேசுங்கள்’’ என்றார். ‘‘மேடம், உங்கள் பள்ளி மாணவி ஓர் உயர்ந்த நிலைக்கு வந்துகொண்டிருக்கிறார், அவரால் உங்கள் பள்ளிக்குப் பெருமைதானே... அதை ஊக்கப்படுத்தாமல் உதாசீனப்படுத்துகிறீர்களே’’ என்றோம். ‘‘எனக்கு அதெல்லாம் தெரியாது, நீங்கள் விளையாட்டு விடுதியில் உள்ள கோச்சரிடம் (பயிற்சியாளர்) பேசிக்கொள்ளுங்கள் என போனை கட் செய்துவிட்டார்.

கோச்சர் கோகிலாவிடமிருந்து போன் வந்தது, ‘‘சார்... பள்ளி தலைமையாசிரியர் இந்த நம்பர் தந்து பேசச் சொன்னார்கள், என்ன விஷயம்?’’ என்றார். ‘‘உங்கள் மாணவி மாரியம்மாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளார் அல்லவா, அதிலும் இந்திய அணிக்கு தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டுமே என்பது பெருமைதானே! அவரைப் பற்றிச் சொல்லுங்கள் அல்லது மாணவியை பேசச் சொல்லுங்கள்’’ என்றோம்.

மாணவி மாரியம்மாள் இரண்டொரு வார்த்தைகளில், ‘‘எங்கள் கோச்சரிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக்கொள்ளுங்கள்’’ என சொல்லிவிட்டார். கோச்சர் கோகிலாவோ பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு போனை ஸ்விட்ச்-ஆஃப் செய்துவிட்டார். பலமுறை முயன்றுதான் மாரியம்மாளை பேசவைத்தோம். ஏனோ தெரியவில்லை மாணவர்களை வெளியுலகுக்கு காட்டாமல் மழுங்கடிக்கிறார்கள்.

இதுதான், அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அரசு விளையாட்டுப் பயிற்சியாளர்களின் ஊக்குவிப்பாக உள்ளது. இதுபோன்றவர்களால் ஒவ்வொரு துறையிலும் திறமையுள்ள அரசுப் பள்ளி மாணவர்களை நிச்சயம் வெளிக்கொணர முடியாது. மாணவர்கள் தன்னகத்தே கொண்டிருக்கும் திறமைகளை வெளிக்கொணர்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.


- தோ.திருத்துவராஜ், படம்: செல்வன், சேலம்