IIM கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT 2019 பொது சேர்க்கை தேர்வு!



இந்திய மேலாண்மைக் கழகங்கள் (Indian Institute of Management - IIM), இந்தியாவிலுள்ள சிறப்பான மேலாண்மை பட்டப்படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்களாகும். அவை மேலாண்மைக் கல்வி வழங்குவது, ஆய்வுகள் மேற்கொள்வதுடன் இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் மேலாண்மை தொடர்பான கருத்துரைகள் வழங்கிவருகின்றன. இந்திய மாணவர்களில் அறிவில் சிறந்தவர்களைக் கண்டெடுத்து அவர்களுக்கு உலகின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வியை அளித்து இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளிலும் சிறப்பான வழிகாட்டிடும் மேலாளர் வளத்தை அமைத்திடும் நோக்கத்துடன் இந்திய அரசால் இக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

இப்படி இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் இந்திய மேலாண்மைக் கல்விநிறுவனங்கள் மற்றும் சில மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு மற்றும் மேலாண்மை ஆய்வாளர் படிப்புகள் போன்றவற்றில் சேர்க்கை பெறுவதற்கு ஒவ்வோர் ஆண்டும் பொதுச் சேர்க்கைத் தேர்வு நடத்தப்படும். அந்த வகையில் தற்போது 2019ம் ஆண்டில் நடத்தப்படவுள்ள (Common Admission Test CAT 2019) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு

இந்தியாவில் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சிராப்பள்ளி, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய 20 இடங்களில் அமைந்திருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (Indian Institutes of Management (IIMs)) இரண்டு வருட கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகள் (Post Graduate Programmes in Management) இடம்பெற்றிருக்கின்றன.

மேலாண்மை ஆய்வாளர் படிப்பு

அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, இந்தூர், காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், சில்லாங், திருச்சிராப்பள்ளி, உதய்ப்பூர் ஆகிய 13 இடங்களிலிருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி படிப்பிற்கு இணையான மேலாண்மை ஆய்வாளர் படிப்புகளும் (Fellow Programmes in Management - FPM) காசிப்பூர் மற்றும் ராய்ப்பூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் EFPM எனும் ஆய்வாளர் படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.

பிற கல்வி நிறுவனங்கள்

மேற்காணும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மேலாண்மைக் கல்விநிறுவனங்கள் தங்கள் மாணவர் சேர்க்கைக்கு இந்தப் பொதுச் சேர்க்கைத் தேர்வை அனுமதித்து தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றன.

கல்வித் தகுதி: இந்தத் தேர்வுக்கு (Common Admission Test - CAT) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50% மதிப்பெண்களுக்குக் குறைவின்றி, ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி; எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்கள் புள்ளிக்கணக்கில் வழங்கப்பட்டிருந்தால் மேற்காணும் சதவிகிதத்துக்கு இணையான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://iimcat.ac.in எனும் இணையதளத்திற்குச் சென்று 7.8.2019 முதல் 18.9.2019 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1900, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.950 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தேர்வு மையங்கள்

இந்த நுழைவுத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி என்று 7 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு எழுதுவதற்கான மையங்களாக 4 மையங்கள் வரை குறிப்பிட வேண்டும். இந்த மையங்களில் ஏதாவதொரு மையம் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மையங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில் அருகிலுள்ள வேறொரு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அனுமதிச் சீட்டு

விண்ணப்பித்த மாணவர்கள் இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை (Admit Card) 23.10.2019 முதல் மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் பொது நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் 24.11.2019 அன்று நடத்தப்பெறும்.

தேர்வு முறை

கணினி மூலம் நடத்தப்படும் இத்தேர்வில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை Section-1: Verbal Ability and Reading Comprehension, Section 2: Data Interpretation and Logical Reasoning, Section -3: Quantitative Ability ஆகியவையாகும். ஒவ்வொரு பகுதிக்கும் தலா 60 நிமிடங்கள் வீதம் மொத்தம் 180 நிமிடங்கள் (3 மணிநேரம்) இத்தேர்வு நடைபெறும். தேர்வில் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் அதில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்துவிட வேண்டும். ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்குச் சென்றுவிட்டால் மீண்டும் முந்தைய பகுதிக்குத் திரும்ப முடியாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி

களின் விவரம் கடந்த ஜூலை 28ஆம் தேதியே கேட் தேர்வு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தேர்வு நடைமுறைக்கான விளக்கம் (Tutorials) வரும் அக்டோபர் 16ஆம் தேதி இணையதளத்தில் வெளியாகும்.

தேர்வு முடிவுகள்

இத்தேர்வின் முடிவுகள் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படும். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்தத் தேர்வை அங்கீகரிக்கும் மேலாண்மைக் கல்விநிறுவனங்களில் 31.12.2020 வரை சேர்க்கை பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக்கும்.

மாணவர் சேர்க்கை

இந்திய மேலாண்மைக் கல்விநிறுவனங்கள் (Indian Institutes of Management (IIMs)) முந்தைய கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், பொதுச் சேர்க்கைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் போன்ற சில அளவீடுகளை அடிப்படையாகக்கொண்டு, எஸ்.சி. பிரிவினர் 15%, எஸ்.டி. பிரிவினர் 7.5% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27%, மாற்றுத்திறனாளிகள் 3% என்றும், மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவினர் எனும் இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும்.

பொதுச் சேர்க்கைத் தேர்வு (Common Admission Test - CAT) குறித்த மேலும் பல விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் உதவி மேசை எண்ணான (Help Desk Number) 0495-2809219/2809213 எனும் எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.


 - TS.மணி