உயர்கல்விக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!*நியூஸ் கார்னர்
*செய்தி தொகுப்பு

 
கல்லூரி கல்வி இயக்குநர் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர்களின் மேற்படிப்புக்காக திறன் அடிப்படையிலான உதவித்தொகை வழங்கிவருகிறது. இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்று நடப்பு கல்வி ஆண்டில் (2019-2020) உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு உதவித்தொகைக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட வர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற ஆன்லைனில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உதவித்தொகை தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்!


தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி வழங்கப்பட்டது. ஆனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாமல், தமிழ்த் தேர்விலிருந்து விலக்கு கேட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்விப் பணியாளர் பிரிவு இணை இயக்குநர், நாகராஜ முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘சட்டத்தை பின்பற்றி பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்த் தேர்வை முடிக்காதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசின் பணி நிபந்தனை விதிகளின்படி, தமிழ்மொழி படிக்காத ஆசிரியர்கள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் வழியே, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களுக்கு யு.ஜி.சி. ஆய்வு!


ஒரே நேரத்தில் ஒரே பல்கலை அல்லது வெவ்வேறு பல்கலைகளில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிப்பது தொடர்பாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக்குழு சார்பில் 2012-ல் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. ஆலோசனை ஐதராபாத் பல்கலை துணைவேந்தராக இருந்த பர்ஹான் குமர் தலைமையிலான அந்தக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது.

‘ஒரு பல்கலையில் முழுநேரமாக பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலையில், தொலைநிலை மூலம் மற்றொரு பட்டப்படிப்பு படிக்க அனுமதிக்கலாம்’ என அந்தக் குழு ஆலோசனை வழங்கியது. இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் தற்போது புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி. துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையிலான இந்தக் குழு கடந்த மாதம் அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டமும் நடந்துள்ளது.

இது குறித்து, யு.ஜி.சி. அதிகாரிகள் கூறும்போது ‘‘தற்போது தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாணவர் விருப்பம் தொலைநிலை அல்லது பகுதிநேரமாக ஒரு பல்கலையில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது மற்றொரு பல்கலையில் மற்றொரு பட்டப்படிப்பைப் படிப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்கிறது. வழக்கமான பட்டப்படிப்புடன் சிறப்பு அல்லது தனித்திறன் பட்டப்படிப்பையும் படிக்க, மாணவர்கள் விரும்புகின்றனர். அதனால், இதுகுறித்து ஆய்வு செய்யப்படுகிறது’’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதுநிலைப் பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள எஞ்சினியரிங் கல்லுாரிகளில் முதுநிலைப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, கவுன்சலிங் நடத்தப் படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில், ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை எஞ்சினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை, அண்ணா பல்கலையின் www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5.8.2019.