உழைப்பில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு வெற்றி நிச்சயம்!



இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்: 13

எப்போதும் நல்லதையே நினைத்து நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடனும் வாழப் பழகிக்கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள்  உங்களுக்குள்ளே வருவதற்கு அனுமதிக்காதீர்கள். எதிலும் நன்மையைக் காண்பவர்கள் சாதாரணமாகவே உணர்வுத்திறன் மிக்கவர்கள். அவர்கள்  எத்தனை இக்கட்டான சூழ்நிலையையும் நிதானமாகக் கையாளும் சக்தி படைத்தவர்கள். எத்தகைய நஷ்டம், தோல்வி கண்டாலும் மனம் தளராத  இயல்பினைக் கொண்டவர்கள்.


மனம் தளர்வுற்றபோதும், இக்கட்டான சூழ்நிலையின்போதும் நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து அதன் மூலமாக நல்ல முடிவையே தேர்ந்தெடுப்பர்.  ஆனால் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் தமக்கு துன்பம் நேரிடும்போது உலகத்தின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தானும் மனதளவில்  வீழ்ந்துகிடப்பர். மேலும் மேலும் தமது சூழ்நிலைகளை எண்ணி நொந்து போவர், கவலைப்படுவர். அவர்களின் முன்னேற்றம் அப்படியே முடங்கிப்  போய்விடும். “ஆமாம், எனக்கென்ன நல்லதா நடக்கும்? அது சரியில்லை.

இது சரியில்லை. இவன் மோசம்’’ என எப்போதும் ஆத்திரப்பட்டுக் கொண்டும் புலம்பிக்கொண்டும் திரிவர். ஆனால், நேர்மறை எண்ணங்கள்  கொண்டவர்கள் “ஏன் இவ்வாறு நடக்க வேண்டும்? எல்லாம் நல்லதற்கே; இறைவன் நமக்கு நல்லதே செய்வான்; அவன் மேல் பாரத்தைப்  போட்டுவிட்டு நமது வேலையைச் செய்வோம்”என மேற்கொண்டு முன்னேறும் வழியைப்பற்றிச் சிந்தித்துச் செயல்படுவர்.


நீங்கள் முடிந்துபோனதைப்பற்றி கவலை கொள்ளாமல், வரப்போவதைப் பற்றிப் பயப்படாமல், செய்யும் வேலையில் கவனம் வையுங்கள். இனிமேல் பல்  துலக்கும்போது பல் மட்டும் துலக்குங்கள், சாப்பிடும்போது சாப்பிட மட்டும் செய்யுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயமும் இறந்த காலத்தைப் பற்றிய  கவலையும் கொள்வதால் உங்கள் வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் அடைய முடியாது.

நாம் வாழும் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாக, அர்த்தமுடைய வாழ்க்கையாக வாழவேண்டும் என்றால் நிகழ்காலத்தில் கவலை, பயம் போன்றவற்றை  அறவே விட்டுவிட வேண்டும்.அப்படி ஒரு அர்த்தமுடைய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருப்பவர்தான் கோவை மாவட்டம் சுப்பநாயக்கன்பட்டியைச்  சேர்ந்த லோகநாதன். படிப்பு என்றால் அவ்வளவு இஷ்டம்.

படிப்பில் முதல் ஆளாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் விரும்பியது போல அவருடைய அப்பாவும் லோகநாதன் கேட்டதையெல்லாம்  வாங்கித் தந்தார். ஆனால், இந்த ஆசையெல்லாம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. லோகநாதனுக்கு 10 வயது இருக்கும்போது உடம்பு சரியில்லாமல் அப்பா  இறந்துபோய்விட்டார். லோகநாதனுக்கு இரண்டு தம்பிகள், ஒரு சகோதரி. அவருடைய அம்மா இளநீர் விற்று குழந்தைகளைக் காப்பாற்றிவந்தார்.

இந்த நிலையில் மூன்று பிள்ளைகளும் பள்ளிக்கு போனதால் அவருடைய அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. பொருளாதார தேவைகளை சந்திக்க  கஷ்டப்பட்டார். லோகநாதன் தனது தம்பிகள் படிக்கட்டும் என்று சொல்லி 6ஆம் வகுப்போடு தன் படிப்புக்கு முழுக்கு போட்டு அம்மாவுக்கு உதவ  ஆரம்பித்தார். கிடைத்த வேலையெல்லாம் பார்த்தார். கடைசியாக வெல்டிங் கடையில் வேலை பார்த்தார்.

அதன் மூலமாக தம்பி களைப் படிக்க வைத்தார். குடும்பத்தை நல்லமுறையில் பார்த்துக்கொண்டார். தன்னைப் போன்றே எத்தனையோ மாணவர்கள்  கல்வி கற்க வறுமை காரணமாக இருந்து படிப்பைத் தொடர முடியாமல் போன ஏழை மாணவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தார். அதில் முதல் வேலையாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் சைக்கிள் மிதித்து வீடு வீடாக சென்று உபயோகப்படுத்தாத  துணிமணிகளை சேகரிப்பார்.

பிறகு அதை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுப்பார். வெல்டிங் கடையில் வேலை பார்த்துக் கொண்டே தன் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு  இதுபோன்ற சேவைகளை செய்யும் லோகநாதனை பார்த்து வெல்டிங் கடை உரிமையாளர் நெகிழ்ந்துபோனார். இருந்தபோதும் ஏழைக் குழந்தைகளின்  கல்விக்கு உதவ வேண்டுமென்றால் அதற்கு வேறு ஏதாவது பகுதிநேர வேலை செய்து அதில் கிடைக்கும் வருவாய் கொண்டுதான் உதவ வேண்டும்  என்று முடிவுவெடுத்தார்.

லோகநாதன் வேலை செய்துவந்த வெல்டிங் கடை கழிப்பறையை சுத்தம் செய்யும் நபர் வேலையிலிருந்து நின்றுவிட, உடனே லோகநாதன் தனது  முதலாளியிடம் ‘‘இந்த வேலையை நான் செய்கிறேன். அதற்கான சம்பளத்தை எனக்கு கொடுத்தால் அதை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து  உதவுவேன்’’ என்றார். இதைக் கேட்டு முதலாளி பதறிப்போனார். ‘‘சீனியர் வெல்டரா இருக்கிறீர்கள். நீங்கள் போய் ஏன் இந்த வேலையை  செய்யவேண்டும்’’ என்றார்.

இருந்தபோதும் முதலாளியை சமாதானப்படுத்தி அந்தக் கழிப்றை சுத்தம் செய்யும் வேலையை செய்தார். அன்றிலிருந்து தினமும் தன் வெல்டிங்  வேலையெல்லாம் முடித்துவிட்டு கழிப்பறையை சுத்தம் செய்துவிட்டுதான் வீட்டுக்கு செல்வார். அதற்கான மாதச்சம்பளம் பெற்று சேமிக்க ஆரம்பித்தார். இதேபோல கடைகள், மருத்துவமனை என பகுதிநேரமாக கழிப்பறைகளை சுத்தம் செய்து சேமித்த பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று  அங்கு படிக்க வசதியில்லாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவ ஆரம்பித்தார்.

லோகநாதனின் மனைவி சசிகலா, ‘‘இருந்திருந்து இப்படி கழிப்பறை சுத்தம் செய்துதான் சேவை செய்யணுமா? நம்மளை பத்தி மற்றவர்கள் எல்லாம்  என்ன நினைப்பார்கள்’’ என்றார். அதற்கு லோகநாதன் ‘‘சேவையென்று வந்துவிட்டால் இதையெல்லாம் பார்க்கக்கூடாது. கஷ்டப்படுபவர்களுக்கு நாம்  செய்யும் உதவி போய்ச்சேரணுமே தவிர, இதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே கூடாது.

மேலும் உதவி செய்வதற்கு இதுதான் முதலீடு இல்லாத தொழில்’’ என்று சொல்லி ஒருவழியாக மனைவியைச் சமாதானப்படுத்தினார். அதிலிருந்து  மனைவியும் அவரது சேவைக்கு ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளார். ‘‘எத்தனை பணக் கஷ்டங்கள் வந்தாலும் கல்வி உதவிக்கு என்று எனது கணவர்  எடுத்துவைத்த பணத்தை ஒருபோதும் தொட்டதில்லை’’ என்கிறார் லோகநாதனின் மனைவி.

கடந்த 18 ஆண்டுகளாக இந்தச் சேவையை லோகநாதன் தொடரும் சமயம் கோவை காந்திநகர் பகுதியிலுள்ள அரசு ஆதரவற்றோர் இல்லக் கட்டடம்  இடிந்து விழுந்தது. அதற்கு உதவி செய்வதற்காக மூவாயிரம் ரூபாய் செக்கை எடுத்துக்கொண்டு கலெக்டரிடம் போய் கொடுத்தார். அவருடைய  சேவையை பாராட்டிய கலெக்டர் லோகநாதனைப் பற்றி பத்திரிகைகளுக்கும் தகவல் சொல்ல, அன்றைய தினம் லோகநாதன் ஊர் முழுவதும் தெரியும்  அளவுக்கு பிரபலமானார்.

தன் வீட்டுக் கழிப்பறையை சுத்தம் செய்ய தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில் 1,200 குழந்தைகளின் கல்விக்காக கழிப்பறைகளை சுத்தம்செய்து கடந்த  18 ஆண்டுகளாக இதுவரை 10 லட்ச ரூபாய் உதவியாக அளித்துள்ளார். அதே சமயம் மற்றவர்களின் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியை மன  நிறைவுடன் செய்துவருகிறார் லோகநாதன். அது மட்டுமல்ல தனது கடின உழைப்பால் தனது தம்பிகளையும் நன்றாக படிக்க வைத்தார்.

‘‘என்னிடம் கல்வி உதவி பெற்ற மாணவர்கள் இப்போது நல்ல வேலைகளில் இருப்பதை பார்க்கும்போது நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம்  மறந்துவிடுவேன். மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்’’ என்று சொல்லும்போது பலரது வாழ்வில் ஒளியேற்றிய வெளிச்சம் லோகநாதனின் கண்களில்  தெரிகிறது. இவரது பணியைப் பாராட்டிய மாவட்ட நிர்வாகம் இவருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதை வழங்கியுள்ளது.

அதுமட்டுமல்ல நிறைய தனியார் அமைப்புகள் லோகநாதனுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.இன்னும் நிறைய ஏழை மாணவர்களின்  கல்விக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் லோகநாதனின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. லோகநாதன் இளமையில் வறுமையின்  காரணமாக தான் தவறவிட்ட கல்வியின் வலியை உணர்ந்து, மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற சமூக அக்கறையை தனது இலக்காக  கொண்டுதான் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியை தனது குடும்பத்தினர் தாழ்வாக நினைத்தபோதும் மேற்கொண்டார்.

மற்றவர்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம்தான் முக்கியம், நாம் செய்யும் பணி முக்கியமல்ல என்பதை குடும்பத்துக்கு ஏற்படுத்தி  தன்னம்பிக்கையுடன் போராடி 1,200 மாணவர்களின் கல்விக்காக உதவிய லோகநாதனின் வாழ்க்கை நமக்கு சொல்வது என்னவென்றால், நாம் வாழும்  வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவ வாழவேண்டும்,  வாழும் வாழ்க்கையை அர்த்தமுடையதாக மாற்றவேண்டும் என்பதே ஆகும். அவசியம் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். உழைப்பில் நம்பிக்கையும் நேர்மை உள்ளமும் கொண்டவர்களுக்கு வெற்றி நிச்சயம். அத்துடன் மக்கள்  சமூகத்தின் மீது அன்பும், அக்கறையும் உள்ளவரானால் வெற்றி சர்வ நிச்சயம்.

(புதுவாழ்வு மலரும்)