நீட் தேர்வு தொடரும் சர்ச்சைகள்...



* சிதைக்கப்படும் மாணவர்களின் மருத்துவராகும் கனவு!
* சர்ச்சை


கடந்த 350 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘இந்தியாவின் மருத்துவ தலைநகரம்’ சென்னைதான். அத்தகைய பெருமைமிகு கல்வியாளர்கள் நிறைந்த மண்ணை, மக்களை, மாணவ சமுதாயத்தை, சமநிலையற்ற ஒரு தகுதித் தேர்வை நடத்தி இந்தியாவின் மொத்த 36 (29+7) மாநிலங்களுள் தமிழகம் 35வது இடத்தை அடைந்த மாநிலம் என இழிவுப்படுத்தி காண்பித்துக்கொண்டே நம் வியர்வையில் உருவான மருத்துவக் கல்வியின் கட்டமைப்பை கபளீகரம் செய்கிறது மத்திய அரசு.

இந்தியாவிலேயே முதல் அலோபதி மருத்துவமனையாக தொடங்கப்பட்டு 1835ம்  ஆண்டில் மருத்துவக் கல்லூரியாக உருப்பெற்றதுதான் எம்.எம்.சி. (MMC) எனப்படும் சென்னை மருத்துவக் கல்லூரி. தமிழக மக்களின் உழைப்பால், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுகளின் திட்டங்களால் மருத்துவத்துறை செழித்தோங்கும் இந்த நிலைதான் மத்திய ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியது. மிக நீண்ட கால திட்டமாக இருந்த ‘நீட் தகுதித் தேர்வு’ எனும் சமநிலையற்ற அகில இந்திய தேர்வைத் தமிழக பெரும்பான்மை மாணவர்களின் கல்வித் திட்டத்திற்குள் வராதபோதும் வலுக்கட்டாயமாக திணித்தது.

இத்தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த ஆண்டு அனிதா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். அதேபோல் இப்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரித்துஸ்ரீ , பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா மற்றுமொரு மாணவி மோனிஷா என மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஏறத்தாழ 49 மருத்துவக் கல்லூரிகளுடன் 6,510 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் உள்ள தமிழகத்தில் தமிழக மாணவர்களின் கனவு நம் கண்முன்னே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது... இதுகுறித்து கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டோம்...

முனைவர். ஆர்.ராஜராஜன், கல்வியாளர்.

நீட் தேர்வுகள் தேவையா, இல்லையா என்ற விவாதங்கள் இன்னும் முடிவுறா நிலையில் MBBS., BDS., இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் இத்தேர்வை எழுதியாக வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள். நீட் தேர்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. போதாக்குறைக்கு ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், போன்ற படிப்புகளுக்கும் மாணவர்கள் நீட் வழியாகத்தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. AFMC. (Aumad Force Medical College) CMC (கிருத்துவ மருத்துவக் கல்லூரி) இவற்றிற்கும் நீட் மதிப்பெண்களே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது முன்னரே முடிவாகியுள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் தொடர்ந்து ‘நீட் வேண்டாம்’ என்று குரல் கொடுத்துக்கொண்டுதான் உள்ளனர்.

மாநில அரசும் ‘நீட் வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு, நீட் தேர்வை தடுக்க முயற்சிப்போம்’ என்று அறிக்கை வெளியிட்டுக்கொண்டுதான் உள்ளது. எதையும் கருத்தில்கொள்ளாமல், CBSE (Central Board of Secondary Education) நடத்திய NEET (National Eligibility Entrance Test) National Testing Agency பொறுப்பில் தரப்பட்டு, தேர்வு நடந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன. நீட் தோல்வியின் காரணமாக, கடந்த ஆண்டு ‘அனிதா’வின் மரண அவலம் மனதிலிருந்து அகலும் முன், இந்த ஆண்டு இன்னும் மூன்று பெண்கள் இதே காரணத்திற்காக பலியாகியுள்ளார்கள். இது மிகப்பெரிய அவலம்! மருத்துவப் படிப்புகளுக்குச் செல்ல திறமையுள்ளவர்கள் +2 மதிப்பெண் அடிப்படை என்றாலும் அகில இந்திய நுழைவுத்தேர்வு என்றாலும் எப்படியும் படித்துச் சென்று விடுவார்கள். அவர்கள்தான் நீட் வழியாகவும் செல்கிறார்கள்.

இப்படியிருக்க நீட் எதைச் சிறப்பாகச் செய்தது?

விண்ணப்பித்தது 15,19,375 பேர், 14,10,755 பேர் தேர்வு எழுதி அதில் 7.97 லட்சம் பேர் தேர்ச்சி. அதாவது, 56.5 விழுக்காடு. இதில் பெண்கள் 57.11, ஆண்கள் 55%. இந்தியா முழுமையும் இருக்கின்ற 412 கல்லூரிகளில் இருக்கின்ற இடங்கள் ஏறத்தாழ 52,965. இதில் மெரிட், அதிகக் கட்டணம், மிக அதிகக் கட்டணம் என்ற எல்லா வகையும் அடங்கும். இப்படியிருக்க 7.97 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என்று முடிவை அறிவித்து  50,000 போக எஞ்சிய மாணவர்களுக்கு ஏன் ஆசையை உண்டாக்கி அவர்களுக்கு நிராசையை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வை கானல் நீராக்க வேண்டும்? இருக்கின்ற இடங்களுக்குத் தக்கவாறு இத்தேர்வை நடத்தலாமே!

பாடத்திட்டமும், பள்ளியில் பயிற்றுவிக்கும் முறையும், ஆண்டுத் தேர்வு முறையும் நீட் தேர்வை எழுத மாணவர்களைத் தயார் செய்யவில்லை. எனவே, அதிகக் கட்டணம் கொடுத்து, பயிற்சி மேற்கொண்டு, தேர்வை சந்திக்க வேண்டிய நிலை! இது எப்படி ஏழை, எளிய பாமர மக்களுக்கு ஏற்புடையதாகும். முதலில் அறிவு சார்ந்த கல்வி முறையை தந்துவிட்டு, பின் அறிவைச் சோதிக்க வேண்டும். நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது முதல் காரணம் தரமான மருத்துவர்களை உருவாக்க என்பது.

நீட் போன்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் அதிலிருந்து வருபவர்கள் தரமான டாக்டர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது. அடுத்தது தனியார் கல்லூரிகளில் உள்ள பணக்கொள்ளையைத் தடுக்க பணம் கொடுத்து படிப்பவர்கள் தரமான டாக்டர்கள் ஆக இயலாது என்பது, நீட் அதை தடுத்துள்ளதா? தனியார் கல்லூரிகளிலும், சுயநிதி பல்கலைக்கழகங்களிலும் அதிகக் கட்டணம் என்ற நிலையில்தானே உள்ளது. நீட்டில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றால் போதும். பணம் செலவழித்தால் டாக்டராகிவிடலாம் என்பது இப்பொழுதும் இருக்கத்தானே செய்கிறது. இப்படியிருக்க நீட் இந்த வழியிலும் தோல்வியைத்தானே சந்தித்துள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, மாநில அரசும், நடுவண் அரசும் இதற்கான மாற்று வழியைக் கண்டறிய வேண்டும். முதலில் நீட் மரணங்கள் தொடராமலிருக்க வழிவகை செய்ய வேண்டும்.

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நீட் என்ற நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் எய்ம்ஸ், ஜிப்மர் தவிர நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு சட்டத்திருத்தம் உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு முதல் ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதா, யுனானி, சித்தா, யோகா உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த நீட் நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், தமிழ்மொழியில் படிக்கும் மாணவர்கள் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே, நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிரந்தர விலக்கு வேண்டுமென போராட்டங்கள் வலுத்தன. இப்போராட்டங்களின் மூலம் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாக தமிழக அரசு நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்காக இரண்டு மசோதாக்களை தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மத்திய அரசின் மூலம் அனுப்பியது. மத்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரவில்லை. இதனால் தமிழக மாணவர்கள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

நீட் தேர்வு தோல்வியால் இதுவரை அனிதா உள்பட பல மாணவிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவிகளுடைய இறப்பிற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முறையாக நடத்தாததன் காரணமாக இந்த ஆண்டும் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவில்லை. இதனால் இந்த ஆண்டும் அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவது கடினம்தான். 2017ஆம் ஆண்டு இரண்டு அரசுப் பள்ளி மாணவர்களும், 2018ஆம் ஆண்டு 4 அரசுப் பள்ளி மாணவர்களும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சென்ற ஆண்டைவிட அதிக மதிப்பெண் பெற்றிருப்பதால் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருசிலர்கூட அரசு மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண அரசுப் பள்ளி மாணவர்களுக்கென மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தி தரமான கல்வியை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு நடத்தும் நீட் பயிற்சி மையங்களை தரமுள்ளதாக மாற்றிட வேண்டும்.

- தோ.திருத்துவராஜ்