ISRO-வில் இளநிலைப் பட்டம் படிக்க அறிய வாய்ப்பு



* அட்மிஷன்

விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை இந்திய மாணவர்களுக்கு தரமான வகையில் வழங்கும் பொருட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் நெடுமாங்காட்டில் 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது Indian Institute of Space Sciences and Technology (IIST). இஸ்ரோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (Indian Space Research Organization, ISRO) ஆரம்பிக்கப்பட்ட இக்கல்விநிறுவனம் மத்திய அரசின் விண்வெளித்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் செயல்பட்டுவருகிறது.

விண்வெளித்துறை சார்ந்த படிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ளும் ஆசியாவின் முதல் கல்விநிறுவனம் என்ற பெருமை இக்கல்வி நிறுவனத்திற்கு உண்டு. அரசு உதவி பெறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தோடு விண்வெளி அறிவியல் சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்புகளை வழங்கிவருகிறது. இக்கல்விநிறுவனத்தில் 2019-ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலைப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

நான்கு வருட கால அளவிலான B.Tech in Aerospace Engineering , B.Tech in Electronics & Communication (With Specialization in Avionics) மற்றும் ஐந்து வருட கால அளவிலான இளங்கலை, முதுகலை ஒருங்கிணைவு படிப்பான Dual Degree ( B.Tech + Master of Science / Master of Technology) போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி

விருப்பமுள்ள மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் + 2 படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாகத் தேர்வுசெய்து பொதுப்பிரிவு மாணவர்கள் அப்பாடங்களில் 75% மற்றும் எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் 65% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் இக்கல்விநிறுவனத்தில் சேர்ந்து படிக்க நினைப்பவர்கள் JEE (Advanced) - 2019 நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். அரசு விதிகளின்படி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அனுசரிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

+2-வில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் JEE (Advanced) - 2019 நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

வயது வரம்பு

* விண்ணப்பிக்க விரும்பும் பொதுப் பிரிவினர் 1.10.1994-ல் பிறந்திருக்க வேண்டும்.
* எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.iist.ac.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் 22 மே 2019 அன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம். மேலதிக தகவல்களுக்கு www.iist.ac.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்!

- துருவா