நியூஸ் கார்னர்



* செய்தித் தொகுப்பு

பாரதியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை!

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நேரடி முதுநிலை, இளநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு இல்லாத படிப்புகள்: எம்.எஸ்சி., படிப்புகளாக, மேத்தமேட்டிக்ஸ் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டேட்டா அனலிட்டிக்ஸ், என்விரான்மென்டல் சயின்சஸ், எக்னாமெட்ரிக்ஸ், இ-லேர்னிங் டெக்னாலஜி, அப்ளைடு சைக்காலஜி, டெக்ஸ்டைல்ஸ் அண்ட் அப்பேரல் டிசைன், எம்.ஏ., படிப்புகளாக, தமிழ், லிங்குவிஸ்டிக்ஸ், எக்கனாமிக்ஸ், வரலாறு, சோஷியாலஜி, உமன் ஸ்டடீஸ், கேரியர் கைடன்ஸ் மற்றும் எம்.காம்., எம்.எட்., மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க், மாஸ்டர் ஆஃப் லைப்ரரி இன்ஃபர்மேஷன் சயின்சஸ், மாஸ்டர் ஆஃப் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், பல்வேறு முதுநிலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய படிப்புகள்: எம்.எஸ்சி., படிப்புகளாக, மேத்தமேட்டிக்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, இண்டஸ்டிரியல் பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, எம்.ஏ.,-இங்கிலிஷ் லிட்ரெச்சர், பி.பி.எட்., எம்.பி.எட்., எம்.சி.ஏ., உட்பட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: ஒவ்வொரு படிப்பிற்கும் ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.5.2019

மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in


அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளும் முறையான அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதன்படி தமிழகத்தில் 800-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் முறையாக அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகள் வரும் மே 31-ம் தேதிக்குள் அங்கீகாரம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அங்கீ காரம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில், ‘ஒரு பள்ளி முறையான அங்கீகாரம் பெறாவிட்டால், அங்கு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தகுதி இல்லாதவர்களாக அறிவிக்கப்படுவார்கள். எனவே, இப்போது 10, 12-ம்வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு முறையாக அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மே31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது’என்று கூறப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கான சேகரிப்பு அறிவுத் திறன் வினாடி வினா போட்டி!

சேகரிப்புக் கலை என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல் ஆகும். அவற்றைக் காட்சிக்கு வைத்தல் அதன் வரலாற்றினை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைத்து பழங்காலப் பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கங்களுக்காக ஜூன் 14, 15 & 16 தேதிகளில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசா ஹாலில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

பழமைவாய்ந்த பொருட்களின் மேல் ஆர்வம் கொண்டவர்கள், தனிப்பட்டவர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் போன்றவர்களின் சேகரிப்பு களைக் கொண்டு சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. நுண்கலைகள், பயன்படு கலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு, பணத்தாள்கள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியாக சேகரிப்பாளர்கள் காட்சிப்படுத்துவார்கள்.

இதன் தொன்மையான வரலாறு சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகள் நாட்டுப்புற வாழ்விட முறைகள்,தொழில்நுட்ப வரலாறு, நாட்டுப்புற மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வரலாறு போன்றவற்றைக் காட்டும் விஷயங்கள் இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சேகரிப்பு கலை அறிவுத் திறன் வினாடி வினா போட்டி திருச்சியில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

போட்டியில் தபால் தலைகள், நாணயங்கள், பணத்தாள்கள், பழங்காலப் பொருட்கள் குறித்த வினா கேட்கப்படும். சிறப்பாக விடையளிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 98424 12247 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


ஜூன் 3-ல் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு!

தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அரசின் சார்பில், சம்பளம் தரப்படுகிறது. ஆனால், அரசின் செலவுக்கு ஏற்  ற வகையில், தேர்ச்சி விகிதம் இல்லை என, கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் வருகை மற்றும் அவர்களின் பணி நேரத்தை உறுதி செய்யும் வகையில், புதிய திட்டங்களை பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு தாமதமாக வருவதை தவிர்க்கும் வகையில், பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அமலுக்கு வரவுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவை நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.