அண்ணாமலைப் பல்கலை வழங்கும் வேளாண் பட்டப்படிப்புகள்!



* அட்மிஷன்

மாண்டேக்-சேம்ஸ்போர்ட் சீர்திருத்தத்திற்கு பிறகு தொழிலதிபர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் 1929ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இது 2013-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் வேளாண்மை B.Sc., (Hons.) in Agriculture, இளம் அறிவியல் வேளாண்மை ((B.Sc., (Hons.) in Agriculture (Self Supporting), இளநிலை அறிவியல் தோட்டக்கலை (B.Sc., (Hons.) in Horticulture), பட்டயப்படிப்பு வேளாண்மை/தோட்டக்கலை, இளநிலை மருந்தாக்கியல் பட்டப்படிப்பு (B.Pharm.), இளநிலை அறிவியல் செவிலியர் (B.Sc., Nursing), இளநிலை இயற்பியல் சிகிச்சை, இளநிலை தொழில்முறை சிகிச்சை (BOT), இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc.) மற்றும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வே.முருகேசன் தொடங்கி வைத்தார்.

இணையவழி பதிவு நடைமுறையை தொடங்கிவைத்து பேசிய துணைவேந்தர், ‘‘மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும், தமிழக அரசின் மேல்நிலைப் படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இணையவழி பதிவுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணைய தள முகவரியை தொடர்புகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு auadmissions2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்ணையும் (04144-238349) தொடர்பு கொள்ளலாம். இதற்கான சிறப்பு சேவை மையம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.5.2019.