படைப்புத் திறனே மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தைத் தரும்!



டிஜிட்டல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான ஐகேட் டிசைன் & மீடியா கல்லூரி நடத்திய பதினோராம் கிராஜுவேட் கண்காட்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்
பிரஸ் அவென்யூவில் சமீபத்தில் நடைபெற்றது. படைப்புகளை பார்வையிட்ட தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உப தலைவரும், சந்திராயன் புகழ் விஞ்ஞானியும் இஸ்ரோ முன்னாள் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களிடம் அதன் சிறப்புகள் குறித்து கேட்டறிந்ததோடு அவர்களுக்கு சில கருத்துகளையும் கூறினார்.

மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ‘‘இந்த உலகத்தை வெற்றிகொள்ள படைப்பாற்றல் ஒரு திறவுகோலாக உள்ளது. மேலும் படைப்பாற்றல் மிகுந்த மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எனக்குள்ளும் ஒரு மல்டிமீடியா மனிதன் உள்ளான். நான் சந்திராயன் ப்ராஜெக்ட்டின் தலைவராக இருந்தபோது, ப்ராஜெக்ட்டை செயல்படுத்தும் முன்னர், அதன் செயல்முறைகளை முதலில் ஒரு 20 நிமிட வீடியோவாக செய்வோம். அதனை டாக்டர் கலாம் முன்னிலையில் உலக விஞ்ஞானிகளுக்கு காண்பித்து விளக்குவோம்.

அதன்மூலமே, இந்த ப்ராஜெக்ட்டை செய்து முடித்து நமது மூவர்ண இந்திய கொடியை சந்திரனில் வெற்றிகரமாக நிலைநாட்ட முடிந்தது. ஓராண்டில், தமிழ்நாட்டில் மட்டும் உருவாக்கப்படும் எஞ்சினியர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா உருவாக்கும் எஞ்சினியர்களைவிட அதிகமாக உள்ளது. இந்நிலையில்,  தொழில்நுட்பம் மட்டுமின்றி, படைப்பாற்றல் சிந்தனையும், படைப்புத் திறன் உருவாக்கமுமே இன்றைய இளைஞர்களை அவர்கள் விரும்பிய பணியில் ஓர் உயரிய இடத்திற்கு கொண்டு செல்லும்.

இந்தியா அறிவியல், தொழில்துட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உலகளவில் முதல்நிலையை அடையும் வகையில் வேகமாக முன்னேறி வருகிறது. மாணவர்கள் எந்த துறையினைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.இளநிலை பட்டம் பயிலும் இறுதியாண்டு மாணவர்களின் வேறுபட்ட படைப்புக் கோணங்களில் உருவாக்கப்பட்ட அனிமேஷன், கேம் டிசைன், போட்டோகிராபி, விஷுவல் எஃபெக்ட்ஸ், கேம் ப்ரோக்ராமிங், மல்ட்டிமீடியா, கிராபிக் டிசைன், விஷுவல் மீடியா, யுஐ டிசைன் மற்றும் இன்டீரியர் டிசைன் போன்ற துறைகளில், 200க்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களை கண்டுகளித்து பாராட்டினார்.

- திருவரசு