ஆசியப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தபிதா!



* சாதனை

ஹாங்காங்கில் 3-வது ஆசிய இளைஞர் தடகள விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த தபிதா 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பந்தய தூரத்தை 13.86 வினாடிகளில் கடந்த அவர் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்தார். ஜப்பானை சேர்ந்த  மயூகோ 2வது இடத்தையும், சீனாவை சேர்ந்த சின்யூ 3வது இடத்தையும் பிடித்தனர். நீளம் தாண்டும் போட்டியிலும் 5.86 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். சீனாவின் ஹுவா ஷிஹு (5.76 மீ.) வெள்ளியும், இந்திய வீராங்கனை அம்பிகா நர்ஸாரி (5.73 மீ.) வெண்கலமும் வென்றனர்.

இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தபிதா,  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 படித்துவருகிறார். இவரது தந்தை பிலிப் மகேஷ்வரன் ஆட்டோ டிரைவர். தாய் மேரி கோகிலா இல்லத்தரசி. ரூபா ரேச்சல், ஜெபசெல்வி என்ற 2 அக்கா, சாமுவேல் என்ற ஒரு தம்பியும் இவருடன் பிறந்தவர்கள்.

இதற்கு முன்பு மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் மாணவி பி.எம்.தபிதா 100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப் ஆகிய பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நீளம் தாண்டுதலில் 5.90 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையும் படைத்துள்ளார். தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்’ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி பெற்றுவருகிறார்.

ஆசியப் போட்டியில் 2 தங்கப்பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவியான தபிதா விடம் பேசியபோது ‘‘சிறுவயதிலிருந்தே ஏதாவது ஒரு துறையில் நாம் சாதிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்துவந்தது. இதனை உணர்ந்துகொண்ட என்னுடைய பெற்றோர் டான்ஸ், டிராயிங் என பல பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விட்டார்கள். ஆனால், எனக்கு அதிலெல்லாம் ஈடுபாடு ஏற்படவில்லை. ஒரு நாள் செய்தித் தாளில் வந்த பள்ளிகளில் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றவர்களின் போட்டோக்களை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய அம்மா ‘‘இதில் சேர்த்துவிட்டால் எப்படியிருக்கும்?’’

என அப்பாவிடம் கேட்டார். அதன்பிறகு அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஓட்டப்பந்தயத்துக்கு பயிற்சியளிக்கும் இடம் பற்றி விசாரிக்க தொடங்கினர். பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்’ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஆர்வமுள்ளவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்துகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. ஆனால், எங்கள் வீடு விருகம்பாக்கத்தில் உள்ளது, செயின்ட் ஜோசப்’ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பிராட்வேயில் உள்ளது.

பேருந்தில் அங்கு செல்ல வேண்டுமானால் இரண்டு மணி நேரமாவது ஆகும். ஆனாலும், சேர்ந்தேன், ஒருசில நாட்கள் பயிற்சிக்குச் சென்று வருவதில் சிரமம் இருந்தாலும் விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தால் தவறாமல் சென்றுவந்தேன்.பெரும்பாலும் என் அம்மாதான் அழைத்துச் செல்வார். ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர்ந்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்” என்றார் தபிதா.

அகாடமியில் தனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி மற்றும் உத்வேகத்தால் கிடைத்த வெற்றிகளைப் பற்றி கூறும்போது, ‘‘எனக்கு பயிற்சியாளராக இருப்பவர் நாகராஜ் சார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதற்கான உடற்பயிற்சிகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்தார். நன்றாக பயிற்சி எடுத்ததால் 8ஆம் வகுப்பிலிருந்தே 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் பதக்கங்கள் பெற ஆரம்பித்துவிட்டேன்.

9, 10, 11 ஆகிய வகுப்புகள் என இதுவரையில் கலந்துகொள்ளும் எல்லா போட்டிகளிலும் பல பதக்கங்களைப் பெற்றுக்கொண்டே வருகிறேன். 16-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 14.14 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றேன். இதனையடுத்தே ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றேன்’’ என்று மிகுந்த மன மகிழ்ச்சியோடு தெரிவித்தார் தபிதா.

விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைக்க ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்கள் பற்றியும் குறிப்பிடுகையில், ‘‘விளையாட்டுப் போட்டிகளில் எனது வெற்றிகளுக்கு  மிக முக்கிய காரணமாக இருந்தவர் என்று சொல்ல வேண்டுமென்றால், செயின்ட் ஜோசப்’ஸ் அகாடமியின் நிறுவனர் பாபு மனோகரன் சார்தான் முதலில் நினைவுக்கு வருவார். மனதளவில் என்னை ஊக்கப்படுத்துவதோடு உடலளவில் உறுதி பெற தினமும் முட்டை, சத்துமாவுக் கஞ்சி என வழங்க ஏற்பாடு செய்தார்.

திறமையுள்ளவர்களை அதிகமாக ஊக்கப்படுத்துவார் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர் செய்த அந்த உதவிகளே நான் போட்டிகளில் சாதிக்க பெரிய அளவில் உதவியாக அமைந்தது. என்னுடைய பெற்றோர் என்னை பயிற்சிக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வருவதுவரை என் மீது மிகுந்த அக்கறை காட்டுவார்கள். அப்பா ஆட்டோ ஓட்டினாலும், சவாரியை விட்டுவிட்டு என்னை அழைத்துச் செல்வார். அம்மாவும் சிரமம் பாராமல் அழைத்துச் செல்வார்.

நான் படிக்கும் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எனக்கு முழு ஆதரவு அளித்துவருகிறது. பிரின்சிபால் சசி ஸ்வரன்சிங் சார் என்னை விளையாட்டில் ஊக்கப்படுத்த தனியாக ஆசிரியரைக் கொண்டு பாடம் நடத்த ஏற்பாடு செய்வார். பயிற்சியில் கலந்துகொள்ளும் சமயத்தில் பள்ளிக்கு போக முடியாது, அதுபோன்ற சமயங்களில் ஆசிரியரை நியமித்து வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களைக் கற்றுத்தரச் செய்வார். பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் பன்னீர்செல்வமும் ஊக்கப்படுத்துவார். ஆசிரியர்கள் மட்டுமல்ல எனது தோழிகளும் என் படிப்புக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். நான் பள்ளி வராத நாட்களில் நடத்தும் பாடங்களை எனக்காக எழுதித்தருவார்கள்.

இப்படி பலரிடமிருத்தும் ஆதரவு, உதவிகள் கிடைத்து நான் ஆசியஅளவில் 2 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ள சூழலிலும் இன்றுவரை தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை என்பது வருத்தம்தான். சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய அளவிலெல்லாம் தங்கப்பதக்கம் வென்றால் அந்த விளையாட்டு வீரர்களை சிறப்பித்த நிகழ்வுகளும் உண்டு.

அதேசமயம், அரசின் உதவிகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சர்வதேச போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்று உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பேசச் செய்யும் வகையிலேயே என் அடுத்தகட்ட முயற்சிகள் இருக்கும்’’ என்று ஆதங்கத்தோடு தன் குறிக்கோளையும் தெரிவித்தார் தபிதா. ஆசிய அளவிலான வெற்றி குறித்து தபிதாவின் பயிற்சியாளர் நாகராஜன் கூறுகையில், ‘‘தபிதா ஆறாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பயிற்சி முகாமில் சேர்ந்தார். போட்டி என்று வந்துவிட்டால் அது மட்டுமேதான் அவள் மனதில் நிற்கும். எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதிலேயே முழுக் கவனம் செலுத்துவார்.

யார் என்ன சொன்னாலும் தன் லட்சியத்திலேயே குறியாக இருப்பார்.  கடந்த 6 ஆண்டுகளாக ஆர்வமாகவும், தீவிரமாகவும் பயிற்சி பெற்று வருகிறார். இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி உள்ளார்’’ என்றார். பொருளாதார நிலையையும் கடந்து, தன்னார்வத்தின் காரணமாக தன்னையே அர்ப்பணித்து தங்கப்பதக்கங்களை வென்று தாய்நாட்டை தலைநிமிரச் செய்த தாரகை தபிதா போன்றவர்களுக்கு அரசு ஊக்கமளிக்காமல் போனாலும், நம் வாழ்த்துகள் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கட்டும்!

- தோ.திருத்துவராஜ்