அன்று பாத்திரக்கடை ஊழியர்.. வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர்



* வெற்றிக் கதை
* முயற்சியால் வென்றவர்கள்  


முன்னேறியவர்களைக் கண்டு முறைத்துப் பார்க்காதே அவர்கள் மு(வி)ழித்திருந்த இரவுகளை நினைத்துப் பார்- என்பார்கள் கற்றறிந்த சான்றோர்கள். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், அவர்கள், பெரிய பலசாலிகளாகவோ, பாக்கியசாலிகளாகவோ இருந்ததில்லை. தம் பலவீனங்களைப் புறந்தள்ளிவிட்டு தம்மிடம் இருந்த திறமைகளை அடையாளம் கண்டு முயற்சியால் முன்னேறியவர்களாகத்தான் இருப்பார்கள். தன்னம்பிக்கை ஒன்றுதான் அவர்களின் முதலீடாக இருந்திருக்கும். அப்படி தன்னம்பிக்கையால் முன்னேறிய சென்னை நங்கநல்லூர் பாலசுப்பிரமணியன் மெட்டல்ஸ் நிறுவன அதிபர் ரகுபதி தன் வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘பொதுவாகவே ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் அவர்கள் சார்ந்த சமுதாயமும் இருக்கும். அது பொருளாதார உதவி செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக பொருளாதாரத்தையும் மிஞ்சி நாம் உழைக்கப் பிறந்தவர்கள், நம்மில் அனைவரும் வியாபாரம் செய்ய பிறந்தவர்கள் என்ற உணர்வை ஊட்டக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வியாபாரச் சமுதாயத்தில் பிறந்ததாலோ என்னவோ எங்கள் ஊர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே சுயமாக ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து தொழிலதிபராகிவிட வேண்டும் என்ற அந்த எண்ணம் எனக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஒரு குக்கிராமம்தான் மெய்யன் பிறப்பு. எங்களின் தந்தை ஆண்டிநாடார், தாய் ரத்தினாவதிக்கு நாங்கள் நான்கு குழந்தைகள். கணபதி, சபாபதி என்ற இரண்டு அண்ணன்களுடன், தங்கை சித்ராவதி. விவசாயக் குடும்பம் என்பதால் நிலபுலன்கள் உண்டு. எங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள நகரப் பகுதியான உடன்குடி கிறிஸ்டியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தேன்.

தொழிலதிபராக வேண்டும் என்ற கனவு என் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்ததால் நானும் எனது அண்ணனும் 1980ஆம் ஆண்டில் சென்னை வந்தோம். வியாபாரம் குறித்த நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தியாகராயநகர் அருகே பாண்டி பஜாரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம் கிடைத்தது.’’ என்று பள்ளிப் பருவம் முதல் சென்னைக்கு வந்ததற்கான காரணத்தையும் மனம் திறந்து பேசினார் ரகுபதி.

மேலும் தொடர்ந்த அவர்,‘‘1980 தொடங்கி 1990ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டம் வியாபாரம் மற்றும் தொழில் தொடங்குவதற்கானதாக இருந்தது என்றே சொல்லலாம். நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த பலரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தங்கள் வியாபாரத் தொழிலை தொடங்கிக் கொண்டிருந்தனர். நானும், எனது அண்ணன் கணபதியும் சென்னை நங்கநல்லூரை தேர்வு செய்தோம். மக்கள் கூடும் பகுதியான சிவன் கோயில் அருகே இடத்்தைத் தேர்வு செய்து 10க்கு 10 சதுர அடியில் சிறு கடையைத் தொடங்கினோம். அலுமினியம், பித்தளை, சில்வர் பாத்திரக்கடை சிறிய அளவில் தொடங்கினோம்.

பாத்திரக்கடையில் அண்ணன் கணபதி வியாபாரத்தைக் கவனித்துக்கொள்வார். நான் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, அடையாறு என பல பகுதி களுக்கும் சைக்கிளில் சென்று கடைகளில் ஆர்டர் எடுத்துவருவேன். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு நாற்பது ஐம்பது கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்றுவருவேன். நானும் என் அண்ணனும் கடுமையாக உழைத்தோம். அதில் உண்மையும், நேர்மையும் இருந்தது. அந்த உண்மைக்கும் நேர்மைக்கும் பரிசாக கையில் வருமானமும் அதிகரிக்க ஆரம்பித்தது.’’ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

‘‘எந்த ஒரு தொழிலை தொடங்க வேண்டுமானாலும் அதற்கு முன் திட்டமிடல் என்பது வேண்டும். அந்தத் தொழிலுக்கான முதலீடு எவ்வளவு, நம்மிடம் எவ்வளவு உள்ளது, வந்துகொண்டிருக்கும் வருமானத்தில் எவ்வளவு சேமித்தால் அந்தத் தொகையை நம்மால் சேர்க்க முடியும் என்பதையெல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். கடன் வாங்கி ஒரு தொழிலை ஆரம்பித்தால் அவர்களால் கடைசிவரை கடைத்தேறுவது கஷ்டம்.

ஏனெனில், எந்த ஒரு தொழிலிலும் வருமானம் வர ஒருசில மாதங்கள் ஆகும். அதுவரை நாம் எவ்வாறு நிர்வகிக்கப் போகிறோம் என்பதையெல்லாம் கணக்கிட வேண்டும். அப்படித்தான், இவ்வளவு பெரிய கடையைக் கட்டுவதற்கு முன்பே சிறிய அளவில் செய்துகொண்டிருந்த வியாபாரத்தில் சேமிக்க ஆரம்பித்தோம். சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் சிறிய அளவில் நாம் சேர்க்கும் பணம் பெரிய ஒரு முதலீட்டுக்கான அடித்தளமாக இருக்கும்.

சேமித்த பணம் மற்றும் சிலரின் உதவியோடு ஏற்பாடு செய்த பணத்தைக் கொண்டு எந்த இடத்தில் வாடகைக்கு சிறியதாக கடை எடுத்து நடத்தினோமோ அதே இடத்தில் கடைக்கு நிலம் வாங்கினோம். அதே பகுதியில் வசிப்பதற்காக வீடும் வாங்கினோம். 1991ஆம் ஆண்டு இரண்டு அடுக்குகளில் கடையைக் கட்டிமுடித்து அதற்கு பாலசுப்பிரமணியன் மெட்டல்ஸ் என பெயர் சூட்டினோம். எங்களது அப்பா ஆண்டிநாடாரை வைத்து கடையைத் திறந்தோம். பெற்றோரை பெருமைப்படுத்துவதில்தான் பிள்ளைகளின் மகிழ்ச்சி இருக்கிறது. அந்த வகையில் அதையும் நாங்கள் நிறைவு செய்தோம்’’ என்று பெருமிதத்தோடு பேசினார் ரகுபதி.

‘‘அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது, தங்கைக்கும் திருமணம் முடித்து வைத்தோம். பொதுவாகவே கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். அதுபோன்று நெல்லை, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்து தொழில் தொடங்கியவர்களைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால் அவர்கள் அண்ணன் தம்பிகளாகவே சேர்ந்து தொழில்களை ஆரம்பித்திருப்பது தெரியவரும். அந்த வகையில் இன்றைக்கும் நானும் கணபதி அண்ணனும் சேர்ந்தே தொழிலை நடத்திவருகிறோம்.

நாம் வாழும் வீட்டிற்கு தேவையான அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் வைத்துள்ளோம். பிரத்யேகமாக பித்தளை, வெங்கலம், சில்வர், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கேஸ் பர்னர், மெட்டல் வார்டுரோப், டிவி, வாஷிங் மெஷின் அண்ட் ஃபர்னிச்சர்ஸ், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், மாணவ -  மாணவிகளுக்கான ஸ்டேஷனரி பொருட்கள் என அனைத்துப் பொருட்களும் வைத்துள்ளோம். ஜவுளிப் பொருட்களைத் தவிர்த்து அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வாங்கும் தகுதிக்கேற்ப குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்வதால் எப்போதுமே வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமிருக்கும். நங்கநல்லூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதும் அதன் சிறப்பு எனலாம்.

எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எங்கள் ஊழியர்கள் பேசும்விதம் ஒரு நட்புணர்வை ஏற்படுத்திவிடும் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இனிமையாகப் பேசக்கூடியவர்கள். அதுவும் எங்கள் வெற்றிக்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம். நாம் ஒரு தொழிலைத் தொடங்கும் முன் நன்கு திட்டமிட வேண்டும். அதன் பிறகு பயிற்சி எடுக்க வேண்டும். கற்ற தொழிலைக் கடைத்தேற்ற அதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இடையில் வரும் தோல்விகளைக் கண்டு அஞ்சி ஓடிவிடக்கூடாது. நம்மால் மலையைக்கூட நகர்த்த முடியும் என்ற நம்பிகையை வைத்தால் நிச்சயம் அதில் வெற்றிபெற்றுவிட முடியும்’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார் ரகுபதி.

- தோ.திருத்துவராஜ்