போட்டோகிராபியிலும் அசத்தலாம்!



* வழிகாட்டல்  
* வேலைவாய்ப்பு பெற என்ன படிக்கலாம் ?

அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வழங்கப்பட்ட கல்வி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதற்கானதாக ஆகிவிட்டது. அதனால்தான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போதே +1-ல் எந்தப் பாடப்பிரிவை தேர்வு செய்வது என்ற தேடல் மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் பற்றிக்கொள்கிறது. அது +2 பொதுத் தேர்வு முடித்ததும் உயர்கல்வியிலும் தொடர்கிறது.

அந்தத் தேடலுக்கான வழிகாட்டலாகவே இந்தப் பகுதியில் சில தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் குறித்து கூறிவருகிறோம். அந்த உயர்கல்வி நம் விருப்பத்துக்கு, திறமைக்கு, பொருளாதார வசதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எதிர்காலத்தை மனதில் வைத்து வேலைவாய்ப்பிற்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். அவ்வாறான படிப்புகள் பற்றியே இப்பகுதியில் கூறிவருகிறோம்.

கடந்த இதழில் யுஐ டிசைன் மற்றும் டெவலப்மென்ட் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அப்படிப்புக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை விரிவாக கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப் பகுதியில் டிசைன் & மீடியா கல்வித் துறையில் தொலைநோக்கு பார்வைகொண்ட கல்வியாளரும், ICAT, IMAGE & IMAGE MINDS நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருமான க.குமார் போட்டோகிராபி (புகைப்படக்கலை (அ) நிழற்படக்கலை) படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கொடுக்கும் தகவல்களை இனி பார்ப்போம்…

படைப்புக் கண்ணோட்டத்தோடு எந்த விஷயங்களையும் பார்ப்பது, எந்த ஒரு கருத்தையோ அல்லது உணர்ச்சியையோ காட்சிப்படுத்தி வெளிக்கொணருவது அல்லது புகைப்படம் மூலம் அழகுபடுத்துவது புகைப்படக்கலை. செய்திகளுக்கோ அல்லது விளம்பரங்களுக்கோ தேவைப்படும் உள்ளடக்கமான புகைப்படங்களை விற்று லாபம் சம்பாதிப்பது போன்ற திறன்களை வளர்த்துக்கொள்வது தொழில்முறை புகைப்படக்கலையாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், புகைப்படக் கலைஞர் வேலை என்பது ஒரு சிறந்த தேர்வாக இருந்ததில்லை, ஏனெனில் நம்மில் அநேக நபர்களுக்கு தெரிந்தது எல்லாம் திருமணத்தில் புகைப்படம் எடுப்பவர்கள் மட்டும்தான். ஆனால், இன்றைய நிலைமையே வேறு. புகைப்படத்துறை இன்று எல்லாத் துறைகளிலும் தடம் பதித்து, பரந்து, விரிந்து, தவிர்க்க முடியாத ஒரு மேன்மையான இடத்தைப் பெற்றுள்ளது.

ஆடை அலங்காரத்திற்கான வளர்ந்து வரும் முக்கியத்துவம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் இந்தியாவின் ஆதிக்கம், நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்த செலவிடும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் போன்ற பல காரணங்களால் புகைப்படக்கலையானது ஒரு லாபகரமான, மதிப்பு மிக்க தொழிலாக மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது.

போட்டோகிராபி படிப்புகள்


உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள போட்டோகிராபி படிப்புகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். புகைப்படக் கருவி வைத்திருப்பதனால் மட்டும் ஒருவர் சிறந்த புகைப்படக் கலைஞராகிவிட முடியாது. ஒன்றை படம் பிடிப்பதற்கும், படம் பிடிப்பதன் மூலம் ஒரு கருத்தை உருவாக்குவதற்கும் உள்ள வித்தியாசமே சிறந்த புகைப்படக்
கலைஞரை உருவாக்கும். அதாவது, புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள உணர்ச்சிகளை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ளுமாறு படம்பிடித்திருக்க வேண்டும். மேலும் புகைப்
படத்தில் காட்டப்பட்டுள்ள அழகினை ஆராதிக்கும் அனுபவத்தை பார்வையாளருக்கு கொடுக்கும் வகையில் படம்பிடிக்க வேண்டும்.

கலை, அறிவியல், புகைப்படக்கருவிகள் மற்றும் கணினி மென்பொருள் போன்றவற்றின் அற்புதமான கலவையில் உருவாக்கப்படும் புகைப்படமே ஒரு சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும். ஒரு சிறந்த புகைப்படத்தை கொடுப்பது மட்டும் ஒரு புகைப்படக் கலைஞரின் வேலையல்ல, புகைப்படத் தொழில் மற்றும் தொழில்முறை செயல்பாடுகள் போன்றவற்றில் முதன்மையான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் கற்றுத் தேர்வதற்கு நிச்சயமான மற்றும் இலகுவான வழி, தொழில்நுட்பப் பட்டக் கல்வியினை பயில்வதே ஆகும். இத்துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு, அதற்கான சரியான வழி, புகைப்படக்கலைப் பட்டம் பயில்வதேயாகும்.

எதிர்காலம்

இந்தியாவில் புகைப்படத் தொழில் கலைஞர்களின் ஆரம்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் தொடங்குகிறது. திருமண புகைப்படக் கலைஞர்கள் தங்களுக்கு கிடைத்த சில திருமண வாய்ப்புகளிலேயே பல லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறார்கள். மேலும் ஆடையலங்கார புகைப்பட வல்லுநர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 15,000 முதல் 50,000 வரை வருமானம் பெறுகிறார்கள்.

ராயல் கரீபியன், செலிப்ரிட்டி, நார்வீஜியன் மற்றும் குனார்டு போன்ற பயணியர் கப்பல்களில் புகைப்படத்திற்கென தனியாக ஒரு துறையே உள்ளது. மேலும், இதில் ஜூனியர் போட்டோகிராபர்ஸ், போட்டோகிராபர்ஸ், அசிஸ்டென்ட் போட்டோ மேனேஜர்ஸ் மற்றும் போட்டோ மேனேஜர்ஸ் போன்ற பலவித பதவிகள் உள்ளன. ஆடையலங்கார, விளம்பர, மின் வணிக, பத்திரிகைத் துறைகளின் பிரபலமான நிறுவனங்களான அமேசான், நேஷனல் ஜியோகிராபிக், கெனான், அர்பன் அவுட்ஃபிட்டர்ஸ்  போன்றவற்றில் திறமையான புகைப்படக் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் முறையான பட்டம் பெற்றுள்ள புகைப்படக் கலைஞர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.

வேலைவாய்ப்புகள்

இத்துறையில் படிக்க வேண்டுமானால் B.Sc., Photography (Eligibility: +2) படிக்கலாம். முறையாக படித்து பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், க்ரூயிஸ் ஷிப் போட்டோகிராபி, மெடிக்கல் போட்டோகிராபி, போட்டோ மைக்ரோகிராபி, அஸ்ட்ரோ போட்டோகிராபி, டைம் லேப்ஸ் போட்டோகிராபி, ப்ராடெக்ட் போட்டோகிராபி, ஸ்டாக் போட்டோகிராபி, போட்டோ ஜர்னலிஸம், ஹை ஸ்பீடு போட்டோகிராபி, அண்டர் வாட்டர் போட்டோகிராபி, ஃபோரென்ஸிக் போட்டோகிராபி, வைல்ட் லைஃப் போட்டோகிராபி, நேச்சர் போட்டோகிராபி, ஃபேஷன் போட்டோகிராபி, கிளாமர் போட்டோகிராபி, ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி, வார் போட்டோகிராபி, ரியல் எஸ்டேட் போட்டோகிராபி, ஸ்ட்ரீட் போட்டோகிராபி, ஃபைன் ஆர்ட் போட்டோகிராபி, வெட்டிங் போட்டோகிராபி, ஈவென்ட் போட்டோகிராபி, டிராவல் போட்டோகிராபி, லாண்ட்ஸ்கேப் போட்டோகிராபி, ஸ்டில் போட்டோகிராபி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் ஏன் இத்துறைப் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்?


புகைப்படக் கலைஞரின் வாழ்க்கை முறையானது. மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் மற்றும் பரபரப்பானதாகவும் அவர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைப் பாதையைப் பொறுத்தே அமைகிறது. பின்வரும் காரணங்களால் இத்தொழில் மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றம் பெறுகிறது.

* உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு
* பல்வேறு விதமான கலாசாரங்கள் மற்றும் வரலாற்றினை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு
* திறமையான பயிற்சி கொடுக்கும் நிச்சய புகழ்
* அதிக நிதிச் சுதந்திரம்
* உழைப்புக்கேற்ற அங்கீகாரம்
* ஆடம்பர வாழ்க்கைக்கான சிறந்த வேலை
* மிக உயர்ந்த படைப்புகளை உருவாக்கும் ஆத்ம திருப்தி

கட்டுப்பாடுகளைக் கடந்து சுதந்திரமாக, மனதிற்கு பிடித்த படைப்புகளை உருவாக்க நினைக்கும் ஆர்வலர்களுக்கு இத்துறைப் படிப்பு ஒரு வரப்பிரசாதமே!
மேலும் விவரம் வேண்டுவோர், www.icat.ac.in இணையதளம் மூலமாகவும், 95001 28555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அடுத்த அத்தியாயத்தில் Multimedia படிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.

- தோ.திருத்துவராஜ்