தனித்திறமை மீது ஆர்வமும் விருப்பமும் இருக்க வேண்டும்!



இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்-6

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!!


வெற்றிக்காகப் போராடும் ஒவ்வொருவரும் ஓர் உண்மையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கின்றனர். அது வெற்றி என்பது அவ்வளவு எளிதில் ஒருவருக்கு கிடைத்துவிடாது என்பதுதான். தனக்கான திறமையையும், உழைப்பையும், நேரத்தையும் பெற்றுக்கொள்ளாமல் வெற்றி ஒருவரை நெருங்கவே முடியாது. இதனை வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்தே இருக்கின்றனர். இதேபோல் நம்மிடையே ஓர் எதிர்மறையான குணம் இருக்கிறது. இந்த குணத்துக்குப் பலரும் அடிமையாகிவிடுகிறார்கள். அது என்ன என்கிறீர்களா? பொறாமைதான் அது.

வெற்றி பெற்றவர்களையும், சாதனைபுரிந்தவர்களையும் பார்த்து பொறாமைப்பட்டு கூக்குரல் போடுபவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த குணத்தை முதலில் மாற்றிக்கொள்ளவேண்டும். வெற்றி பெறுபவர்களைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும். அவர்களோடு ஒருவனாக நாம் இல்லாமல் இருந்தால் சீக்கிரத்தில் அவருடைய வரிசையில் சேர்ந்துவிட நம்பிக்கைகொள்ள வேண்டும்.

இங்கிலாந்து நாட்டில் பிறந்து உலகக் கவிஞன் என்று போற்றப்பட்டவர் பைரன். இந்த பைரனுக்கு நீண்டகாலக் கனவு ஒன்று இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த பின்பு அந்த நாட்டிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தார். ஒரு நாள் அவருடைய தந்தை அவரை அழைத்து, ‘‘பைரன் அடுத்தது என்ன செய்யப் போகிறாய்?’’ என்றார். அதற்கு பைரன், ‘‘யேல் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும், அது தான் என்னுடைய இப்போதைய ஆசை’’ என்றார்.

‘‘உனக்குப் படிப்பின் மீது அவ்வளவு பிரியமா?’’ என்றார் அவரின் தந்தை. ‘ஆமாம்’ என்றார் பைரன். அதற்கு தந்தை, ‘‘நம் குடும்பத்தில் அவ்வளவு வசதி இல்லை. இனி நீ படிப்பது என்பது முடியாத ஒன்று’’ என்று சொல்லிவிட்டார். அழுகை முட்டிக்கொண்டு வந்தது பைரனுக்கு. அப்படியே திரும்பிப் பார்க்காமல் ஓடத் தொடங்கினான்.

வாழ்க்கையே முடிந்துபோனது போலிருந்தது பைரனுக்கு. எத்தனை கனவுக் கோட்டைகளைக் கட்டியிருந்தோம். எல்லாம் ஒரே நொடியில் சரிந்துவிட்டதே என்று சொல்லி ஓடிக்கொண்டே காட்டை அடைந்து மரங்களுக்கு இடையே ஓடினான். அந்தக் காட்டில் யாரும் இல்லை, தரையில் அமர்ந்து கொண்டு சத்தம்போட்டு அழத்தொடங்கினான். எழுந்து நின்றான்.

தன் காலுக்கு அருகே இருந்த ஒரு சிறு கல்லை ஓங்கி எட்டி உதைத்தான். அதன் கீழே பாதுகாப்பாக ஒட்டியிருந்த ஒரு பூச்சி பறந்துபோனது. திடீரென்று அவன் மனதில் ஒரு பாடலின் வரி தோன்றியது. மீண்டும் ஓடத் தொடங்கினான். இந்த முறை உற்சாகத்துடன் மரங்களைச் சுற்றிச் சுற்றி ஓடினான், நீரோடைகள் வழியாக நடந்து சென்றான். அமைதியான காட்டில் உற்சாகமாகக் குரல் எழுப்பினான். சத்தம் போட்டுக் கத்தினான் பைரன், “பறவைகளே இனி நான் கவிதை எழுதப்போகிறேன்” என்று.

தனக்குப் படிப்பு கிடைக்கவில்லை என்றபோதும் தன்னுடைய ஆர்வத்தையும் விருப்பத்தையும் தன்னிடமுள்ள திறமையின் மீது ஏற்படுத்தியவர் தான் இங்கிலாந்து நாட்டின் சிறந்த கவிஞர் பைரன். எதைச் செய்தாலும் முழுமனதுடன், அதிகபட்ச உத்வேகத்துடன், குறையாத ஆர்வத்துடன் தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வரும்போது வெற்றி நம்மைத் தேடி வருகிறது. இதேபோலத்தான் தன்னுடைய திறமையால் இந்த உலகையே வியந்து பார்க்க வைத்தவர் கணித மேதை இராமானுஜர்.

இராமானுஜனின் தந்தை கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்துவந்தார். இவரது குறைந்த மாத ஊதியத்தில் குடும்பமே போதிய வருமானமின்றி தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றி தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தார் இராமானுஜன். ஒரு நாள்
இராமானுஜர் பள்ளிக்கு செல்வதற்கு முன் சாப்பிட உட்கார்ந்தார். ஆனால், அவரது தாய் ‘‘அரிசி இல்லை, இரவுதான் சாப்பாடு, அதுவரை பொறுத்துக்கொள்’’ என்று சொல்ல இராமானுஜன் தண்ணீர் குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்வதாக கூறி அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டார்.

மாலை நேரம் ஆகியும் இராமானுஜன் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவரது நண்பரிடம் விசாரிக்க, நண்பரோ அருகிலுள்ள கோயிலுக்கு சென்று பார்த்தபோது இராமானுஜன் கணக்கு புத்தகங்களை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். அவர் படுத்திருந்த தரை முழுவதும் கணக்குகள் போடப்பட்டிருந்தன.

நண்பர் அவரை தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், ‘‘நமது கணக்கு வாத்தியார் விடை கண்டுபிடிக்க முடியாத அந்த கணக்கை நான் தரையில் போட்டு பார்த்தேன்’’ என்றார். அதை பார்த்த நண்பர் வியந்துபோனார். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் சொன்னபோது பூஜ்ஜியத்திற்கு அருகில் ஒரு இலக்கை கொடுத்தால் அதன் மதிப்பு 10 மடங்காக உயரும், அதுவே இரு பூஜ்ஜியங்களாக போட்டால் 100 மடங்காக உயரும். பிறகு எப்படி பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை என்று சொல்ல முடியும் என ஆசிரியரைக் கேள்வி கேட்டு திணற வைத்தார்.

இராமானுஜன் பிறந்தது முதல் நிழல் போல் ஒட்டி உறவாடி வாட்டி வதைத்தது வறுமை. இதனால் படித்துக்கொண்டே சக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தார். இராமானுஜனிடம் பாடம் கற்றவர்களில் கல்லூரி மாணவர்கள் சிலரும் அடங்கும். இதனால் வறுமையில் வாடிய குடும்பத்திற்கு கொஞ்சம் பணம் கிடைத்தது. அது மட்டுமல்ல கணக்கு சொல்லித் தருவதை அலாதி சுகமாக நினைத்தார் இராமானுஜன்.

கணிதத்தில் மட்டுமே ஆர்வம் இருந்ததால் மற்ற பாடங்களில் ஆர்வம் இல்லாதவராக இருந்தார். கல்லூரிப் படிப்பில் தேர்வுகள் பெரும் தலைவலியாக இருந்தது. கணக்குப் பாடத்தை தவிர எல்லா பாடத்திலும் தோல்வி அடைந்தார். பிறகு படிப்பை பச்சையப்பன் கல்லூரியில் தொடருவது என முடிவு செய்து சென்னைக்கு வந்து படிப்பை தொடர்ந்தார். ஆனாலும் விதி வேறு வடிவத்தில் விளையாடியது. தொடர்ச்சியான விடுதி சாப்பாடு
இராமானுஜனுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தியது.

ஐந்து மாதங்கள் கூட தாக்குபிடிக்காமல் மீண்டும் சொந்த ஊருக்கே சென்றார். கல்லூரிப் படிப்பை முடிக்க இருமுறை எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தாலும், இராமானுஜனுக்கு கணிதத்தை விட்டுப் பிரியவே மனமில்லை. மீண்டும் தனித்தேர்வு மூலமாகத் தேர்வு எழுதினார். அதிலும் தோல்வியடைந்தார். மொத்தமாக படிப்பை விட்டுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஜானகி என்ற பெண்ணை இராமானுஜருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். மணமான பிறகு வேலை தேடிய இராமானுஜருக்கு பட்டப்படிப்பு முடிக்காததால் வேலை கிடைக்கவில்லை.

பிறகு சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.30 சம்பளத்திற்கு எழுத்தர் பணிக்கு சேர்ந்தார். கணிதக் குறிப்பு எடுப்பதற்கு தேவையான பேப்பர் வாங்க பணம் இல்லாததால் துறைமுகத்தின் அலுவலகத்தில் பயன்படுத்தி கீழே வீசப்பட்ட வேஸ்ட் பேப்பரை எடுத்து அதன் பின்புறம் கணிதக் குறிப்புகளை எழுதிவந்தார். அதில் ஒரு சில குறிப்புகளை துறைமுகத்தின் தலைவர் பார்க்க நேர்ந்தது. அதில் அரிய கணித சூத்திரங்கள் இருப்பதைப் பார்த்து வியந்து
போனார். இதை அடுத்து இராமானுஜருக்கு தனி அறை ஒதுக்கி கணித ஆராய்ச்சி செய்யுமாறு சொன்னார்.

இங்கிலாந்தில் இருந்த கணித மேதைகளுக்குத் தனது கண்டுபிடிப்புகளை கடிதமாக எழுதினார் இராமானுஜர். கடிதத்தை பார்த்த ஜி.எச்.ஹார்டி இராமானுஜரின் கணித அறிவைப் பார்த்து வியந்து கணித ஆராய்ச்சி மேற்கொள்ள இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்தார். இது
இராமானுஜரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முதலில் மறுத்த இராமானுஜர் பிறகு சம்மதம் தெரிவித்தார்.

இராமானுஜர் கப்பல் பயணமாக இங்கிலாந்து சென்றார். ஒருவழியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தபோது கடும் குளிராலும், சரியான உணவு கிடைக்காமலும் கஷ்டப்பட்டார். இருந்தபோதும் இராமானுஜர் மனம் தளரவில்லை, எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற இலக்கிலிருந்து பின்வாங்கவில்லை. அதன் பலனாக கணித கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சாதனை மேல் சாதனைபுரிந்தார். அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிரச் செய்தார். அவரை புகழ்பெற்ற ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்து இங்கிலாந்து நாடு பெருமைப்படுத்தியது.

இந்த நிலையில் இராமானுஜர் உடல் மேலும் மோசமானதால் காசநோயால் பாதிக்கப்பட்டு சென்னைக்கு திரும்பினார். நூறு ஆண்டுகள் கடந்தபோதும் கணித உலகம் நிரூபிக்க முடியாத 1000-க்கும் மேற்பட்ட சூத்திரங்களைத் தந்த கணித மேதை 32 ஆண்டுகள் 4 மாதங்கள் 4 நாட்கள் உயிருடன் வாழ்ந்து 1920ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்.

வறுமையை எதிர்த்து போராடி தன்னுடைய படிப்பில் கணிதத்தை தவிர மற்ற பாடங்களில் தோல்வி அடைந்தபோதும் தன்னுடைய ஒரே திறமையை பட்டைதீட்டி இளம் வயதிலே சாதனை புரிந்து கணித உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இராமானுஜர் ஒரு ஒப்பற்ற மனிதர். அதனால்தான் கணித உலகமே இன்றும் இராமானுஜரின் பெயரை உச்சரித்துகொண்டேயிருக்கிறது. இராமானுஜர் வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது “வறுமையை நினைத்துப் பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே”என்னும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.

இன்று நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எத்தனையோ இராமானுஜன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறப்பான திறமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் எல்லா திறமையும் வேண்டும் என்று நினைத்து அதில் ஈடுபடுத்துவதால் மாணவர்களின் உண்மையான திறமை இந்த உலகத்திற்கு தெரியாமலே போய்விடுகிறது.

நீ ஒரே ஒரு திறமையை பெற்றிருந்தாலும் பரவாயில்லை. நீ பல்வேறு திறமைகளில் கவனம் செலுத்துவதைவிட பெற்றிருக்கும் ஒரே திறமையை கூர்மைப்படுத்து, அதன் மூலமாக உயரத்திற்கு வருவாய், சிகரத்தில் அமர்வாய் என்பது கணிதமேதையின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடமாகும்.
 

(புதுவாழ்வு மலரும்)