குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை!



விழிப்புணர்வு

கின்னஸ் சாதனை முயற்சி!

இன்றைய நவீன உலகத்தில் குழந்தைகள் மீது தொடுக்கப்படும் குற்றச்செயல்கள் பெற்றோர்களை மட்டுமல்லாது மனித இனத்தின் மீதே வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பாலியல் வன்புணர்வு, கொலைகள், வக்கிர எண்ணங்கள் எல்லாமே வெளிச்சத்துக்கு வரும்போது பதைபதைக்கிறோம். குழந்தைகளிடம் நடத்தப்படும் குற்றச்செயல்களை மறைப்பதற்காக அக்குழந்தைகளையே மரணிக்கச் செய்துவிடும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இத்தகைய அபாயகரமான சூழலில் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் பெற்றோர்களின் பங்கு முதன்மையாக இருக்கும் அதே சமயத்தில், இந்த சமூகம், அரசு, பள்ளி, கல்லூரி என ஒருங்கிணைத்து குழந்தைப் பாதுகாப்பில் செயல்பட வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. வீட்டை விட்டு வெளியில் விளையாடும் குழந்தை, வீட்டிற்குள் இருக்கும் குழந்தை, பள்ளிக்குச் செல்லும் குழந்தை, பள்ளியிலிருந்து பயிற்சி வகுப்பு, விளையாட்டு, உறவினர் வீடு என குழந்தை எங்கு சென்றாலும், இருந்தாலும் அதன் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அக்குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒருசில விஷயங்களை அவர்களுக்கு கற்றுத்தரவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

சென்னை காரப்பாக்கம் ஹிந்துஸ்தான் குழும நிறுவனங்களின் சார்பில் குழந்தைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக ஒரு கின்னஸ் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஹிந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி, கே.சி.ஜி. கல்லூரி மற்றும் ஏனைய இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களிலிருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே இடத்தில் முதல் முறையாகச் சேர்ந்து குழந்தை பாதுகாப்பு குறித்த ஒரு பயிற்சிப் பட்டறையில் (workshop) பங்கேற்றனர்.

முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட ஏடிஜிபி ப்ரதீப் வி.பிலிப் (சிஐடி), பேசுகையில், ‘‘குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், கற்பழிப்பு மற்றும் ஏனைய குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க காவல்துறை தன்னை அர்ப்பணித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இத்தகைய குற்றங்கள் காவல் துறை பார்வைக்கு வராமலே போகின்றது அல்லது மிக தாமதமாக வருகின்றது’’ என்று கூறினார்.

ஸ்கூல் ஆஃப் சக்சஸ் நிறுவனர் தீபா ஆத்ரேயா இந்த வொர்க்‌ஷாப்பை தொடங்கிவைத்துப் பேசுகையில், ‘‘இனி வரும் தலைமுறையினருக்காகவாவது பாதுகாப்பான குழந்தைப் பருவத்தைத் தருவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டும்’’ என்றார். போஸ்கோ (POCSA) சட்டம் 2018-ல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீது இத்தகைய தீவிர குற்றம் புரிபவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கும் வகையில் திருத்தி அமைக்கபட்டதையும் குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் Friends of Police Student Corps அறிமுகப்படுத்தப்பட உள்ளதைத் தெரிவித்தார்.

நடிகர்கள் நிஷா மற்றும் கணேஷ் வெங்கடராமன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இது பிராண்ட் அவதார் (Brand Avatar) நிறுவனத்தின் ஓர் அங்கமான School of Success-ன் முயற்சியால் நிகழ்த்தப்பட்டது. கின்னஸ் நிறுவனத்துக்கு இந்த சாதனை குறித்த விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஒப்புதல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  - திருவரசு