தமிழ் இணையக் கருத்தரங்கும் ஆய்வுக்கட்டுரைப் போட்டியும்!தமிழ் மொழி

அரசுத் தொடக்கப்பள்ளி அங்கன்வாடி மையங்களில் கூட ஆங்கிலவழிக் கல்வி என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  ‘மொழிகளின் தாயாக விளங்கும் தாய்த்தமிழுக்குத் தமிழ்நாட்டுக் கல்வியில் இப்படிப்பட்ட புறக்கணிப்பா? கொடுமையல்லவா இது?’ என்று நீங்கள்  கேட்கலாம், உங்கள் கேள்வியும் நியாயமானதுதான்.ஆனால், இது ஒரு பக்கம் இருந்தாலும் தமிழை மீட்டெடுக்கும் முயற்சிகளும் இன்னொரு பக்கம் நடந்துகொண்டுதான் உள்ளது. அண்ணா  பல்கலைக்கழகமும் உத்தமம் என்ற நிறுவனமும் இணைந்து தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு என்ற கருத்தை மையமாகக் கொண்டு  தமிழ் இணைய மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, உத்தமம் நிறுவனத் தலைவர் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.மணியம், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் இதுகுறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், ‘உத்தமம் நிறுவனம் கடந்த  1997-ஆம் ஆண்டு முதல் கணினித் தமிழ் ஆய்வு குறித்த மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது.

சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 17 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. தற்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 18-ஆவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு என்ற கருத்தை அடிப்படையாகக்கொண்டு நடத்தப்படும் இம்மாநாட்டில், தமிழ்க் கணினிப் பயன்பாட்டு  வன்பொருள், மென்பொருள்களைக் கொண்டு கண், செவியியல் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகள், கல்வி, கற்றல், சமூகப்  பணிகள் போன்றவற்றில் முழுமையாகப் பங்கேற்க வசதி செய்வது முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினித் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்துப் பலர் சிறப்புச் சொற்பொழிவாற்ற உள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பிக்க உள்ளனர். அது மட்டுமின்றி, மாநாட்டுக் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும்  சிறந்த தமிழ்க் கணினி நிரலுக்கோ அல்லது இணைய பக்கங்களுக்கோ ரூ.1 லட்சம் சிறப்புப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டுக்குக் கணினிவழித் தமிழ்மொழி பகுப்பாய்வு, கணினிவழி மொழிபெயர்ப்பு, கணினிவழித் தமிழ் உரையிலிருந்து பேச்சு மற்றும் இவை  தொடர்பான ஆய்வுகள் (குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வகை ஆய்வுகள்), கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள் உள்ளிட்ட பொருள்களில் ஆய்வுக் கட்டுரைகளை https://easychair.org/conferences/? conf=tic2019 என்ற இணையதளம் மூலம் ஜூன் 1-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு  www.tamilinternetconference.org என்ற இணையப் பக்கத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

கணினி வழி தகவல் தொடர்பு யுகத்தில் தமிழைக் கொடிகட்டிப் பறக்கவைக்க இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்துவரும் நிலையில் தமிழ்நாட்டுப்  பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை தக்கவைப்பதற்கான முயற்சிகளைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தாய்த் தமிழ்ப் பள்ளியினர் ஆகியோர்  செய்துவருகின்றனர்.

தமிழ்வழிக் கல்விக்கான பன்னாட்டுக் கல்விக் கருத்தரங்கம் குறித்த முதல் கலந்துரையாடல் கூட்டம் கடந்த பிப்ரவரி 10, ஞாயிறன்று சென்னை,  மேற்குத் தாம்பரம் அவ்வை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. 2020 பிப்ரவரி 21-ல் உலகத் தாய்மொழி நாளன்று பன்னாட்டுக் கல்வியாளர்கள் மற்றும் தாய்மொழிக் கல்வி ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்ளும் தமிழ்வழி கல்விக்கான பன்னாட்டுக் கருத்தரங்கத்தை தமிழகத்தில் நடத்துவது என  இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜய் அசோகன் கூறுகையில், ‘‘சுவீடன், நார்வே, ஃபின்லாந்து உள்ளிட்ட  நாடுகளில் தமிழ் மொழி உயர்நிலை வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரையில் இடம்பெற்றிருப்பதுடன், பல்கலைக்கழக மேற்படிப்பிற்கான மதிப்பீட்டு  தொகையிலும் தமிழ்மொழிப் பாட மதிப்பெண் இடம்பெற்றிருக்கிறது.

வளர்ந்த, வளர்கின்ற நாடுகள் மட்டுமின்றி ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் கூட மிகச் சமீபத்தில் பயிற்றுமொழி குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு,  பெரும்பாலான நாடுகள் தாய்மொழி வழியிலான கல்விக்கு மாற்றம் கண்டுள்ளன. ஐ.நாவின் துணை அமைப்பான UNICEF தாய்மொழி வழிப்  பிறமொழிக் கல்விக்கான பிரசாரத்தை மேற்கொண்டுவருவதுடன், பல நாடுகளில் செயல்படுத்தியும் வருகிறது.

மண்ணின் மொழியோடும் குழந்தையின் இயற்கை மொழியோடும் கல்விமொழியை வைத்திருப்பதன் மூலமே நிலைத்த, செழுமையான கல்வியினைக்  குழந்தைகளுக்கு வழங்க முடியுமென ஐரோப்பா முதல் கொரியா, ஜப்பான், சீனா, ஈராக், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் வரை  அனைவரும் உணர்ந்து, தெளிந்து, கல்விமொழியினை தாய்மொழியில் வழங்கிவரும் நிலையில், தமிழகத்தில் கல்விமொழி குறித்த புரிதலற்று நாம்  தேங்கி நிற்கிறோம்.

இத்தகைய சூழலிலேயே, பயிற்றுமொழி குறித்த முறையான விவாதத்தைத் தொடங்கிவைக்க, பன்னாட்டுக் கல்வியாளர்களைக்கொண்ட பன்னாட்டுக்  கல்விக் கருத்தரங்கம் அவசியப்படுகிறது.உலகெங்கும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பலநூறு இருக்கின்றன, அதேபோன்று, உலகெங்கும் தமிழ்ச் சங்கங்கள்  பெரும்பாலான நாடுகளிலும் செயலாற்றி வருகின்றன.

தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வி குறித்த செயல்பாட்டாளர்கள், அறிஞர்கள், ஆசிரியப் பெருமக்கள் அனைவரோடும் உலகத்தமிழ் நிறுவனங்கள்  இணையும்போது தமிழகக் கல்விச் செயற்பாடுகளுக்கும் வருங்காலத்தில் வலுசேரும். பன்னாட்டுக் கல்விக் கருத்தரங்கத்தில், ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வுரைகள், பன்னாட்டுச் சிறப்பு அழைப்பாளர்கள் என்பனவற்றை உள்ளடக்கிய உலக அளவில் பேசப்படக்கூடிய கருந்தரங்காக இது அமைய உள்ளது.

சங்கம் வைத்து மன்னர்கள் தமிழை வளர்த்தார்கள் என்று பெருமையோடு பேசுகிறோம். இதன் தொடர்ச்சியாக நவீன யுகத்திலும் தமிழ் சிறப்புற்று  விளங்கச் செய்வதற்கான முயற்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன’’ என்றார்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.