அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?



Spoken  English  -  Part 6   எதை வாசிக்க வேண்டும்?

* மொழி


ரவியிடம் உரையாடிய ரகு(நீ ‘கவனித்தல்’ மற்றும் ‘படித்தல்’ என்ற திறமைகளை பட்டை தீட்ட வேண்டும்) Then, automatically you  would start Speaking and Writing. ‘’(பிறகென்ன!? சுயமாகவே பேசவும் எழுதவும் ஆரம்பித்துவிடுவாய்) என்றார். இதை வியப்புடன்  பார்த்த அகிலா, “Fantastic sir! இனிமே நானும்  தி ஹிண்டு ஆரம்பிக்கிறேன். நீ என்ன படிக்கப் போற ரவி?” எனக் கேட்டாள். ’’எங்க  மாமா ‘ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்ஸ் நிறைய வச்சிருக்காரு. அத வாங்கி படிக்கப்போறேன்”என்றான் ரவி.

‘‘இதுதான் அகில உலக முட்டாள்தனம்” என்று சொன்ன ரகுவை குழப்பத்துடன் பார்த்தனர் இருவரும். ‘‘குழந்தை ஒன்றை நன்றாகக்  கவனியுங்கள். முதலில் குப்புறப் படுக்கும். பின் தலையை உயர்த்திப் பார்க்கும். பின் தவழும். பின் முட்டிக்காலால் நடை, பின் சாய்ந்து  அமர்தல், பின் சுவரைப் பற்றி நிற்றல், தத்திதத்தி எட்டு வைத்தல்… இதுபோன்று பல நிலைகளைக் கடந்துதான் நடக்க ஆரம்பிக்கும்.  எடுத்தவுடனே ஓட முடியுமா?... உங்களுடைய படிக்கும் முயற்சியும் அப்படித்தான் இருக்கிறது. எடுத்தவுடனே ஆங்கிலச் செய்தித்  தாளுக்கோ அல்லது நாவலுக்கோ போய்விடக்கூடாது. அப்படிப் போனால் வெகு சீக்கிரத்தில் நிறுத்திவிடுவீர்கள்.

முதலில் சிறு சிறு கதைப் புத்தகங்களிலிருந்து ஆரம்பியுங்கள். அதிலும் குறிப்பாக, சித்திரக் கதைகளாக இருந்தால் மிகவும் நல்லது.  Start from tales and fables, not big stories or novels. Comics is a better choice. பாட்டியிடமிருந்து காக்கா சுட்ட வடையையும்,  காக்காவிடமிருந்து நரி சுட்ட வடையையும், முயலும் ஆமையும், தெனாலி ராமன் போன்ற நமக்கு மிகத் தெரிந்த கதைகளைப் படிக்க  ஆரம்பியுங்கள்.

அப்பத்தான் கதையின் பின்புலம், கதாபாத்திரங்களின் பெயர், கேரக்டர், கதைக் கரு நன்கு புரியும். புதிய வார்த்தைகள் இருந்தால் கூட  இதற்கு இதுதான் பொருள் என உங்களால் உணர்ந்துகொள்ள இயலும்.  உதாரணத்திற்கு, ‘வேதாளம்’என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன  என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார் ரகு. இருவரும் பதில் தெரியாது விழித்தனர். ‘‘இப்ப உங்களுக்குத் தெரியல.  ஆனா இன்னும் கொஞ்ச நேரத்தில டக்குன்னு நீங்களே சொல்வீங்க பாருங்க”என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்குச் சென்றார் ரகு.
 

(மீண்டும் பேசலாம்)

சேலம் ப.சுந்தர்ராஜ்