ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பின்னடைவு ஏன்?



* விவாதம்

தமிழக அரசை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டக் களத்தில் இறங்கிய ஜாக்டோ ஜியோவின் வேலை நிறுத்தப் போராட்டம்  மோசமான பின்னடைவை சந்தித்ததை அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒருசில அரசுப் பணியாளர் சங்கங்களும், வழக்கறிஞர்  சங்கங்களும் ஆதரவு தெரிவித்தபோதும் போராட்டம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம்  வழங்க வேண்டும்; முதுநிலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக்  களைய வேண்டும்  என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காலவரையற்ற  வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமலே ஒரு வாரகால போராட்டத்திற்கு பின்னர் பணிநீக்கம்,  புதிய ஆசிரியர்கள் நியமனம் போன்ற தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகளின் எதிரொலியாக அனைவரும் பணிக்கு திரும்பினர்.  போராட்டம் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்க்கலாம்…

அருமைநாதன்,  மாணவர் - பெற்றோர் சங்கம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டமும் அவர்கள் வைத்திருந்த கோரிக்கைகள் நியாயமானவைதான், அதில் எந்தவித  மாற்றுக்கருத்தும் கிடையாது. கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நீண்ட நாட்களாக நடவடிக்கையிலும் ஈடுபட்டுவந்தனர். ஆனால்,  பெற்றோர் சங்க நிர்வாகி என்ற நிலையில் இதை எப்படிப் பார்க்கிறேன் என்றால், 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு  நடக்க உள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிராக்டிக்கல் தேர்வு ஆரம்பமாகிவிட்டது. அதற்கடுத்து பிற பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற  இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில்  கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில், புதிய பாடத்திட்டம், புதிய கேள்வி முறை, ஏற்கனவே 11ஆம் வகுப்பில்  பலர் தேர்ச்சி பெறாமல் போனதால் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்து  சொல்லிக்கொடுத்தால்தான் மாணவர்கள் தேர்ச்சி பெற  முடியும். இந்தச் சூழலில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது சரியல்ல.

தேர்வை நோக்கி மாணவர்கள் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள், ஆசிரியர்கள் வருவார்களா அல்லது புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவார்களா  அப்படி நியமித்தால் மாணவர்களுக்கு அவர்களால் பாடங்களைத் திடீரென நடத்தமுடியுமா என்ற அச்சம் மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. அரசாங்கமும், லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக இருக்கிறார்கள்,  அதிலும் குறிப்பாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் அடுத்தகட்ட வாழ்வை நிர்ணயம் செய்யக்கூடிய தேர்வை  எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் மாற்று ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களே என ஆசிரியர்கள் அக்கறைக்  காட்டவில்லை. ஆசிரியர்கள் மேல் உள்ள கோபத்தில் மாற்று ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கிறோம் என்ற அரசின் அறிவிப்பை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை.முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ வைத்த கோரிக்கையை அரசு  தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களின் நலனைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.  அதை விடுத்து,  கைது, சிறையிலடைப்பு, பணியிடை நீக்கம் எனச் சென்றதால் அதன் மறைமுக விளைவு மாணவர்களின் தேர்வுத் தயாரிப்பை மிகவும்  பாதித்துள்ளது.

சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

தற்போது நடைபெற்றுள்ள போராட்டமானது பணியிலுள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை மட்டும் உள்ளடக்கிய  போராட்டமல்ல. வருங்கால அரசு ஊழியர்களாக வரப்போகின்ற இன்றைய இளைஞர்களுக்கான போராட்டம். ஆனால், 12 லட்சம் அரசு  ஊழியர்கள் ஆசிரியர்கள் இருந்தும் இக்கோரிக்கைகளை மக்களிடம் முறையாகக் கொண்டு செல்லவில்லை. இதனால்  ஆட்சியாளர்களால் மக்களையும், குறிப்பாகப் படித்த இளைஞர்களையும் போராட்டத்திற்கு எதிராகத் திசை திருப்ப முடிந்தது.

எம்.எல்.ஏக்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் சம்பள உயர்வையும் நிலுவைத் தொகையையும் பெற்றுக்கொண்டார்கள், எங்களுக்கு மட்டும்  வழங்கக்கூடாதா? என்று ஒப்பிட்டுக் கூறுவதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விட குறைவான வருவாயும், வசதி வாய்ப்புகளும்  உள்ள பெரும்பான்மை மக்கள் எப்படி ஏற்பார்கள்? 1964-ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதி களடங்கிய அமர்வு ‘அரசு ஊழியர்கள்  சங்கம் அமைத்துக்கொள்வதோடு தங்கள் உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் தவிர்த்த மற்ற போராட்டங்களில் ஈடுபடலாம்’ என்று  தீர்ப்பளித்துள்ளது.

2003-ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில்  வேலைநிறுத்தப் போராட்டம் சட்டவிரோதம் என்றும், அரசு ஊழியர் வேலைநிறுத்தம் செய்ய உரிமை இல்லை என்றும் மன்னிப்புக்  கடிதம் பெற்றுக்கொண்டு வேலையில் சேர்க்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புகளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்களுக்கு சேவைப் பாதிப்பு, மாணவர்களுக்கு கல்விப் பாதிப்பு ஏற்படுவதையும்  கவனத்தில்கொண்டு மாற்றுப் போராட்ட முறைகளைக் கடைப்பிடித்திருந்தால் பின்னடைவையும் மக்கள் எதிர்ப்பையும் அரசின்  நடவடிக்கைகளையும் பாதிப்புகளையும் தவிர்த்திருக்கலாம்.  

கி.பாலசண்முகம்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  


அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது. அரசுப் பள்ளிகளை மூடுவதால் தற்போது பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு ஓரளவு மட்டுமே  பாதிப்பு‌. இடமாற்றம் , பணிநிரவல் போன்ற சிறு பாதிப்புகள் மட்டுமே. 58 வயது வரை வேலையிலிருந்து அனுப்ப முடியாது.   வாங்கும் ஊதியத்தைக் குறைக்கவோமுடியாது. எனவே, பள்ளிகளை மூடுவதால் தற்போது பணியிலிருக்கும் ஆசிரியர்கள்  பாதிக்கப்படப்போவதில்லை. பின் எதற்காக இந்தப் போராட்டம்? தற்போது அரசுப் பள்ளியில் பயின்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் 60  சதவீத மாணவர்கள் உள்ளனர். ஏனென்றால் அவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை செலுத்த முடியாது என்று  பலர் கருத்து கூறினர்.

நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு கல்வி முழுவதும் தனியார் வசம் ஆனபிறகு இந்த பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளை எங்கு சேர்ப்பார்கள்? இந்த உண்மை புரியாமல் இருக்கும் பெற்றோர்களுக்குத் தான் உண்மையான தோல்வி.  இந்த மக்களே போராட்டத்தின் காரணம் புரியாமல் ஆசிரியர்களை தூற்றியதுதான் மிகவும் கவலைக்குரியது.  

ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், இனி வரும்  காலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் கண்டிப்பாக  இருக்காது என்பதை சிந்திக்கவில்லை. இது தெரியாமல் இந்தப்  போராட்டத்திற்கு ஆதரவு தராமல் வெறும் 10,000 ரூபாய்க்கு தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு அவர்கள் விண்ணப்பித்தது வேதனை.  எனவே, கோரிக்கையைப் பொறுத்தவரை தோல்வி அடைந்தது ஏழை பெற்றோர்களும், பி.எட். ஆசிரியர் பயிற்சி பயிலும், பயின்ற  இளைஞர்களும் மற்றும் அவர்களது பெற்றோர்களும்தான்!

  - தோ.திருத்துவராஜ்