அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு..!



*அக்‌ஷய பாத்ராவின் அற்புத சேவை!

தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய வேளைக்கு சத்துணவை அரசு வழங்கி வரும் நிலையில் ‘அக்‌ஷய  பாத்ரா’ என்ற அறக்கட்டளை மூலம் காலையில் ஊட்டச்சத்து உணவை அளிப்பதற்கான வழியை நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து  நிபுணருமான திவ்யா திட்டமிட்டார். இதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறையை அணுகி தனது திட்டம் குறித்து விளக்கினார். இந்த  அற்புதமான சேவை திட்டத்திற்கு தமிழக அரசும் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து 2019ஆம் கல்வியாண்டிலிருந்து  தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுத்ததற்காக திவ்யாவிற்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ள நிலையில், இது எப்படி  சாத்தியமாகும் என்பதை நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்.‘‘அக்‌ஷய பாத்ரா என்ற அறக்கட்டளை உலகின்  மிகப்பெரிய மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்த அறக்கட்டளையின் மத்திய சமையலறைக்கூடம் பெங்களூருவில்  உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை ஓ.எம்.ஆர்-யிலும் மதுரையிலும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளை  லாபநோக்கற்ற ஓர் தன்னார்வ அமைப்பாகும். ஒபாமா போன்ற மிகப் பெரிய பிரபலங்கள் இதில் பங்களிப்பாளர்களாக உள்ளனர்.

தற்போது இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 36 இடங்களில் சமையலறைகளை அமைத்து, தினமும் பசியால் வாடுகின்ற 17  லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவளித்து வருகிறது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய  உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் பட்டினி பிரச்னையை ஒழிக்கப் போராடுவதோடு, குழந்தைகளைப்  பள்ளிக்குக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பு 2000ஆம் ஆண்டு முதல் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, பசியால் வாடுகின்ற இளஞ்சிறார்களுக்கு மதிய உணவு வழங்கி  வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் 10,770 பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் 17 லட்சம் குழந்தைகளுக்கு முழுமையான மதிய உணவு  பரிமாறும் உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டமாக அக்க்ஷய பாத்ராவின் ‘மதிய உணவுத் திட்டம்’ திகழ்கிறது’’ என்று  பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் திவ்யா.

‘‘தமிழ்நாட்டில், மதிய உணவுத் திட்டம் எனும் இந்த அற்புதமான திட்டத்தை தமிழக அரசே செம்மையான முறையில்  செயல்படுத்திவரும் அதே நேரத்தில், இந்தியாவின் மற்ற பல மாநிலங்களில் இத்திட்டத்தின் பலன் முற்றிலும் குழந்தைகளைச்  சென்றடையவில்லை. இந்தியாவில் பசியினால் தினமும் பல குழந்தைகள் மடிகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஐந்து  வயதிற்குட்பட்ட 43 சதவிகிதம் குழந்தைகள் சராசரி எடையைவிட குறைவாக உள்ளனர். பல லட்சம் குழந்தைகள் இன்றைய பொழுதை  இனிதாகக் கழித்திடவும் நாளைய பொழுதில் செம்மையாக வாழவும் உணவு தேவைக்காக நம்முடைய ஆதரவை எதிர்நோக்கிக்  காத்திருக்கின்றனர்.

நான் ஓர் ஊட்டச்சத்து நிபுணர் என்ற வகையில் அக்‌ஷய பாத்ரா என்னை அவர்களது பிராண்ட் அம்பாசிடராக இருக்க தொலைபேசி  வாயிலாக தொடர்புகொண்டார்கள், பின்னர் நேரில் வந்து சந்தித்துப் பேசினார்கள். அதன் பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளார்கள்.  இந்த அக்‌ஷய பாத்ராவில் என்னுடைய வேலை என்னவென்றால், அவர்கள் கொடுக்கும் அந்த உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக  இருக்கின்றதா எனப் பார்ப்பதுதான்.

அதாவது, அவர்கள் கொடுக்கின்ற காலை உணவு, மதிய உணவு வைட்டமின்ஸும் மினரல்ஸும் நிறைந்ததாக இருக்கின்றதா,  தேவையான ஊட்டம் குழந்தைகளுக்கு கிடைக்கின்றதா, அப்படியில்லை என்றால் அதை எப்படியெல்லாம் மாற்றியமைக்கலாம்,  எந்தெந்த பொருட்களைச் சேர்த்தால் அவர்களுக்குத் தேவையான கால்சியம், வைட்டமின் பி, சி, ஏ இவையெல்லாம் கிடைக்கும் என  திட்டமிடுவதுதான் என்னுடைய பங்கு.

அக்‌ஷய பாத்ரா பிராண்ட் அம்பாசிடர் ஆவதற்கு முன்பே அரசுப் பள்ளிகளில் நிறைய ஆய்வுகள் செய்துகொண்டிருந்தேன். அங்கு  படிக்கின்ற குழந்தைகளுக்கு என்னென்ன தேவை, என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருகின்றன என ஆய்வு  செய்துகொண்டிருந்தேன். இதன் காரணமாகவே அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளையினர் என்னை தொடர்புகொண்டார்கள். என்னுடைய  விருப்பம் தமிழகத்தில் உள்ள குழந்தைகளும் அக்‌ஷய பாத்ராவினால் பயன் அடையவேண்டும். வருகின்ற, அதாவது  ஜூன், ஜூலை  2019ஆம் கல்வியாண்டிலிருந்து நம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கான அனுமதியை அக்‌ஷய  பாத்ராவுக்கு வழங்கலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நம் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இலவசமாக மதிய உணவு கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்குத் தேவை வெறும் உணவு  கிடையாது, ஊட்டச்சத்து மிகுந்த உணவுதான் தேவை. வளரும் குழந்தைகளில் சிலருக்குத் தொடர்ச்சியாக அதிக நாட்கள் சளி, இருமல்  இருந்துகொண்டேயிருக்கும். பொதுவாக  சளியோ இருமலோ வந்தால் அது சுமாராக மூன்று வாரங்களில் சரியாகிவிட வேண்டும்.

மாதக்கணக்கில்,ஆண்டுக்கணக்கில் இருந்தால் அதற்கு வைட்டமின் ‘சி’ குறைபாடுதான் காரணம். பொதுவாக குழந்தைகளுக்கான ஒரு  நெறிமுறை (protocol) வைத்துள்ளோம். அதாவது, வயதுக்கேற்ற உயரம், எடை விகிதம் சரியாக இருக்கின்றதா என்று பார்ப்போம்.  அதில் 10 வயதுக் குழந்தைக்கு அதற்குண்டான வளர்ச்சியில்லாமல் குறைந்திருந்தால் கால்சியம் குறைபாடு காரணம். அதனால்,  இந்தந்த ஊட்டசத்துகள் நிறைந்த உணவு மிகமிக முக்கியம் என பரிந்துரைப்போம்.

பசியினால் எந்தவொரு குழந்தையும் வாழ்க்கையில் வழிதவறி சென்றுவிடக் கூடாது. பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல்,  குழந்தைத் தொழிலாளர்களாகும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். ஆதலால் அக்ஷய பாத்ரா வழங்கும் இந்த சேவை குழந்தைகளுக்கான  உணவுத் தேவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர்களை தொடர்ந்து பள்ளியில் பயிலவும் செய்கிறது.

இந்தியாவில் எந்த குழந்தையின் கல்வியும் பசியினால் பறிக்கப்படக்கூடாது என்கின்ற உயரிய நோக்குடன் பணியாற்றும் அக்க்ஷய  பாத்ரா, வரும் 2020-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதைக்  குறிக்கோளாக கொண்டு இயங்குகிறது’’ என்று அக்‌ஷய பாத்ராவின் எதிர்காலத் திட்டங்களையும் சொல்லி முடித்தார் திவ்யா. மேலும்  இவர்களின் சேவை செம்மையாக அமைந்திட நாமும் வாழ்த்துவோம்.

- தோ.திருத்துவராஜ்