.10ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்!



* பொதுத்தேர்வு டிப்ஸ்

பொதுத்தேர்வு எழுதப்போகிறோம் என்ற பதற்றத்தோடு பத்தாம் வகுப்பு மாணவர்கள் தயாராகி வருவார்கள். திட்டமிட்டு முழுக்  கவனத்தோடு படித்தால் எந்தவித அச்சமும் இல்லாமல் சுலபமாகத் தேர்வை எழுதி அதிக மதிப்பெண்களைத் தட்டிச்செல்லலாம்.  பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரை வினாத்தாள் அமைப்பை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். வினாத்தாள்  திட்ட வரைவினை (Blue Print) நன்கு புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

தமிழ் முதல் தாள்

ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்தும் கேட்கப்படும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். பெரியபுராணம்,  கம்பராமாயணம், சீறாப்புராணம், நிற்க நேரமில்லை ஆகிய செய்யுள் பகுதி களிலிருந்தும் திரைப்படக் கலை உருவான கதை,  தொன்மைத் தமிழகம், தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய உரை நடைப் பகுதிகளிலிருந்தும் பெருமளவில் உள்  வினாக்கள் கேட்கப்படுகின்றன. மார்ச் 2012 முதல் செப்டம்பர் 2018 வரை நடைபெற்ற அனைத்து பொதுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு,  அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து பயிற்சி செய்யலாம்.

பொருத்துக பகுதிக்கு வினாக்களை எழுதி விடையெழுதுங்கள். விடைக்கேற்ற வினா அமைக்கும்போது வினாக்குறி(?)யை  மறக்காதீர்கள். யார், என்ன, எப்போது, எங்கே, ஏன்…. போன்ற வினாச்சொற்களை அடிக்கோடிடுங்கள். இரண்டு மதிப்பெண் வினாக்களில்  செய்யுள் பகுதியில் 1,3,5,6,7,9 ஆகிய இயல்களிலிருந்தும் உரைநடைப் பகுதியில் 1,5,6,7,8,9,10 ஆகிய இயல்களிலிருந்தும் வினாக்கள்  வினாத்தாள் திட்ட வரைவின்படி (Blue Print) கேட்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இம்முறை இருக்காது என்பதால் மற்ற இயல்களில்  உள்ள வினாக்களின் விடைகளையும் படித்துக்கொள்ளுங்கள்.

தொன்மைத் தமிழகம், தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள், பல்துறை வேலை வாய்ப்புகள் போன்ற உரைநடைப்பகுதியில் உள்ள  நீல வண்ண எழுத்துகளில் உள்ள மேற்கோள்களை ஆழ்ந்து படிப்பதன் மூலம் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதாக  விடையளிக்கலாம். நான்கு மதிப்பெண்களைப் பொறுத்தமட்டில் கேட்கப்படும் வினாக்களுக்கு குறைந்தது நான்கு கருத்துகள் கொண்ட  விடையை எழுதினால் போதுமானது. விடையைப் பத்தியாக எழுதாமல் நட்சத்திர குறியிட்டு பாயின்ட் பாயின்டாக எழுதினால் முழு  மதிப்பெண்ணை எளிதாகப் பெறலாம்.

வினா எண் 45க்கு விடைகள் எழுதும்போது கேட்கப்படும் செய்யுளின் ஆசிரியர் பெயரை மனப்பாடம்  செய்துகொள்ளுங்கள்  (உதாரணமாக:நற்றிணை-மிளைகிழான் நல்வேட்டனார், புறநானூறு-கண்ணகனார், கலித்தொகை-நல்லந்துவனார்) வினா எண் 46க்கு  விடைகள் எழுதும் போது ஐந்தாவதாக தலைப்பு கேட்கப்படும். இதற்கான விடை அவ்வுரைப் பத்தி எதைப் பற்றி சொல்கிறது என்பதை  புரிந்துகொண்டு சரியான தலைப்பினை எழுதுங்கள். நெடுவினாக்களுக்கு விடையெழுதும்போது குறிப்புச் சட்டகம் அமைத்தும்,  மேற்கோள்களைச் சுட்டிக்காட்டியும் எழுதுங்கள். மனப்பாடப் பாடல்களை எழுதும்போது பிழையின்றி, நிறுத்தற்குறிகளிட்டு  எழுதவேண்டும். தமிழ் முதல் தாளைப் பொறுத்தவரை அடிக்கடி எழுதிப் பார்க்கும் பயிற்சியை மேற்கொள்வதே முழு மதிப்பெண்களைப்  பெற்றிட சிறந்த வழியாக அமையும்.

தமிழ் இரண்டாம் தாள்

வினாத்தாள் அமைப்பை முழுமையாக அறிந்துகொள்ளுதல் வேண்டும். வினாத்தாள் திட்ட வரைவை (Blue Print) நன்கு  புரிந்துகொள்ளுதல் வேண்டும். முந்தைய தேர்வின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்வதன் மூலம் 1-10 வரையுள்ள ஒரு மதிப்பெண்  வினாக்களின் விடைகளை மிக எளிதாக சரியாக எழுதிவிடலாம். அடுத்து 11-20 வரையுள்ள மொழிப் பயிற்சி வினாக்களுக்கு பயிற்சி  அவசியம் தேவை. வல்லினம் மிகும், மிகா இடங்களை முழுமையாக படியுங்கள். (பாடநூல் பக்கம் எண் 142-145) விரித்தெழுதுக,  தொடர் மாற்றம், உவமை உருவகம் மாற்றம், வினையெச்சமாக  பெயரெச்சமாக மாற்றுக, இரு பொருள் தருக, சந்திப்பிழை, ஒருமை  பன்மைப் பிழை ஆகிய வினாக்களுக்கு விடையெழுதி பயிற்சி செய்வதன் வழியாக முழு மதிப்பெண்களைப் பெறலாம்.

இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதும்போது தேவைப்படும் இடத்தில் எடுத்துக்காட்டுகளை எழுதுங்கள். பா வகை, அணி,  அலகிடுதல் ஆகிய மூன்றில் ஏதேனும் இரண்டினை எழுதும்போது பா வகைக்கும், அணிக்கும் எடுத்துக்காட்டுப் பாடல்களை மறக்காமல்  பிழையின்றி எழுதுங்கள். துணைப்பாடக் கட்டுரையை எழுதும்போது உள் தலைப்புகளிட்டும் கதை மாந்தர்கள் குறித்தும் எழுதுங்கள்.  அன்றாடம் நாம் பேசும் பிறமொழிச் சொற்களின் தமிழாக்கத்தை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்…. அது தயக்கமின்றி  தமிழில் பேசுவோம் பகுதியில் நமக்கு விடையளிக்க உதவும்.  

கவிதை உங்கள் சொந்தக் கவிதையாக இருப்பின் முழு மதிப்பெண் கிடைக்கும். கொடுக்கப்பட்ட நிகழ்வைப் படித்து சூழ்நிலைக்கேற்ற  விடையளிக்கும் பகுதியில் புரிந்துகொண்டு விடையளியுங்கள். பா நயம் பாராட்டுதலில் மையக் கருத்து, திரண்ட கருத்து, அணி நயம்,  எதுகை நயம், மோனை நயம், இயைபு நயம், சந்த நயம், தலைப்பு ஆகியவற்றை உள் தலைப்புகளாகக் கொண்டு எழுதினால் முழு  மதிப்பெண்களை பெறலாம் படிவம் நிரப்புதலில் விடைத்தாளில் மூன்று படிவங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, வினாவை  தெளிவாகப் படித்து சரியான படிவத்தை தேர்வு செய்து எழுத வேண்டும். உங்கள் பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளில் எந்தப் படிவம்  கேட்கப்பட்டதோ அந்தப் படிவம் மட்டுமே கொடுப்பார்கள்.

ஆனால், இங்கு நீங்கள் படிவத்தை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருப்பீர்கள் என்பதை உணருங்கள். நீங்கள் தேர்வு செய்து  நிரப்பிய படிவத்தைத் தவிர மற்ற இரண்டு படிவங்களையும் பென்சிலால் கோடிட்டு அடித்துவிடுங்கள். கண்டிப்பாக படிவத்தின் மீது  வினா எண் 38 என குறிப்பிடுங்கள். கடிதம் எழுதும்போது கேட்கப்பட்ட வினாவின் கருத்தினை தெளிவாக குறிப்பிட்டு எழுதுங்கள்.  கட்டுரை எழுதும் போது குறிப்புச் சட்டகமும், உள் தலைப்புகளும் மிகவும் முக்கியம். வினா எண்ணைக் கண்டிப்பாக குறிப்பிடவும். மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றி முறையான பயிற்சிகளை மேற்கொண்டு பொதுத் தேர்வை எதிர்கொண்டால்  பதற்றமில்லாமல் அதிக மதிப்பெண்களை அள்ளலாம் மாணவர்களே!