சிறுபான்மையினருக்கான சிறு வணிகர் கடன் திட்டம்!



நிதி வழிகாட்டல்

சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தனியாகவோ அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் அல்லது தொழில் செய்து தங்களது வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் 2004ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எந்தெந்த சிறுதொழில்களுக்கு வணிகக் கடன் வழங்கப்படுகிறது என்றால், வருமானப் பெருக்கத்திற்காக கிராம/நகர்ப்புறங்களில் மேற்கொள்ளும் சிறு தொழில்கள்/சிறு வியாபாரங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. உதாரணமாகக் காய்கறிக்கடை, மீன் வியாபாரம், தையல் கடை, பழ வியாபாரம், பலகாரக்கடை மற்றும் பிற கைத்தொழில்கள்.

இச்சிறு வணிகக்கடன் பெறுவதற்கான தகுதிகள் என்னவென்று பார்த்தால், விண்ணப்பதாரர் இஸ்லாமியர், கிறிஸ்துவர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பாரசீகர் இதில் ஏதாவது ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சிறுபான்மைச் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். அக்குழு குறைந்தது 6 மாத காலம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்தில் வசிப்பவர் எனில் ரூ.92,000 மற்றும் கிராமப்புறம் எனில் ரூ.39,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒரு குழு சிறுபான்மை சுயஉதவிக்குழுவாக கருதப்பட என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

சுய  உதவிக்குழுவில்    குறைந்த பட்சம் 10 மற்றும் அதிகபட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும்.  உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 75 விழுக்காடு நபர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். சில சமயம் (in exceptional cases) உறுப்பினர்களில் 60 விழுக்காட்டினர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து, மீதமுள்ள 40 விழுக்காடு உறுப்பினர்கள் பிற்பட்டோர்/ ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ கணவனை இழந்தவர்/ஊனமுற்றோராக இருப்பின் அக்குழுவும் சிறுபான்மைச் சுய உதவிக்குழுவாகக் கருதப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.25,000 கடன் அளிக்கப்படும். சிறு கடனுக்கு ஆண்டு வட்டி விகிதம் 4 விழுக்காடு மட்டுமே ஆகும். பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கும் மற்றும் ஆண், பெண் இருவரும் உறுப்பினராக இருக்கும் சுய உதவிக்குழுக்களில் பெண் உறுப்பினருக்கும், சிறு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சிறு கடன் பெற சுய உதவிக்குழு வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

ஆம். இச்சிறு கடன் டாம்கோ நிறுவனத்தால் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுவதால் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இருக்கவேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குழுக்கள் கூட்டுறவு வங்கியில் புதியதாக சேமிப்புக் கணக்கு துவங்கலாம். கடன் தொகையினை எவ்வளவு காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றால், கடன் தொகைக்கு ஏற்ப 12 (அ) 24 (அ) 36 மாத தவணைகளில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தலாம்.

சிறு கடன் வழங்கும் முறை என்ன?

விண்ணப்பத்தினை கட்டணம் ஏதுமின்றி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (பி.ப) மற்றும் சிறுபான்மை நல அலுவலரின் அலுவலகத்தில்/கூட்டுறவு வங்கிகளில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை கூட்டுறவு வங்கிகளிடம் சமர்ப்பிக்கலாம்.

மத்திய கூட்டுறவு / நகர கூட்டுறவு வங்கி, சுய உதவிக்குழுவின் நிலையான தன்மை, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறமை (Credit Rating) போன்றவற்றை உறுதி செய்து வங்கியின் பரிந்துரை (படிவம் - அ) மற்றும் அதனுடன் மாவட்ட ஆய்வு மற்றும் தேர்வுக் குழுவின் ஒப்புதல் ஆகியவற்றைப் பெற்று டாம்கோ நிறுவனத்திடம் சமர்ப்பிக்கும்.

இதனடிப்படையில் டாம்கோ தகுந்த ஆணையை பிறப்பித்து சிறு கடன் தொகையை கூட்டுறவு வங்கிக்கு வழங்கும். கூட்டுறவு வங்கி அதிகபட்சம் 30 நாட்களுக்குள் இக்கடனை சுய உதவிக்குழுவுக்கு வழங்க வேண்டும். சுய உதவிக்குழு இக்கடனை பெற்று உறுப்பினருக்கு வழங்கும். கடன் தொகையை உறுப்பினர்களிடம் பெற்று குறித்த தேதியில் வங்கிக்குச் செலுத்த வேண்டியது சுய உதவிக் குழுவின் பொறுப்பாகும்.

மறுநிதி உதவி சிறு கடன் என்றால் என்ன?

ஏற்கனவே பிற திட்டங்கள் எவற்றிலாவது கடன் பெற்று கடன் நிலுவையில் உள்ள சிறுபான்மைக் குழுக்கள் இந்த சிறுகடன் திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. ஆனால், இக்கடன் நிலுவைத் தொகையை டாம்கோ சிறு கடனில் பிடித்தம் செய்திட உத்தரவாதம் அளித்தால் இத்திட்டத்தின் கீழ் டாம்கோ வழங்கும் சிறுகடன் உதவியைப் பெறலாம். டாம்கோ நிறுவனம் வங்கிக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையை அளித்துவிடும்.
 

தொகுப்பு: திருவரசு