உதவிடத்தான் பிறந்தோம்… அதை செவ்வனே செய்வோம்!சேவை

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒன்று உதவுபவர்களாகவும் அல்லது உதவி பெறுபவர்களாகவும்தான் இருக்கிறோம். இதுதான் இயற்கை. இந்த நிலையில், இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் பணத்தைத் தேடியும், பிழைப்பைத் தேடியும் மனிதர்கள் ஓடிக்கொண்டிருப்பதால் உதவி செய்பவர்களின் எண்ணிக்கை அரிதாகிவிட்டது என்றே சொல்லலாம்.  

உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் எந்தவிதமான பயனும் விளைந்துவிடப்போவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. எனவே, மனிதன் வாழும் காலத்திலேயே தான் கற்ற கல்வியை பிறருக்கு பயனுள்ளதாகவும், தன்னுடைய திறமையை பிறருக்கு பயன்படக்கூடியதாகவும், தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்தும் உதவ வேண்டும்.

இந்த உலகம் பணம், பொருள் பேராசையால் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதனால் வெள்ளம் வருவதற்கு முன்பே அந்த வெள்ளத்தைத் தடுக்கும் வகையில் அணைபோட்டுவிட வேண்டும். வெள்ளம் வந்தபிறகு அணைபோட முயன்றால் அது முடியாமல்போகும். வெள்ளத்தின் வேகமானது அணைபோடும்போதே அடித்துச் சென்றுவிடும்.

அதுபோல, நம் வாழ்க்கை முடியும் முன்பே நாம் சேர்த்த செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து நற்பயனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது நன்னெறி நூல்கள். அந்த வகையில், சென்னையில் குழந்தைகள், இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் சேர்ந்து ‘உதவிடத்தான் பிறந்தோம்’ என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

அந்த அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முறையாக அனுமதி பெற்று அரசுப் பள்ளிகள், பஸ் நிலையங்களின் சுற்றுச்சுவர்களில் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என சுமார் ஏராளமானோர் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேவை மனப்பான்மையோடு செயல்படும் உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் விஜயிடம் பேசியபோது, பல்வேறு சமூக கருத்துக்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளம் அவனின் வாரிசுகள் மட்டுமல்ல... அவன் வாழ்ந்த காலத்தின் வழிச்சுவடுகள் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில், இந்த சமூகத்திற்கு நம்மால் என்னென்ன உதவிகள் செய்யலாம் என ஆலோசித்து நண்பர்களாக ஒன்றுசேர்ந்தோம். சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் உதவிதேவைப்படுபவர்களை கண்டுபிடித்து உதவ ஆரம்பித்தோம்.

குறிப்பாக தந்தையை இழந்த குழந்தைகள் படிக்க ஆர்வமிருந்தும் படிக்க வழியில்லாமல் இருப்பார்கள், அவர்களுக்கு உதவுவது, மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு உதவுவது என செய்துவந்தோம்.

இந்த நிலையில், ‘MEBOC- உதவிடத்தான் பிறந்தோம்’ என்னும் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்ததில் தற்போது 300க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளார்கள். இதன் மூலம் கல்வி உதவி, மருத்துவ உதவி, ரத்ததானம், விழிப்புணர்வு ஓவியம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி ஊக்கப்படுத்துவது என பல்வேறு வகையில் உதவிவருகிறோம்.

நாங்கள் வரையும் ஓவியங்களின் சிறப்பு என்னவென்றால், சமூகத்தில் நடைபெறும் தீய செயல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். தற்போது சென்னை, கோயம்புத்தூர், தேனி, மதுரை, வேலூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் செய்துவருகிறோம். தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வது, இன்னும் அவர்களுக்குத் தேவைப்படும் மற்ற உதவிகளை அளிப்பதே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறோம்.

இதற்கிடையில், சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக தாம்பரம், தியாகராய நகர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளின் சுவர்களுக்கும் வெள்ளையடித்தோம்.

 தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று சுவர்களில் ஆத்திசூடி எழுதுவது, நடுநிலைப் பள்ளிகளுக்கு சென்று கல்வி தொடர்பான ஓவியங்களைத் தீட்டுவது என எங்களின் வார இறுதி நாட்களை ஒதுக்கி திட்டமிட்டு செய்துவருகிறோம்.

அது மட்டுமல்ல பள்ளியையொட்டி அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருக்கும் தேவையற்ற விளம்பர போஸ்டர்களை அப்புறப்படுத்தி, பேருந்து நிறுத்தத்தையும் சுத்தப்படுத்தி வருகிறோம்’’ என்றார்.“உதவி தேவைப்படுபவர்கள் எங்களது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடுவார்கள்.

அவர்களின் கோரிக்கை என்ன, உண்மையிலேயே அவர்களுடைய நிலை என்ன என்பதை அவர்களின் வீட்டுக்குச் சென்று பரிசோதித்தும், பள்ளி, கல்லூரிகளிலிருந்து குறிப்பிட்ட மாணவருக்கான கல்விக் கட்டணத்தை உறுதிசெய்யும் சான்றிதழைப் பெற்றும் அவர்களுக்கான உதவியைச் செய்கிறோம். இப்படி இந்த ஆண்டு மட்டும் பொறியியல் மற்றும் கலைப் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கும் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவிக்கும் கல்விக் கட்டணத்தை உதவியாக வழங்கியிருக்கிறோம். உதவ மனமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் இணைந்துகொள்ளலாம்.

கல்பாக்கம் பகுதியில் வாழும் இருளர், பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி வழங்கும் சேவையைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இந்த சமூகத்திற்கு எந்த வகைகளிலெல்லாம் உதவ முடியுமோ அந்த வகைகளிலெல்லாம் உதவிடத்தான் பிறந்தோம்.  அதை செவ்வனே செய்வோம்.

மலேசியா, சிங்கப்பூர், உக்ரைன், துபாய் போன்ற  வெளிநாடுகளில் வசிக்கும் நம் நாட்டினர் இந்த உதவிடத்தான் பிறந்தோம் நண்பர்களோடு இணைந்து உதவுகிறார்கள். அவர்கள் நம் நாட்டிற்கு வரும்போது நேரம் ஒதுக்கி எங்களோடு சமூக விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்” என்கிறார் ‘உதவிடத்தான் பிறந்தோம்’ குழுவில் ஒருவரான விஜய்.தொடர்புக்கு: வாட்ஸ்அப் எண் 9710972097

- தோ.திருத்துவராஜ்