பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தேவைதானா?



சர்ச்சை

சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள சமூக மக்களை மேம்படச் செய்வதற்காக நாடு முழுவதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால், பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை. இதைக் கருத்தில்கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது.

பொதுப் பிரிவினரின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இடஒதுக்கீடு மசோதாவையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டு மிகப் பெரியவிவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்குக் குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம்கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 கல்வி ஆண்டிலிருந்து இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகிய அமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் இந்த இடஒதுக்கீடு முறை அதாவது தனியார் மற்றும் அரசு என அனைத்து நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இவ்வறிவிப்பு வெளியானது முதல் சமூக நீதிக்கு எதிரான செயல்பாடு என்றும் இந்திய மக்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படுவது ஆரோக்கியமான விஷயம் என்றும் பல திசைகளிலிருந்து எதிர்ப்பும் ஆதரவும் வந்தவாறு உள்ளன. இந்த 10% இடஒதுக்கீடு பற்றி கல்வியாளர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…

முனைவர் ரமேஷ், பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழுஇந்திய வரலாற்றில் காலம் காலமாகவே சமூக அடுக்கில் கீழுள்ள மக்கள் ஒடுக்கப்பட்டு பொதுச்செயல்பாடுகள் அனைத்திலிருந்தும் தவிர்க்கப்பட்டனர். எனவே, அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்காக  சமூகநீதியின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இட ஒதுக்கீடு.

அவ்வாறே இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி, சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு அனுசரிக்கப்பட்டுவருகிறது. ஆனால், மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது அது உருவாக்கப்பட்ட காரணத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. ஏனெனில் சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு பதில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை திணிக்கத் துடிக்கிறது மத்திய அரசு.

மேலும் மத்திய அரசின்  எய்ம்ஸ், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது. அங்கு இயல்பாகவே பொதுப்பிரிவு மாணவர்கள்தான் ஆக்கிரமித்துள்ளனர்.  இதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு என்பது வெவ்வேறு இடங்களில் உள்ள கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடங்களில் பொதுப் பிரிவு மாணவர்களையே ஆக்கிரமிக்கச் செய்யக்கூடும்.

ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் வேலையிலேயே முனைப்பு காட்டிவருகிறது மத்திய அரசு. இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் ஏற்கனவே தாழ்த்தப்பட்டோருக்கு இருக்கும் இடஒதுக்கீட்டு சதவீதம் குறைக்கப்படும் அபாயமும் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் 900 பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்காக 10 சதவீதம் இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்கின்றனர்.

அதிகப்படுத்தப்படும் இடங்களுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள், பேராசிரியர்கள், கட்டடங்கள், ஸ்டடி மெட்டீரியல்கள் என  அதற்குண்டான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் என்ன தரமான உயர்கல்வியை இவர்கள் வழங்கப்போகிறார்கள். ஏற்கனவே பல ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமலே காலியிடங்களாக நெருக்கடி நிலையில்தான் உள்ளன. இதில் சீட் எண்ணிக்கை அதிகரித்தால் நெருக்கடி நிலை மேலும் அதிகமாகும். ஆகவே, நடைமுறை சாத்தியம் இல்லாதது இந்த அறிவிப்பு.

முனைவர் விஜய் அசோகன், சுவீடன் இடஒதுக்கீட்டை தகுதி, திறமை, மதிப்பெண் என்ற அளவில் மட்டுமே தவறுதலாக அணுகிவருகிறார்கள் பலர். வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளில் கூட இப்போது, நாடாளுமன்றத்தில் அறிவியல் துறையில், கல்வி நிறுவனங்களில் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பாகத் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு, ஆராய்ச்சியாளராக இருக்கும் நான் அடுத்ததாக பேராசிரியராக உயர வேண்டும் என்ற நிலையில், எனக்கு சக போட்டியாளராக இருக்கும் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இது ஒவ்வொரு நாடும் equal representation, இடப்பங்கீடு, சமத்துவ சமூகம் என்ற நோக்கில் பல்வேறு தளங்களிலும் பல்வேறு வழிமுறைகளில் பின்பற்றும் நடைமுறைதான்.

சில நாடுகளில், சில மாகாணங்களில் பூர்வக்குடி மக்களுக்கென தனி ஒதுக்கீடு இருக்கும். சீனாவில் எல்லா பல்கலைக்கழகங்களிலும் மாகாண வாரியாக இடப்பங்கீடு இருக்கும். பெய்ஜிங், ஷாங்காய் பெருநகர மாணவ, மாணவியரைவிட, மதிப்பெண் குறைந்த திபெத் மலைப்பகுதியையொட்டிய கிராமத்து மாணவன், மாணவியர் இடப்பங்கீட்டின் முறைப்படி பல்கலைக்கழக இடம்பெறுவர்.

இடஒதுக்கீட்டை எதிர்க்கும் அனைவரும் தங்கள் தனி மனித வாழ்க்கையோடே அனைத்தையும் ஒப்பிட்டு தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும் இழந்துவிட்டதாகவும் கருதுகின்றனர். அதனால்தான் அழுது துடிக்கின்றனர். இது சமூகக் கோட்பாடாக கருதும்போது அத்துடிப்பு இருக்காது.

  -வெங்கட்.