நியூஸ் கார்னர்



செய்தித் தொகுப்பு

செயற்கைக்கோள் தயாரிக்க மாணவர்களுக்குப் பயிற்சி!

2019ம் ஆண்டிற்கான இஸ்ரோவின் திட்டங்கள் குறித்து புதுடெல்லியில் இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம் அளித்தபோது, ‘ஆள் இல்லா விண்கலம் அனுப்பும் முதல் திட்டம் 2020ம் ஆண்டிலும், 2வது திட்டம் 2021 ஜூலையிலும், மனிதர்களுடனான விண்வெளி பயணத் திட்டம் 2021 டிசம்பரிலும் செயல்படுத்தப்படும்.

மேலும் இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநில மாணவர்களைக்கொண்டு இளம் விஞ்ஞானிகள் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாதம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்.

மாநிலங்களின் ஒத்துழைப்போடு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். திரிபுராவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி, நாக்பூர், ரூர்க்கேலா, இந்தூர் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

சிறிய செயற்கைகோள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், அவர்களின் செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. மூலம் செலுத்தப்படும். செயற்கைகோள், விண்வெளி துறையிலும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும். இதற்காக இஸ்ரோவில் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

அடிப்படைக் கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள்!

நாடு முழுவதிலும் உள்ள 5.5 லட்சத்திற்கும் அதிகமான 3 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கல்வி நிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், ‘2018ம் ஆண்டு கல்விநிலை அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 56 சதவீதம் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் போன்ற அடிப்படைக் கணக்குகள் கூட தெரியவில்லை. 5ம் வகுப்பு படிப்பவர்களில் 72 சதவீதம் பேருக்கு எளிய வகுத்தல் கணக்குகள் கூட தெரியவில்லை. 70 சதவீதம் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கழித்தல் கணக்குகள் தெரிவதில்லை. நமது மாணவர்கள் ஒரு விஷயத்தை வாசிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

தேசிய அளவில் 8ம் வகுப்பு படிக்கும் 4ல் ஒரு குழந்தைக்கு வாசிக்கும் திறன் இல்லை. 2008 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84.8 சதவீதம் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிக்க தெரிவதில்லை. 2018ல் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 72.8 சதவீதமாக உள்ளது. கணித அறிவைப்பொறுத்தவரை மாணவர்களை விட மாணவிகள் பின்தங்கி உள்ளனர். 44 மாணவிகளும், 50 சதவீதம் மாணவர்களும் மட்டுமே கணக்குகளைச் சரியாக போடுகிறார்கள். அதே சமயம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் கணக்கில் சிறப்பாக உள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITM-ல் எம்.பி.ஏ. படிக்க விண்ணப்பிக்கலாம்!

மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் இயங்கிவரும் ‘அடல் பிஹாரி வாஜ்பாய் - இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட்’ (ஐ.ஐ.ஐ.டி.எம்.) கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மேலாண்மைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: எம்.பி.ஏ., எம்.பி.ஏ., பிஸ்னஸ் அனாலிடிக்ஸ்தேவையான தகுதிகள்: இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். கேட், மேட் , சிமேட், ஜிமேட் போன்ற தேசிய தகுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iiitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 4.2.2019.தேர்வு முறை: டெல்லி, குவாலியர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.மேலும் விவரங்களுக்கு www.iiitm.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.