வாசகர் கடிதம்நல்ல முயற்சி!

தூத்துக்குடி போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் போன்று இனி ஏதும் நடக்கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் புதுரக துப்பாக்கியைக் கண்டுபிடித்துள்ள இளைஞர் குறித்த கட்டுரை அருமை. ரஷ்யா சென்று படித்தாலும் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் கண்டுபிடிப்பை நிகழ்த்தவேண்டும் எனும் சரவணனின் எண்ணத்திற்கு ஒரு ராயல் சல்யூட்.   
-கி.ராஜாமணி, திருச்சி.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பிளாஸ்டிக் பேனாவிற்கு மாற்றாக பசுமைப் பேனாவை கண்டுபிடித்துள்ள அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தினேஷ் செல்வராஜூ பற்றிய தகவல்கள் அற்புதம். தனது பசுமைப் பேனா கண்டுபிடிப்பை மற்ற பள்ளி மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
-இரா.ராமமூர்த்தி, திண்டுக்கல்.

கல்வி-வேலை வழிகாட்டியில் சமகால பிரச்னைகளை பல்வேறு கோணங்களில் ஆராயும் சர்ச்சைப் பகுதி கட்டுரைகள் எப்போதுமே பிரசித்திபெற்றவை. அவ்வகையில் அரசு வேலைக்கு தகுதியற்ற முதுகலைப் படிப்புகள் மற்றும் தவிக்கவிடப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் போன்ற கட்டுரைகள் இன்றைய உயர்கல்வி நிலையையும் தனியார் பள்ளிகளின் தரத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. அதிலும் என்னென்ன பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் தகுதியற்றவை என்பதை விளக்கி அதோடு கல்வியாளர்களின் கருத்துகளையும் இடம்பெறச் செய்தது நல்ல முயற்சி.
  -ஆர்.ராம்குமார், வேலூர்.

விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சாதனை நிகழ்த்துவதற்கான களம் அது என இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, முன்னுதாரணமாக திகழ்கிறார் காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா. கோவில்பட்டி ஏரியாவில் குற்றச்சம்பவங்களைக் குறைத்த அவரின் வீரதீரச் செயல்பாடுகளும், அதற்கு விளையாட்டு ஊன்றுகோலாக இருந்தமையும் விவரிக்கும் கட்டுரை அபாரம்.  
-எஸ்.உலகநாதன், கோவில்பட்டி.