தாழ்த்தப் பட்டோருக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள்..!



ஸ்காலர்ஷிப்

இந்தியாவில் உள்ள சமூகங்களின் பட்டியலில் கடைநிலையில் இருக்கும்  தாழ்த்தப்பட்டவர்கள் சமூக அந்தஸ்த்திலும் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைய அடிப்படையானது கல்வி. குடும்பப் பிரச்னை, வறுமைச் சூழல் போன்ற பொருளாதார காரணிகளால் கல்வி கற்க இயலாமல்போவதை தடுக்கும் வகையில் இந்திய அரசு பல்வேறு உதவித்தொகைகளை ஆண்டுதோறும் அளித்து தாழ்த்தப்பட்டோர் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி பெற வழிவகை செய்துவருகிறது. அவ்வகையில் மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

9 மற்றும் 10ம் வகுப்பு எஸ்.சி. மாணவர்களுக்கான உதவித்தொகை

குடும்ப வறுமைச் சூழலில் உள்ள தாழ்த்தப்பட்ட / பழங்குடி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் இடைநிற்றல் ஆவதை தடுப்பதற்கும் மேலும் அவர்களை மேல்நிலை கல்வி கற்க ஊக்குவிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட
பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டமாகும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு கல்வி ஆண்டின் பத்து மாதங்கள் உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும்  தாழ்த்தப்பட்ட /பழங்குடியினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள். மேலும் அரசால் அங்கீகரிகக்கப்பட்ட பள்ளிகளில் படிப்பவர்களும் மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மற்ற பள்ளிக்கல்வி உதவித்தொகைகளைப் பெறாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாநில அரசின் ஸ்காலர்ஷிப் இணையதளம் சென்று ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்.

துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை

துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டது  பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டமாகும். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்தும், ஹாஸ்டல் மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பத்து மாதங்கள் உதவித்தொகை வழங்கப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் துப்புரவுத் தொழிலாளர்களின்க் குழந்தைகள், மாவட்ட சமூகநலத்துறை அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று விண்ணபிக்கவேண்டும்.

எஸ்.சி. மாணவர்களின் உயர்கல்வி உதவித்தொகை

எஞ்சினியரிங், டிப்ளோமா, முதுகலை, ஆராய்ச்சி போன்ற உயர்கல்வி பயில விரும்பும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான
உதவித் திட்டம் இது. உயர்கல்வியை நான்கு பிரிவுகளாக பிரித்து ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இளங்கலை படிப்புகளான Engineering, Technology, Plan, Archetecture, Design, Fashion Technology, Agriculture, Veterinary, Management, Business Finance/Administration, Computer Science/Application, Medical Management போன்ற முதுகலை படிப்புகள், C.A., I.C.W.A./C.S./I.C.F.A. போன்ற ஆடிட்டர் படிப்புகளும், M.Phil, Ph.D. மற்றும் L.L.B, Integerated L.L.B., L.L.M போன்ற சட்டம் சார்ந்தப் படிப்புகள் குரூப் 1-ல் அடங்கும்.

மருத்துவப் படிப்புகளான B.Pharm, B.Nursing, BFS, Rehabilitation, Dignostics மற்றும் Mass communication, Hotel Management & Catering, Travel/Tourism/Hospitality Management, Interior Decoration, Nutritions & Dietetics, Commercial Art, Financial Services போன்ற படிப்புகள் குருப் 2-ல் பிரிக்கப்பட்டுள்ளன. B.A / B.Sc, /B.Com. மற்றும் M.A/M.Sc,/M.Com./M.Ed. போன்ற கலை படிப்புகள் குரூப் 3-யிலும், vocational, Polytechnic, ITI போன்ற டிகிரி சாராத படிப்புகள் குருப் 4-லும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகைக்கும் ஏற்ப உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேலே கொடுக்கப்பட்ட வகை

களுக்கு ஏற்ப ரீடர் அலவன்ஸ் எனும் கூடுதல் உதவித்தொகையும் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு புத்தகத்திற்கான தொகையும், கல்வி சுற்றுலா மற்றும் முனைவர் படிப்பு படிப்பவர்களுக்கு ஆய்வு எழுதும் கட்டணமும் வழங்கப்படுகின்றன.
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். குடும்ப வருமாணம் ஆண்டுக்கு ரூ2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள மாணவர்கள் மாநில அரசின் ஸ்காலர்ஷிப் இணையதளம் சென்று  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.சி. மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயில உதவித்தொகை

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஐஐடி போன்ற இந்தியாவின் முன்னணி கல்விநிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் வகையில், மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2005-06 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இத்திட்டம். கல்வி பயில ஆகும் டியூஷன் பீஸ், புத்தகம் மற்றும் கணினி போன்ற அனைத்து தொகைகளையும் கணக்கில் கொண்டு ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் அளவில் மாணவர்கள் கல்வி பயிலும் அனைத்து ஆண்டுகளும் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். IIM/IIT/IIIT/AIIMS /NIT/NIFT/NID/Indian Institute Of Hotel Management/National Law University மற்றும் மத்திய அரசின் அனைத்துக் கல்விநிறுவனங்களிலும் சேர்க்கை பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி. மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை
 
முதுகலை மற்றும் வெளிநாடுகளில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்க விரும்பும் எஸ்.சி/எஸ்.டி. மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது இத்திட்டம். Engneering and Management - 32 seats, Pure Sciences and Applied Sciences - 17, Agriculture Sciences and Medicine - 17, International Commerce, Accounting and Finance -17, Humanities and Social Science - 17 என ஆண்டுதோறும் நூறு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் ரூ.11 லட்சம் அளவிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பிஎச்.டி. மாணவர்கள் முதுகலையில் 55% மதிப்பெண்ணும், முதுகலை மாணவர்கள் இளங்கலைப் படிப்பில் 55% என்ற அளவில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

இக்னோவில் மாணவர் சேர்க்கை!

இக்னோ என்று சொல்லப்படும் இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சென்னை மண்டல இயக்குநர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘இக்னோவால் நடத்தப்படும், பட்டப்படிப்புகள், முதுநிலை படிப்புகள், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள், சிறப்பு பி.காம்., எம்.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த அனுமதி, 2023 வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இக்னோவில், அனைத்து வகை படிப்புகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டு(2019-2020) மாணவர் சேர்க்கை, ஜனவரி 15 வரை நடக்கும். விண்ணப்பங்களை https://onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, rcchennai@ignou.ac.in என்ற, ‘இ - மெயில்’ முகவரி, 044 -2661 8438, 2661 8039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

- வெங்கட் குருசாமி