மாவட்டத் தொழில் மையங்கள் வழங்கும் கடன் திட்டங்களும் மானியமும்!நிதி வழிகாட்டல்

வேலை தேடி ஓய்ந்தவர்களுக்கும், சுயதொழில் செய்ய முயல்பவர்களுக்கும் வழிகாட்டும் விதமாக சொந்த தொழில் தொடங்க திட்ட அறிக்கை, சந்தை வாய்ப்பு மற்றும் நிதி வழிகாட்டல்களை இந்தப் பகுதியில் வழங்கிவருகிறோம். இதில், மத்திய/மாநில அரசின் மானியக் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி வருகிறோம். முயற்சியும் கடுமையான உழைப்புக்கான மன உறுதியும் கொண்டவர்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டால் பலருக்கும் வேலையை வழங்கும் தொழில்முனைவோராகலாம்.

தொழில் முனைவோர்களுக்காக2019ஆம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் தொழில்முனைவோர்களுக்கு கருத்துரைகள் மற்றும் வழிகாட்டல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில் தொழில் வணிக துறையின் சென்னை மாவட்டத்திற்கான மண்டல இணை இயக்குநர் எஸ்.எம்.கியாஸ்  தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படும் மானியக் கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல தகவல்களை விவரித்து கூறினார்.

‘‘தொழில் வணிக ஆணையரகம் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத் தொழில் மையங்கள் தொழில் வணிக ஆணையரகத்தின் கண்காணிப்பில் இயங்கிவருகின்றன. வருங்கால தொழில்முனைவோர்கள் தங்களது தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்டத் தொழில் மையங்கள் செய்துவருகின்றன. மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’’ என்று சொல்லும் எஸ்.எம்.கியாஸ் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

திட்டம் - I

புதிய தொழில்முனைவோர் மற்றும்  தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்
(New Entrepreneur-Cum-Enterprise Development Scheme - NEEDS)
திட்டத்தின் நோக்கம்: முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் ரூ.5 கோடி வரையிலான கடன் உதவியை வங்கிகள் அல்லது மாநிலக் கடனுதவி நிறுவனம் மூலம் பெற்று தங்களது புதிய உற்பத்தி மற்றும் சேவைத்
தொழில் நிறுவனங்களை தொடங்க வழிவகை செய்தல்.

தகுதிகள்

*பொதுப் பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயது வரை/சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பெண்கள்/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்).
*பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/
ஐடிஐ அல்லது அங்கீகரிக்கப்பட்ட
நிறுவனங்கள் மூலம் தொழிற்பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
*பொதுப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு/ சிறப்புப் பிரிவினருக்கு மூலதனப் பங்கு 5 விழுக்காடு.
*மொத்த திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மூலதன மானியம் (அதிகபட்சமாக ரூ.30 லட்சம்).
*3 விழுக்காடு பின்முனை வட்டி மானியம்.

திட்டம் - II
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme - UYEGP)
திட்டத்தின் நோக்கம்: சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு முறையே ரூ.10 லட்சம். ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் வரையில் வங்கிக்கடன் பெற்று தொழில் தொடங்க வழிவகை செய்தல்.

தகுதிகள்

*பொதுப் பிரிவினருக்கு 18 வயது முதல் 35 வயது வரை/சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பெண்கள்/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர்/ தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்).
*8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
*குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50
லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
*பொதுப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு, சிறப்புப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 5 விழுக்காடு.
*திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் (ரூ.1.25 லட்சத்திற்கு மிகாமல்).

திட்டம் - III
பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister’s Employment Generation Programme - PMEGP)
திட்டத்தின் நோக்கம்: கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க முறையே ரூ.25 லட்சம், ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்க வழிவகை செய்தல்.

தகுதிகள்

*குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும்.
*ரூ.10 லட்சத்திற்கு மேல் உற்பத்தி தொழில்கள் மற்றும் ரூ.5 லட்சத்திற்கு மேல் சேவைத் தொழில்கள் தொடங்க குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
*குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
*பொதுப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு சிறப்புப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 5 விழுக்காடு (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பெண்கள்/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/ தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்).
*திட்ட மதிப்பீட்டில் 15 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை மானியம்.

திட்டம் - IV
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள்.அ. முதலீட்டு மானியம்: தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும்.
தகுதிகள்

*தமிழ்நாட்டில் எப்பகுதியிலும் தொடங்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் 13 வகையான உந்துதல் தொழில்களை மேற்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
*அரசால் அறிவிக்கப்பட்ட 251 தொழில் பின்தங்கிய வட்டாரங்களில் ஆரம்பிக்கப்படும் அனைத்து புதிய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
*மாநிலத்தில் 385 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்
நிறுவனங்கள்.
*மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கிவரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில் தொடங்கும்போது.
ஆ. குறைந்தழுத்த மின்மானியம்: 20 விழுக்காடு குறைந்தழுத்த மின்மானியம் வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின் இணைப்பு பெற்ற நாள் இவற்றில் எது பிந்தியதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு வழங்கப்படும்.

தகுதிகள்

*மாநிலத்தின் எப்பகுதியிலும் தொடங்கப்படும் அனைத்து உற்பத்திச் சார்ந்த குறுந்தொழில் நிறுவனங்கள்.
*மாநிலத்தின் 385 வட்டாரங்களில் தொடங்கப்படும் அனைத்து வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
*தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 251 வட்டாரங்களில் அமைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
*மேற்கண்ட வகையைச் சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத்தொழில்கள் தொடங்கும்போது.

 இ. மின்னாக்கி மானியம்: இம்மானியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் எப்பகுதியிலும் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வாங்கியுள்ள மின்னாக்கியின் (320 KVA வரை) மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மின்னாக்கி மானியம் வழங்கப்படுகிறது.

ஈ. பின்முனை வட்டி மானியம்: குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப்படுத்துதல் மற்றும் கடன் உத்திரவாத நிதி ஆதாரத் திட்டம் (Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises - CGTMSE) மூலம் பெறும் ரூ.1 கோடி வரையிலான கடன்களின் மீது 5 ஆண்டுகளுக்கு கடனுக்கான வட்டியில் 3 விழுக்காடு என்ற அளவில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.(மாவட்டத் தொழில் மையங்கள் வழங்கும் கடன் திட்டங்கள் பற்றி தொடர்ந்து அடுத்த இதழில் பார்ப்போம்)

தொகுப்பு: திருவரசு