ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படும் இறைச்சி!பொது அறிவு

உணவுக்காக விலங்குகளை துன்புறுத்தாமல் இறைச்சியை உற்பத்தி செய்வது குறித்த ஆய்வு மேலைநாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்துவருகிறது. அவ்வகையில் இஸ்ரேலை சேர்ந்த உணவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அலெப் ஃபார்ம்ஸ், இஸ்ரேலி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து ஆய்வகத்தில் இறைச்சியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. விலங்குகளின் திசுக்களை இன்குபேட்டரில் வளர்த்து மனிதர்கள் உண்ணக்கூடிய வகையில் இறைச்சியை உருவாக்கியுள்ளது. ஆய்வக இறைச்சி உற்பத்தி, உணவுத்தொழில்நுட்பத்தில் மைல்கல்லாக கருதப்படுகிறது.

பின்னோக்கிச் செல்லும் உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் வெப்பநிலைமாற்றம், 21,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பனியுக காலகட்டத்திற்கு உலகத்தைக் கொண்டுபோகும் வாய்ப்பு உள்ளதாக டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பனியுகத்தில் அமெரிக்கா தொடங்கி ஐரோப்பா, ஆசியா என அனைத்து கண்டங்களும் பனிப்பிரதேசங்களாக மாறி பேராபத்தை விளைவித்தன. இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் அதிக வெப்பம் நிலவுவதும்,  தொடர் மழைப்பொழிவும் பனியுக காலத்தில் நிலவிய அசாதாரண சூழலுடன் ஒத்துப்போவதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாற்றம், பூமியில் உயிரினங்கள் தோன்றாத ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சூழலை உருவாக்கியுள்ளதாக கூறுகிறது அக்கட்டுரை. மேலும் இதே சூழல் தொடர்ந்தால் 2150 ஆம் ஆண்டிற்குள் அத்தகைய பேரழிவுக்கான சாத்தியம் உள்ளது என்கிறது ஆராய்ச்சி.

நியூக்ளியர் ஆராய்ச்சி

 சீனாவின் ஹெஃபெய் நகரில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத ரியாக்டரில் ஹைட்ரஜன் அணுவை வெப்பப்படுத்தி நூறு மில்லியன் செல்சியஸ் அளவு வெப்பத்தை உருவாக்கியுள்ளனர் சீன ஆய்வாளர்கள். சூரியனின் நடுப்பகுதி வெப்பத்தைக் காட்டிலும் ஏழுமடங்கு அதிகமுள்ள இவ்வெப்பநிலையைப் பயன்படுத்தி அணு ஆயுதங்களையும், மின்சாரத்தை தயாரிக்கின்றனர்.  

மேலும் ரியாக்டரின் ஆற்றல் கழிவுகள் சூழலுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்தச் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தாலும் ரியாக்டரின் வெப்பநிலைக்கான சரியான எரிபொருளை தேடுவது சவாலான காரியமாக உள்ளது. குறைவான விலையில் எரிபொருட்கள் கிடைத்தால் மட்டுமே, கழிவுகளை ஏற்படுத்தாத இதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தமுடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மரபணு மாற்றப்பட்ட குழந்தைகள் உற்பத்தி

சீனாவைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான ஜியான்குய், அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்ட் மற்றும் ரைஸ் பல்கலைக்கழகத்தில் படித்து சீனாவில் இரண்டு மருத்துவ நிறுவனங்களை நடத்திவருகிறார். எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்களுடன் பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற இயலுமா? என்ற நோக்கில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஏழு பெற்றோர்களின் கருப்பையில் மரபணு மாற்றம் செய்து, மரபணு மாற்றப்பட்ட இரண்டு குழந்தைகளை உருவாக்கியுள்ளார். இவரின் இக்கண்டுபிடிப்பு அறிவியல் உலகில் பரபரப்பு ஏற்படுத்தியதோடு மரபணு மாற்றத்தால் புதிய தலைமுறைக்கு பிரச்னைகள் தொடரும் என மருத்துவ வட்டாரம் கவலை தெரிவித்துள்ளது. மரபணு மாற்றம் என்பது அமெரிக்காவில் குற்றமாதலால் தற்போது சீன அரசும் மரபணு எடிட் செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது.

கார்பன் வரி

சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் காற்றுமாசுப்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கார்பன் வரிவிதிப்பு 2020ம் ஆண்டு முதல் அமலாகவிருக்கிறது. இதன்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒரு மெட்ரிக் டன் கார்பன் வெளியீட்டிற்கு 15 டாலர்கள் அரசுக்கு வரியாக கட்டவேண்டும். மேலும் 2035 ஆம் ஆண்டிற்குள் 25% கார்பன் அளவை கட்டுப்படுத்தவேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால், வருங்காலங்களில் வரி விதிப்பு அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது.

வடக்கு ஐரோப்பா, டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே, போலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகள் கார்பன் வரியை ஏற்று அமுல்படுத்தியுள்ளன. மக்கள் பொதுப்போக்குவரத்தை உபயோகப்படுத்தவும், கார்பன் அளவை குறைக்கவும்  பிரான்ஸ் அரசு பெட்ரோல், டீசல் விலையுடன் கார்பன் வரியையும் இணைத்துக் கொண்டதால் எரிபொருள் அதிக விலையேற்றம் அடைந்தது. அக்காரணத்தினால்தான் பிரான்ஸில் போராட்டம் வெடித்தது.