தென்னக ரயில்வேயில் தொழில் பழகுநராக சேரலாம் !



வாய்ப்பு

4373 பேருக்கு வாய்ப்பு!


இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு வருடமும் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற தொழில்பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன. அவ்வழக்கத்தின்படி 2018-19 ஆண்டுக்கான காலியிட அறிவிப்பைத் தற்போது தென்னக ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி சுமார் 4373 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

பணிகள்: சென்னை மற்றும் சேலம் மண்டலங்களில் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், பெயின்டர், கார்பென்டர், வயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெடிக்கல் லெபாரெட்டரி டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு விருப்பமுள்ள படிப்பு முடித்து புதிதாக வேலை தேடுபவர்கள் மற்றும் முன்னாள் ஐடிஐ மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.சி / எஸ்.டி மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு உண்டு.

கல்வித் தகுதி: விருப்பமுள்ளவர்கள் 50% மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி கொண்டிருத்தல் அவசியம்.  மேலும் ஐடிஐ மாணவர்கள், தேர்ந்தெடுக்க விரும்பும் பணிகளுக்கு ஏற்ற பிரிவில் 50% மதிப்பெண்ணுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   வயது வரம்பு: வெல்டர், பெயின்டர் மற்றும் ஃபிட்டர் பணிகளைத் தேர்ந்தெடுக்க விரும்பும் ஃப்ரெஷ்ஷர்கள்14.12. 2018 அன்றின்படி 15 முதல் 22 வயதிற்குள்ளும் மற்றும் மெடிக்கல் லெபாரெட்டரி டெக்னீசியன் பணியைத் தேர்ந்தெடுத்தவர்கள் 24 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.

பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை: வெல்டர் மற்றும் மெடிக்கல் லெபாரெட்டரி டெக்னீசியன் பணிக்கு 15 மாதங்களும், பெயின்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் பணிக்கு இரண்டு வருடங்களும் பயிற்சிக் காலமாக அனுசரிக்கப்படுகிறது. முதல் வருடப் பயிற்சிக்காலத்தில் ரூ.5,700ம், இரண்டாவது வருடம் ரூ.6,500 மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.7,350ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.  
 
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.  விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rrcmas.in   என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 ஐ செலுத்தி விண்ணப்பித்தல் அவசியம். எஸ்.சி/எஸ்.டி., மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் 13.1.2019 மேலதிக தகவல்களுக்கு www.rrcmas.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட் குருசாமி