நியூஸ் கார்னர்



செய்தித் தொகுப்பு

ஐ.ஐ.பி.எஸ். கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் பாபுலேஷன் சயின்ஸ் கல்வி நிறுவனம் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மும்பையில் செயல்பட்டுவருகிறது. இதில் பல்வேறு நிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்: எம்.ஏ.,/எம்.எஸ்சி., இன் பாபுலேஷன் ஸ்டடீஸ், எம்.எஸ்சி., இன் பயோ-ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்ட் டெமோகிராபி, மாஸ்டர் ஆஃப் பாபுலேஷன் ஸ்டடீஸ், எம்.பில், இன் பாபுலேஷன் ஸ்டடீஸ்/ பயோ-ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்ட் டெமோகிராபி, பிஎச்.டி., இன் பாபுலேஷன் ஸ்டடீஸ்/ பயோ-ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்ட் டெமோகிராபி, போஸ்ட்-டாக்டோரல் ஃபெல்லோஷிப்  கல்வித் தகுதி: முதுநிலைப் படிப்பில் சேர்க்கை பெற இளநிலைப் பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.

எம்.பில். / பிஎச்.டி. படிப்பிற்கு முதுநிலைப்பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றவராக இருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பப் பதிவை ஐ.ஐ.பி.எஸ்., கல்விநிறுவனத்தின் http://iipsindia.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் செய்யலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 4.1.2019.சேர்க்கை முறை: தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு http://iipsindia.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு கட்டாயத் தடை!  

தமிழகம் முழுவதும், 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல், பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்தத் திட்டத்தில் தடை செய்யப்படுகிறது.

இதற்காகத் துறை வாரியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, பள்ளிக் கல்வித்துறையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துவரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

‘நொறுக்குத் தீனி, மதிய உணவு போன்றவற்றை, இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்துவரக்கூடாது. மறுசுழற்சி செய்யமுடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக்கூடாது’ என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல், எந்தச் சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் வான் அறிவியல் ஆய்வுக்கூடம்!

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள வான் அறிவியல் ஆய்வகம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவுப் பசியை தூண்டும் வகையில், சேலம் மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வான் அறிவியல் தொழில்நுட்பக் காட்சிக்கூடத்தை பயிற்சி மையத்துடன் அமைத்துள்ளது இஸ்ரோ. இந்த ஆய்வகம் கிராமப்புற மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வகத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை சாதனைகளைப் பற்றி விளக்கும் விதமாக பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளின் மாதிரிகள், விமானப்படை விமானங்களின் மாதிரிகள், நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனைப் பார்வையிடும் மாணவர்கள் வான் அறிவியலைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இஸ்ரோவில் மட்டுமே கிடைக்கக்கூடிய 43 வகையிலான தலைப்புகளில் புத்தகங்களும் ஆய்வுக்கூடத்தில் உள்ளன.

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள்!

பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியா உட்பட 145 நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. பிரிட்டனின் சிறந்த கல்வி நிறுவனங்களின் மூலம் ‘ஃப்யூச்சர் லேர்ன் கம்பெய்ன்’ என்கிற கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆன்லைன் படிப்பு வழங்கப்படுகிறது. இதில் பிசினஸ் அண்ட் மேனேஜ்மென்ட், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் மீடியா, ஹெல்த் அண்ட் சைக்காலஜி, ஹிஸ்டரி, லாங்குவேஜ் அண்ட் கல்ச்சர்ஸ், ஸ்டடி ஆஃப் லா, லிட்ரேச்சர், நேச்சர் அண்ட் என்விரான்மென்ட், பாலிடிக்ஸ் அண்ட் தி மாடர்ன் வேர்ல்டு, சயின்ஸ், எஞ்சினியரிங் அண்ட் மாத்தமேட்டிக்ஸ், ஸ்டடி ஸ்கில்ஸ், டீச்சிங், டெக் அண்ட் கோடிங் என மொத்தம் 13 துறைகள் அடங்கும்.

இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் 320 ‘மாசிவ் ஓபன் ஆன்லைன் கோர்சஸ்’ (எம்.ஓ.ஓ.சி.,) படிப்புகளை, பிரிட்டனின் 49 கல்வி நிறுவனங்களின் மூலம் பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கவுள்ளது. ஒவ்வொரு  துறையிலும் ஆழமான தொழில்முறை சார்ந்த கல்வியின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குவதே இந்தக் கல்வித் திட்டத்தின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவருக்கு ஒரு சான்றிதழ் படிப்பு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு மற்ற படிப்புகளில் சேர விரும்பினால் அதற்கான தொகையைச் செலுத்த வேண்டும். படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பிரிட்டன் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்குக் குறிப்பிட்ட கல்வித் தகுதியோ வயது வரம்போ கிடையாது.

சேர்க்கை முறை: இந்தக் கல்வித் திட்டத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையம் மூலம், வழங்கப்படும் படிப்புகள், கால அளவு, கற்பிக்கும் ஆசிரியர்கள், வழங்கும் கல்வி நிறுவனம் என அனைத்து தகவல்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். பின்னர் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்வு செய்து, அதில் தங்களைப் பற்றிய விவரத்தை பதிவு செய்யவேண்டும். அது சார்ந்த அனைத்துத் தகவல்களும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்:16.1.2019.
மேலும் விவரங்களுக்கு www.britishcouncil.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.