‘நான்’ என்று எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை அனைவருக்கும் அவசியம்!உளவியல் தொடர்- 56

உடல்... மனம்... ஈகோ!


Great people have great egos; may be that’s what makes them great.  - Paul Arden­
  -ஈகோ மொழி

பரவலான ஈகோ நிலையின் தன்மையை முழுமையாக உணராமல், அவ்வாறான ஈகோ நிலையில் இருப்பதாக, சிலர் போலியாக தங்களுக்குள் ஒரு கற்பனையை வளர்த்துக்கொள்வார்கள். அப்போது ‘ஈகோ தவறானது, ஒரு நாளும் ஈகோவை வெளிப்படுத்தவே கூடாது, ஈகோவை வாழ்க்கையினின்றும் முழுமையாக வெளியேற்றிவிட வேண்டும்‘ என்று தவறாக எண்ணுவார்கள்.

உண்மையில் அப்படியான எண்ணம் ஒருபோதும் பலனளிப்பதேயில்லை.ஈகோ விலக்கிவிட வேண்டிய செயல் அல்ல, அது உடலுக்குத் தொல்லை தரும் புற்றுநோயோ, இறந்த திசுவோ அல்ல…. அது ஓர் உணர்வு. பசி, தாகம், தூக்கம், காமம் போன்று மனிதனின் அடிப்படை உணர்ச்சி நிலைகளுள் ஒன்று. அதனால் அதை வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க முடியாது. விலக்கி வைக்க நினைக்கவும் கூடாது.

அது இயல்பானது. எப்போதும் ஏதேனும் ஒரு ரூபத்தில் எதிர்ப்பட்டே தீரும். சிலர் அது கூடாது ஒதுக்கிவிட வேண்டும் என்று உணர்ந்து சொல்லும்போது, அது தற்காலிகமாக இல்லாதது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை (Hallucination) ஏற்படுத்தித் தரும்.

ஆனால், அப்படி வலுக்கட்டாயமாக ஈகோவை வெளிப்படுத்தாமல் தடுத்துக்கொண்டிருப்பது அவர்களை உணர்ச்சியற்றவர்களான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, எது சொன்னாலும் அமைதியாக கேட்டுக்கொண்டு போகக்கூடியவர்களாகவும், எதற்கும் லாயக்கற்றவர்களாகவும் மாற்றிவிடும்.

இதுமாதிரியான தவறுகளால் அவர்கள் தங்களுக்கான பொறுப்பையும் நிறைவேற்றிக்கொள்ளவும் மாட்டார்கள், தங்களது அடிப்படை உரிமையையும் அடையவும் மாட்டார்கள். மேலும் ஈகோவை வலுக்கட்டாயமாக வெளிப்படாமல் தடுப்பதால் பரவலான ஈகோ நிலையை அடைவதற்கு பதிலாக அடக்கப்பட்ட ஈகோ நிலை கொண்ட மனிதர்களாக மாறிப்போவார்கள்.

அது தான் ஆபத்து. ஈகோவின் நிலைகளில் ஒன்றான ஆவேசமான ஈகோ நிலைக்கும் பரவலான ஈகோ நிலைக்குமான வித்தியாசத்தில், ஆவேசமான ஈகோ நிலை கொண்ட ஒருவன் இந்த உலகமே தனக்கு சொந்தமானது என்று எண்ணுவான். அதுவே பரவலான ஈகோ நிலை கொண்டவன், உலகத்திற்கு தான் சொந்தமானவன் என்று எண்ணுவான்.

ஆவேசமான ஈகோ நிலை கொண்ட மனிதனுக்கு சண்டை பிடித்தல் விருப்பமானதாக இருக்கும், அதுவே பரவலான ஈகோ நிலை கொண்டவனுக்கு ‘சேவை‘ செய்வது விருப்பமானதாக இருக்கும்.

முதலாமவர் அவரோ சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாதவராக இருப்பார். இரண்டாமவரோ சகிப்புத்தன்னையின் மொத்த உருவமாக இருப்பார். ஆவேசமான ஈகோ நிலை கொண்ட மனிதர் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் தான் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வைத்துக்கொண்டிருப்பார்.

பரவலான ஈகோ நிலை கொண்ட மனிதருக்கு அப்படி ஒரு எண்ணம் கொஞ்சமும் இருக்காதுஈகோவின் மற்ற அடிப்படை நிலைகளுக்கும், பரவலான ஈகோ நிலைக்குமான மற்றொரு முக்கிய வித்தியாசம், மற்ற எல்லா ஈகோ நிலைகளிலும் ‘வெற்றி’ மட்டுமே குறிக்கோளாக இருக்கும்.

அதுவே பரவலான ஈகோ நிலையில் சேவை-உதவி தான் பிரதானமானதாக இருக்கும். காரணம், வாழ்க்கையில் ‘உயர்வு‘ (Greatness) என்பது பதவி, அதிகாரம், அந்தஸ்து, கௌரவங்களால் கிடைப்பதில்லை, அது அன்பாலும், நன்னடத்தையாலும், சேவை மனப்பான்மையாலும், பணிவினாலும் மட்டுமே கண்டடையக்கூடியது என்பதை முழுமையாக நம்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த வழியிலேயே அதை அடையவும் செய்வார்கள்.

வாழ்க்கையில் சில மனிதர்கள் மட்டுமே இத்தனை உயர்வான இறைத்தன்மைக்கு இணையான நிலையை அடையக்கூடியவர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் ஒருசில மணித்துளிகள் மட்டுமே அவ்வாறான நிலையைத் தொட்டுச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

மனித வாழ்க்கையின் மதிப்பை Survival, Success & Service என்று முப்பரிமாண கூறுகளாகப் பிரித்து அளப்பார்கள். அதற்கு ஈகோவின் பயன்பாடு மிகவும் அவசியம். குறிப்பாக முதல் இரண்டு நிலைகளின் விஸ்தரிப்பிற்கு ஈகோ மிகவும் அவசியமானது. அதுவே மூன்றாவது கூறுக்கு ஈகோவைக் கடந்து அதற்கு அப்பால் செல்ல வேண்டும்... அப்போதுதான் வாழ்க்கை முழுமையடையும்.

ஈகோ எப்போதும் ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றிக்கான முக்கியமான கல்லாக விளங்குகிறது… தனிமையில் இருக்கும்போதும், பெரியவர்களுடன் உரையாடும்போதும் ஈகோ இல்லாமல் இயங்கவேண்டும் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நடை முறையில் ‘நீ பெரியவனா, நான் பெரியவனா? யார் விட்டுக்கொடுப்பது?’ போன்ற கேள்விகள் பூதாகரமாக எழுந்து நின்றபடியே இருக்கிறது.

இந்தியக் குடும்பங்களில் குழந்தைகளின் வாழ்க்கை முறையானது பெரும்பாலும் பெற்றோர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. குடும்பச்சூழலிலிருந்து குழந்தைகள் சமூகத்தில் எப்படி பழகவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவர்களின் தாயும், அவர்களைச் சார்ந்த பெண்களுமே தீர்மானிக்கிறார்கள்.

ஆண் பிள்ளைகளும்,பெண் பிள்ளைகளும் சமூகவெளியில் எப்படி இயங்கவேண்டும் என்பதை தனித்தனியாக பிரித்தே வைத்திருக்கிறார்கள். பெண் பிள்ளைகள் தங்களின் தாயை பிரதிபலிப்பவர்களாகவும், ஆண் பிள்ளைகள் தங்கள் தந்தையை பிரதிபலிப்பவர்களாகவும் வளர்க்கிறார்கள்.

இந்தப் பிரதிபலிப்பின் வாயிலாகத்தான் அடுத்தவர் மீது ஆளுமை செலுத்துவதிலும், கோபம் என்ற உணர்ச்சிகளை கம்பீரமாக வெளிக்காட்டுவதும் வீரமான அழகு என்பதை சிறுவயது முதலே குழந்தைகள் நம்பத் தொடங்குகிறார்கள். இதுவே அவர்களின் மனதின் அடியில் அகந்தையாக உறைந்துபோகிறது.  மனித வாழ்க்கைப் பயணத்தில் ‘நான்’ என எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று.

அதை ஒரு கருணையின் துணை என்றே சொல்லலாம். அறிவின் செயல்பாட்டினால் எழுந்து நிற்கும் தணியா ஆணவம் (ஈகோ) ஒவ்வொரு மனிதர்களுக்கும் இறுதிவரை அருந்துணையாக இருந்துகொண்டேயிருக்கும்.  மனித வாழ்க்கை என்பது… ஒவ்வொரு தனி மனிதனின் அந்தரங்க ஈகோவின் அழகிய பிரதிபலிப்புதான்.

  - நிறைவுற்றது

நன்றி - உதவிய புத்தகங்கள்:

* I’m OK. You’re OK    - by Dr.Thomas A.Harries
* Games People Play  - by Dr.Eric Bernent
* Born to Win - by Dorthy Jongeward & Muriel M.James
* Don’t say YES when you want to say NO- by Herbert Fensterheim & Jean Baer
* Self Talk - psychology for Better Living

குரு சிஷ்யன் கதை

குருவாய் வழிகாட்டு!

ஆசிரமத்துக்கு குருவை பார்க்க வந்தவர்கள் ஒரு தட்டில் பழங்கள் கொண்டுவந்திருந்தனர்.குரு சிஷ்யனைப் பார்த்து ‘‘கத்தியை எடுத்து வா’’ என்றார். சிஷ்யன் எடுத்துவந்து, அதன் கைப்பிடி பகுதியை குருவிடம் நீட்டினான். குரு புன்னகைத்தபடி அதை வாங்கிக்கொண்டே, “உனக்கு சிறகுகள் வளர்ந்துவிட்டன. நீ… பறக்கத் தயாராகிவிட்டாய்“ என்றார்.குருவை பார்க்க ஆசிரமத்துக்கு வந்திருந்தவர்கள் புரியாமல் சிஷ்யனைப் பார்த்தார்கள்.

அப்போது ஒருவன்,“குருவே, ஒரு சந்தேகம்… கேட்கலாமா?’’என்றான்அதற்கு குரு,“அதை அங்கே கேள்’’ என்று சிஷ்யனை கைகாட்டினார்.வந்தவன்,“ஐயா,ஒரு மனிதனின் முன்னேற்றம் வளர்ச்சி எதைப் பொறுத்தது?” என்றான்.சிஷ்யன்,”அது நீங்கள் கழுதையா? எருமையா? குதிரையா? என்பதைப் பொறுத்தது” என்றான்.“வந்திருந்தவன் நீங்கள் சொல்வது புரியவில்லையே’’ என்றான்.

சிஷ்யன் சிரித்தபடி, ’’ஒரு தட்டு தட்டினால்,கழுதை பின்னால் எட்டி உதைக்கும். எருமை அப்படியே நிற்கும். குதிரை பாய்ந்து ஓடும். அதேபோல், யாராவது ஒருவர் ஒரு சொல் திட்டினால், சிலர் மீண்டும் பல சொற்களைப் பிரயோகித்து திட்டுவார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துவிடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டுக்கும் அவமானத்திற்கும் நேரெதிராய்ச் செயல்படுவார்கள்.

குதிரையைப் போல பாய்ந்து செல்வார்கள். . பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்குச்சரியாய்ச் சண்டைக்கு நிற்பதும் ஒரே சக்திதான், முன்னோக்கிப் பாயாததால் இவர்களிடம் முன்னேற்றம் இருப்பதில்லை. கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாயை மூடிக்கொண்டிருப்பதும் ஒன்றே.

இவர்கள் வாழ்வு வெறுமையாகத்தான் இருக்கும். முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல், அதையும் தன்னைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதும் ஒன்றே. இப்படிப்பட்டவரது முன்னேற்றம் அசுர வளர்ச்சியாக இருக்கும்” என்றான் சிஷ்யன்.

குரு எழுந்து வந்து சிஷ்யனை தட்டிக் கொடுத்தார். அருகில் கிடந்த ஒரு கம்பை எடுத்து சிஷ்யனிடம் நீட்டி, “போதும் தம்பி. உன் பாத்திரம் நிறைந்துவிட்டது. புறப்படு’’ என்றார்.சிஷ்யன் அதை பணிவாய் பெற்றுக்கொண்டு ‘‘எங்கு செல்வது குருவே?’’ என்று கேட்ட சிஷ்யனிடம், ‘‘உனக்கென்று சில சீடர்கள், சில மக்கள், உபதேசங்கள் என நீ இனி குருவாக வழிகாட்டு’’ என்றார்.குருவின் பாதங்களில் விழுந்து வணங்கி….  புறப்பட்டான் குருவாய்…ஆசிரமத்தை நோக்கி எழுந்துநடந்தார் குரு!

மிக்க அன்புடன்

ஸ்ரீநிவாஸ் பிரபு