+2 உயிரி தாவரவியலில் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்!



+2 பொதுத்தேர்வு டிப்ஸ்

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் +2 மாணவர்கள் அவசியம் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் கல்லூரிப் படிப்பையே தொடரமுடியும் என்பதை நினைவில் வைக்க வேண்டியது அவசியம். காரணம், தேர்வு முறையில் மாற்றம் கணக்கில் கொள்ளப்படும் மதிப்பெண்களில் மாற்றம் என்ற தமிழக கல்வித்துறையின் குழப்படிகள்தான்.

‘‘மாணவர்களின் மருத்துவத்துறை சார்ந்த கனவை நிஜமாக்க முக்கியமான பாடம்தான் உயிரி தாவரவியல். விடாமுயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் இப்பாடத்தில் முழு மதிப்பெண்களையும் அள்ளலாம்’’ என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தாவரவியல் ஆசிரியை திருமதி எம்.ரமணி. அவர் தரும் வழிகாட்டுதலைப் பார்ப்போம்…

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் இருந்தாலும் பெரும்பாலான நீட் வினாக்கள் மேல்நிலைப் புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. எனவே, மாணவர்கள் ஆழ்ந்து படித்தால் நீட் தேர்வினையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.

பிற மருத்துவம் சார்ந்த படிப்புகள் +2 மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெறும். அதற்கு இப்பாடம் உங்களுக்குக் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.இந்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்கு புதிய வினாத்தாள் அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

அதன்படி உயிரியல்-தாவரவியல் பாடத்திற்கு 50 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயிரியல் விலங்கியலுக்கும் இதே போலதான் மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் இரண்டரை மணிநேர தேர்வில் ஒன்றேகால் மணிநேரம் உயிரி-தாவரவியலுக்கு ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

இதில் 15 மதிப்பெண் அக மதிப்பீட்டிற்கும், 35 மதிப்பெண் கருத்தியல் தேர்விற்கும் என இரண்டு பாடங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தாவரவியலில் கருத்தியல் தேர்வில் 1, 2, 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இந்த ஆண்டு, புளூ பிரின்ட்’ இல்லை என்பதால் மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு முழு மதிப்பெண்களை பெற முயற்சிக்க வேண்டும்.

உயிரி தாவரவியலில் மொத்தம் 6 பாடங்கள் உள்ளன. உயிரி விலங்கியலைவிட இப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எளிது. ஆனால், கவனக்குறைவினால் மட்டுமே மதிப்பெண்கள் பறிபோவது இப்பாடத்தில் நடக்கும்.உயிரியல் பாடத்தைப் பொறுத்தவரை அவசியமான குறிப்புகளைத் தெளிவான கையெழுத்தினால் எழுத வேண்டும்.

நீலம்   அல்லது கறுப்பு நிற பேனாக்களில் ஏதாவது ஒரு நிறத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வண்ணங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மாணவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். படங்களை வரைய பென்சில்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு மதிப்பெண் வினாக்கள்

*இந்த ஆண்டு முதல் உயர் சிந்தனை வினாக்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கு ஏற்றாற்போல் பாடப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் அடிக்கோடிட்டுப் படிக்க வேண்டும்.

*புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள பயிற்சி வினாக்கள் மட்டுமல்லாது, முக்கியமான கலைச்சொற்கள், வரையறைகள், அடைப்பிற்குள் வழங்கப்பட்டுள்ள தகவல்கள், தாவரவியல் பெயர்கள் மற்றும் தாவரங்கள் அதன் பொருளாதார முக்கியத்துவம் போன்றவற்றை அவசியம் படிக்க வேண்டும்.

*இப்பகுதியில் 8 வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

*ஆறு பாடங்களுக்கும் சரி சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள்

*இப்பகுதியில் ஆறு இரண்டு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்படும். இதில் 4 கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். அதேபோல் 5 மூன்று மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் மூன்று கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.

*மூன்று மதிப்பெண் வினாக்களில் 18-வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். இவ்வினா கடந்த ஆண்டுகளில் முதல் பாடத்திலிருந்தும் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாளில் மூன்றாவது பாடத்திலிருந்தும் கேட்கப்பட்டுள்ளது.

*2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களுக்கு பெரியதாக வேறுபாடு இல்லை. 3 மதிப்பெண் வினாக்களுக்கு கூடுதல் குறிப்புகள் எழுத வேண்டியிருக்கும்.

*இப்பகுதிக்காக வரையறைகள், எடுத்துக்காட்டுகள், வகைகள், பயன்கள், பண்புகள், வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகள் என்பது போன்ற வினாக்களுக்கு மாணவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ளலாம்.

ஐந்து மதிப்பெண் வினாக்கள்

*இப்பகுதியில் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். either or என்ற முறையில் இடம்பெற்றிருக்கும். இரண்டு வினாக்களுக்கும் விடையளிக்க
வேண்டும்.

*அட்டவணைகள், வரைபடங்கள் (cycle) பண்புகள், பயன்கள், அமைப்புகள் மற்றும் வகைகள் போன்ற தலைப்பின்கீழ் மாணவர்கள் தயார் செய்துகொள்ளலாம்.

*1, 2, 4, 5 ஆகிய நான்கு பாடங்களிலிருந்து 5 மதிப்பெண் வினாக்கள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம்.

*தேவையான இடங்களில் படங்கள்வரையவேண்டும்.

*வினாத்தாளில் இடம் பெறும் ஒவ்வொரு வினாவையும் அதன் கடைசி வார்த்தை வரை படித்துப் புரிந்துகொண்ட பிறகே விடையளிக்க வேண்டும். அப்போதுதான் வினாவிற்கு ஏற்ற விடையினை எழுத முடியும். தவறான விடையினை எழுதுதல் தவிர்க்கப்படும்.

*அலங்கரிப்பது, அழகுபடுத்துவது என நேரத்தை வீணாக்காமல் போதிய நேரத்தில் முறையான பயிற்சி மேற்கொண்டால் உயிரி-தாவரவியல் பாடத்தில் முழு மதிப்பெண் அள்ளலாம். வாழ்த்துகள்.

(மாதிரி வினாத்தாள் அடுத்த பக்கங்களில்...)