தீர்வு காணப்படாத நீட் தேர்வு சர்ச்சைகள்..!சர்ச்சை

உயர்கல்வி தொடர்பாக ஆந்திர அரசுக்கு எதிராக உன்னிகிருஷ்ணன் என்பவர் 1993ல் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் தன்னாட்சி மற்றும் சுயநிதிக் கல்லூரிகளை தனியாரும் தொடங்கலாம் என உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஏகப்பட்ட தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

கட்டுப்பாடுகள் இல்லாமல் அதிக அளவில் கல்லூரிகள் முளைத்ததால் கல்வித் தரம் குறைந்தது மட்டுமில்லாமல் உயர்கல்வி பெரிய அளவில் பணம் புழங்கும் வியாபாரமாகிவிட்டது.

இதில் மருத்துவக் கல்வியும் தப்பவில்லை. இந்த நிலையை சீர்திருத்தவே இந்திய மருத்துவ கவுன்சில் ‘நீட்’ என்ற தேர்வை கொண்டுவர உள்ளதாக 2013-ல் தீர்மானம் போட்டது. வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிடமுடியாது என்பது அவர்களின் வாதம்.

நீதிபதிகள் அனில் தவே, அல்டாமஸ் கபீர், விக்கிரம்ஜித் சென் ஆகியோர் அடங்கியஅமர்வு இந்த வழக்கை விசாரித்தது. முடிவில், ‘நீட்’ தேர்விலிருந்து கிறிஸ்தவக் கல்லூரிக்கு விதிவிலக்கு தர முடியாது என அனில் தவேவும், விலக்களிக்க வேண்டும் என மற்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை எழுதினார்கள். கடைசியில், இருவர் தீர்ப்பே இறுதிசெய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அல்டாமஸ் கபீரும் விக்ரம்ஜித் சென்னும் ஓய்வுபெற்ற நிலையில் அனில் தவே உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாகப் பணியைத் தொடர்ந்தார். அப்போது, ‘நீட்’விவகாரத்தில் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது மருத்துவக் கவுன்சில்.

அனில் தவே தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது. முடிவில், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘நீட்’தேர்வு கட்டாயம், இதை அடுத்த கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும் என ஏப்ரல் 11, 2016-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

நாடு முழுவதும் அரசுக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களில் 85 சதவீத இடங்கள் மாநில அரசும், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசும் நிரப்பிவந்தன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே நீட் தேர்வு நடைமுறையைப் பின்பற்றிவந்தது. இந்நிலையில் 2016ம் ஆண்டு அவசர அவசரமாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது.

நீட் தேர்வை உடனடியாக அமல்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இதன் விளைவாக 2016-2017ம் ஆண்டில் நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசு நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை தன்னுடைய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. வசம் வழங்கியது. அதன்படி அந்த ஆண்டு மே 5ம் தேதி, ஜூலை 24ம் தேதி என இரண்டு கட்டங்களாக நீட் தேர்வு மற்ற மாநிலங்களுக்கு நடந்தது.

தமிழகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி, தமிழக அரசு சட்டசபையில் இரண்டு சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது.

ஆனால், மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டியதால் அந்த மசோதாக்களுக்கு இதுவரை குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தரவில்லை. அதனால் கடந்த 2 கல்வி ஆண்டுகளாக (2017-2018, 2018-2019) நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

தவறான மொழிபெயர்ப்பு நீட் தமிழ் வினாத்தாளில் 196 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வு முடிவு வெளியானதும், சி.பி.எஸ்.இ .நீட் மதிப்பெண் பட்டியல் வெளியிடுவதில்லை. மாறாக, யூசர் ஐடி, பாஸ்வேர்டு அளித்து மாணவர்கள் தங்களின் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளலாம்.

இதனால் நீட் மதிப்பெண் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதுதவிர ஒவ்வொரு மாநிலத்திலிருந்து, நீட் தேர்வு தொடர்பாக ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அங்கு நிலுவையில் உள்ளது.

தமிழக மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்கள் சேர முடியுமா என்று தமிழக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வெளி மாநில மாணவர்கள், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்,சேர முடியும். ஆனால், தமிழக அரசின்கீழ் உள்ள 85 சதவீத இடங்களில் தமிழக மாணவர்கள் மட்டுமே சேரமுடியும்.

வெளி மாநில மாணவர் ஒருவர் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழகத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருநதால் அந்த மாணவரும் தமிழக மாணவராகவே கருதப்படுவார். இது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. அதே நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு வெளிமாநிலத்தில் படித்த மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ளவர்கள். ஆனால், குறிப்பிட்ட மாணவர் அல்லது மாணவியின் பெற்றோர் தமிழகத்தில் படித்திருக்க வேண்டும்.

மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் வெளிமாநிலத்துக்குச் சென்ற ஒருவரின் பேரக்குழந்தைதமிழக மாணவராக கருதப்படுவதில்லை. அதனால் உரிய விதிகளின்படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துகிறோம். முழுக்க முழுக்க தமிழக மாணவர்களே மருத்துவ மாணவர் சேர்க்கையில் பங்கேற்று சீட் தேர்வு செய்கின்றனர்’’ என்றனர்.

நீட் தேர்வுச் சிக்கல்கள் தீர்வு காணப்படாமலே தேர்வு மட்டும் மூன்றாம் ஆண்டாக நடத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் சமர்ப்பிக்க கால அவகாசமும் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் வேறு என்னென்ன கட்டுப்பாடுகள், குழப்பங்கள், தடுமாற்றங்கள் மாணவர்களை அலைக்கழிக்கப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடரும் சர்ச்சைகள்...

*2017 ஏப்ரல்: நீட் தேர்வுக்கு எப்படியும் விலக்கு பெற்றுவிடுவோம் என்று தமிழக அமைச்சர்கள் சொல்லிவந்தனர். ஆனால்  நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக மருத்துவ இடங்களுக்கு விலக்கு வழங்க முடியாது என்று மத்திய சுகாதாரத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உச்சநீதிமன்றம் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவில்லை.

*2017 மே: நீட் தேர்வு விண்ணப்பக் கையேட்டில் பல்வேறு உடைக் கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. குஜராத் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் உடைக்கட்டுப்பாடு நேரக்கட்டுப்பாடு பெரிய அளவில் பின்பற்றப்படவில்லை. ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு மாணவர்களும் பெற்றோர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

*2017 ஜூன்: தமிழக எம்.பி.பி.எஸ்; பி.டி.எஸ். இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தி, ஆங்கிலத்தில் பேசினர். இவர்கள் வெளிமாநில மாணவர்கள் என்றும் முறைகேடாகத் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்ததாகவும், தமிழக அரசு அதற்குத் துணைபோகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

*செப்டம்பர் 1: நீட் தேர்வு நடைமுறையால் மருத்துவ இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

*2018 மே: மே 6ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து 13 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். தமிழகத்திலிருந்து 1.2 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 1.05 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.

கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கியதால் 15 ஆயிரம் தமிழக மருத்துவ மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோனது. வெளியூர்களுக்கு நீட் தேர்வு எழுத பிள்ளைகளை அழைத்துச் சென்று, அலைக்கழிப்பால் பெற்றோர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

- தி.சுந்தர் பார்த்தசாரதி