+2 வேதியியலில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்!+2 பொதுத்தேர்வு டிப்ஸ்

+2 மாணவர்களே பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில்தானே நடைபெறப்போகிறது அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடாதீர்கள். கண்ணை மூடித்திறந்தாற்போல் தெரியும் தேர்வு வந்துவிடும். ஆகவே இப்போதிருந்து திட்டமிட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.
‘‘+2 வேதியியல் பாடம் NEET/IIT போன்ற நுழைவுத் தேர்விற்கு மிக முக்கியப் பாடமாக உள்ளது. வேதியியல் பாடத்தை முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெறமுடியும்.’’ என்று கூறும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் P.A.செந்தில்குமார் வழங்கும் டிப்ஸ்களைப் பார்ப்போம்…

 +2 பொதுத் தேர்வில் இந்த ஆண்டு முதல் புதிய வினாத்தாள் அமைப்பு (Question Paper) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்த மதிப்பெண்கள் 70 மட்டுமே. வினாத்தாள் வடிவமைப்பு (Blue Print) இல்லை. எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும். எனவே, அனைத்துப் பாடங்களையும் படித்தால் மட்டுமே முழுமையான மதிப்பெண்களைப் பெறமுடியும். அதே சமயம் மற்றும் பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் மிக முக்கியம் ஆகும்.

* ஒரு மதிப்பெண் வினாக்கள் (சரியான விடையைத் தேர்வு செய்தல்) 15 கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும். ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் 15 மதிப்பெண்கள் ஆகும்.*இரண்டு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 9 கேட்கப்படும். அதில் 6-க்கு விடையளிக்க வேண்டும். அதில் வினா எண் 18-க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 12 ஆகும்.

*மூன்று மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 9 கேட்கப்படும். அதில் 6-க்கு விடையளிக்க வேண்டும். அதில் வினா எண் 27 கட்டாயம் விடையளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 18 ஆகும்.

*ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஐந்து கேட்கப்படும். அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும். இந்தப் பகுதி ‘அல்லது’ வகையைச் சார்ந்தது. ஒரே எண்ணில் இரண்டு கேள்விகள் கேட்கப்படும். அதில் ஒன்றிற்கு விடையளித்தல் வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 25 ஆகும்.
+2 வினாத்தாள் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாடத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். பாடத்தின் அனைத்துப் பகுதிகளையும் படித்தல் மிகமிக அவசியம்.

ஒரு மதிப்பெண் வினாக்களில் புரிதல் மிகவும் அவசியம் ஆகும். கூற்று மற்றும் காரணம் வகையில் கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம். எடுத்துக்காட்டாக, கூற்று: ஹேபர்முறையில் NH3 உருவாதல் வினையில் என்ட்ரோபி குறைகிறது.காரணம்: வினை விளை பொருட்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை வினைபடு மூலக்கூறுகளின் எண்ணிக்கையைவிட குறைவு.

  (அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  (ஆ) கூற்று மற்றும் காரணம் சரி.
  (இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  (ஈ) கூற்றும் மற்றும் காரணம் தவறு.

  வினை விளைபொருட்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை வினைபடு பொருட்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையைவிட அதிகம் இருந்தால்தான் என்ட்ரோபி அதிகரிக்கும் என்ற காரணத்தை புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் மேற்கண்ட முறையில் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். அதேபோல் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு ஒரே கேள்வியாக ஐந்து மதிப்பெண்ணாக இடம்பெறும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும். சான்றாக

  (i) மிணைப்புத்தரம் என்றால் என்ன? (2 மதிப்பெண்)
  (ii) பொட்டாசியம் அளவின் கடைசி எலக்ட்ரானின் நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பை கணக்கிடு. (3 மதிப்பெண்) மேலே உள்ளதுபோல் இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண்களாகப் பிரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பாடத்தை இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண்களாகப் பிரித்துப் படித்தால் நலம் பயக்கும்.காரணம் கூறுதல், கணக்குகள், முக்கியத்துவம் மாற்றுதல் போன்ற முறையில் கேள்விகளையும் அவற்றுக்கான விடைகளையும் படித்தல் மதிப்பெண்களை அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

  தேர்வு நடைபெறும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். இதனுடன் 10 நிமிடம் வினாத்தாள் வாசிப்பதற்கும் 5 நிமிடம் விடைத்தாளில் உள்ளவற்றை சரிபார்ப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, மொத்த நேரம் 2 மணி 45 நிமிடங்கள் ஆகும்.
தேர்வுநேரத்தையும் புதிய வினாத்தாள் வடிவத்தையும் மனதில் கொண்டு இப்போதிருந்தே படித்து பயிற்சி செய்து தேர்வுக்கு
தயாராகுங்கள்! வாழ்த்துகள்!

(மாதிரி வினாத்தாள் அடுத்த பக்கங்களில்...)