தமிழக அரசு கற்றல் குறைபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்!ஆலோசனை

டிஸ்லெக்ஸியா (Dyslexia) என்று சொல்லப்படும் கற்றல் குறைபாடு பற்றிய எந்தவிதமான விவாதங்களும் பள்ளிக்கல்வித் துறையில் பெரிய அளவில் நிகழாத சூழலே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை கற்றல் குறைபாடுள்ள மாணவ மாணவிகள் மேல்நிலைக் கல்வி, இடைநிலைக் கல்வி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஈ.எஸ்.எல்.சி போன்ற அரசுத் தேர்வுகளை எழுத கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்; கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்; கிளாக்ஸ் டேபிள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்; கேள்வித்தாளைப் படித்துக்காட்ட அல்லது சொல்வதை எழுத ஆசிரியரை நியமித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில சலுகைகளை வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகத்திடம் கேட்டபோது…
 

‘‘மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அக்டோபர் 1 தொடங்கி ஒரு வார காலத்தை  உலக டிஸ்லெக்‌ஸியா வார மாக அனுசரிக்கிறது. அக்டோபர் 4-2018 உலக டிஸ்லெக்‌ஸியா விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டது.

டிஸ்லெக்‌ஸியா என்பது மாணவர்களின் கற்றல் அடைவை பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இது நோய் அல்ல. ஆனால், தமிழக கல்வித்துறையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் இதுகுறித்து எவ்வித  விழிப்புணர்வு செயல்பாடும் இல்லை.’’ என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார் பாலசண்முகம்.

  மேலும் தொடர்ந்த பாலசண்முகம் கற்றல் குறைபாடு குறித்து விவரிக்கும்போது, ‘‘டிஸ்லெக்ஸியா தொடக்கநிலை மாணவர்களிடம் பரவலாக காணப்படுகிறது. ஒரு வகுப்பில் 10லிருந்து 15 சதவீதம் வரை மாணவர்களுக்கு இக்குறைபாடு உள்ளது. உதாரணமாக, இக்குறைபாடுள்ள மாணவர்கள் வாசித்தலில் Rubber என்று எழுதியுள்ளதை Rudder என புரிந்துகொள்வார்கள்.

ஆனால், இம்மாணவர்களை சோதித்தால் இவர்களுக்கு D மற்றும் B-க்கு இடையே உள்ள வேறுபாடு நன்றாகத் தெரியும். ஆனால், டிஸ்லெக்‌ஸியா குறைபாட்டினால் இக்குழப்பம் அவர்களுக்கு ஏற்படுகிறது. ‘தலைவலி’ என ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை ‘தலைவி’ என வாசித்து தவறாக உள்வாங்கிக்கொள்வதே டிஸ்லெக்‌ஸியா. இதை கற்பதில் மாணவர்களின் அலட்சியம் என்றே ஆசிரியர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

மேலும் சில ஆசிரியர்கள் இம்மாணவர்களுக்கு பார்வைக்கோளாறு உள்ளதாக நினைத்து அவர்களை வகுப்பில் கரும்பலகைக்கு அருகில் அமர வைப்பதும் உண்டு. டிஸ்லெக்‌ஸியா குறைபாடு போன்றே டிஸ்கிராபியா (Dysgraphia) மற்றும் டிஸ்கால்குலியா (Dyscalculia) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

‘காட்சி’ என்று எழுத வேண்டியதை ‘கட்சி’ என்று எழுதுவதையே டிஸ்கிராபியா என்கின்றனர். டிஸ்கால்குலியா குறைபாடு உள்ள மாணவர்கள் கணக்கு போடும்போது 3 மற்றும் 8, 6 மற்றும் 9, 1 மற்றும் 7, 2 மற்றும் 5 ஆகிய எண்களிடையே ஏற்படும் குழப்பத்தால் தவறு செய்கின்றனர். ஆனால், இம்மாணவர்கள் கூட்டல் கழித்தல் பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகியவற்றை நன்றாக அறிந்தே உள்ளனர். ஆசிரியர்களின் தவறான புரிதலால் இம்மாணவர்கள் கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் என அடையாளம் காணப்படுகின்றனர்.’’ என்கிறார்.

‘‘வளர்ச்சியடைந்த நாடுகளில் டிஸ்லெக்‌ஸியா பற்றி கல்வித்துறை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தெளிவான புரிதல் உள்ளது. இக்குறைபாடு உள்ள மாணவர்கள் தனியே சங்கங்களும் குழுக்களும் அமைத்துள்ளனர். இவ்வகை மாணவர்களைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அடையாளம் கண்டு முறையான பயிற்சியளித்து அவர்களின் குறைபாட்டினை படிப்படியாக நிவர்த்தி செய்கின்றனர்.

இம்மாணவர்கள் தங்களுக்குள்ள குறைபாட்டினால் ஆசிரியர்கள் கற்பிப்பதை சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாமலும் தாங்கள் கற்றதை எழுத்துமூலம் தவறின்றி வெளிப்படுத்த முடியாமலும் கணக்குகளை சரியாக போடமுடியாமலும் சிரமப்படுகின்றனர். இதனால் அவர்கள் கற்றலில் பின்தங்குகின்றனர். சக மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகின்றனர். இது அவர்களுக்கு மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.

இக்குறைபாடுகள் உள்ள மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொடக்கப்பள்ளி ஆசிரியரைக் கடந்தே வருகின்றனர். ஆனால், இவர்களின் குறைபாடு பற்றிய தெளிவான புரிதல் இல்லாததால் ஆசிரியர்கள் இவர்களை தவறாக கையாளுவதால் மேலும் சிக்கலாகிறது. ஆசிரியர்களின் இதுபற்றிய ஞானமில்லாததற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது.

ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப்படிப்பிலோ, பி.எட்., பட்டப்படிப்பிலோ உள்ள பாடத்திட்டத்தில் இக்குறைபாடுகள் மற்றும் இம்மாணவர்களைக் கையாளும் விதம், இவற்றை களைவதற்கான பயிற்சிகள் பற்றி குறிப்பிடும் விதமாக எதுவும் இடம்பெறவில்லை.’’ என்று பல உண்மைகளை பட்டியலிட்டார்.

‘‘தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பணியிடைப் பயிற்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் இதுபற்றி பயிற்சி அளித்ததாகவோ விவாதித்ததாகவே தகவலில்லை. இப்போதுதான் இக்குறைபாடு பற்றி தமிழகப் பள்ளிக்கல்வித்துறை ஒரு சில ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. சென்னையில் 5 நாட்கள் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

தமிழக அரசின் ஆணைகளிலும் கூட இக்குறைபாடு உள்ள மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்று கொச்சைப்படுத்துவதைக் காணலாம். கடந்த கால வரலாற்றில் 2003 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 110ல் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பயிலும் டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ள ஒரே ஒரு மேல்தட்டு மாணவனுக்கு மட்டுமே தேர்வெழுத சலுகை வழங்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 35ல் கற்றல்குறைபாடுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் செய்முறைத் தேர்வை தங்கள் பள்ளியிலேயே செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது. இக்குறைபாட்டினை அடையாளம் கண்டு களைவதற்கான எவ்வித செயல்முறைகளும் தமிழகப்  பள்ளிக்கல்வித் துறையிடம் இல்லை என்பதே கசப்பான உண்மை.

தற்போதைய பாடத்திட்டத்தில் மூன்றாம் பருவ எட்டாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இக்குறைபாடு பற்றி ஒரு பாடம் இருப்பது மட்டும்தான் கல்வித்துறையின் பங்களிப்பு. அதனால் எட்டாம் வகுப்பில் ஆங்கிலம் நடத்தும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இதைப்பற்றி அறிமுகம் உண்டு.

புகழ்பெற்ற அறிவியலாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் சிறுவயதில் இக்குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் இக்குறைபாடு உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெற முடியாது என்பதில்லை. அவர்களுக்குரிய முறையான பயிற்சி இருந்தால் அவர்களும் சாதனையாளர்களாவார்கள். தமிழக் கல்வித்துறையும் இதை கருத்தில்கொண்டு இக்குறைபாடு உள்ள மாணவர்களிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

தோ.திருத்துவராஜ்.