பார்க்க வேண்டிய இடம் - பிர்லா பிளானட்டோரியம்



நல்ல விஷயம் 4
 
சென்னை கோட்டூர்புரம் பகுதியிலுள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ளது பிர்லா கோளரங்கம். இது 1983ம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினால் நிறுவப்பட்டது. பின்பு, 1988ஆம் ஆண்டு முதல் பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மையத்தோடு சேர்ந்து ஒன்றாகச் செயல்பட ஆரம்பித்தது. இந்தியாவில் தொழிலதிபராக இருந்த பி.எம். பிர்லா அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பிர்லா பிளானட்டோரியமானது கல்வி மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டையும் சேர்த்தே வழங்குகிறது.

இக்கோளரங்கத்தில் 500 கலைப்பொருட்கள் கொண்ட எட்டு அரங்கங்கள் இருக்கின்றன. உடல் அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, எரிசக்தி, வாழ்க்கை அறிவியல், புதுமைகள் (கண்டுபிடிப்புகள்), போக்குவரத்து, சர்வதேச பொம்மைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் பொருட்களின் அறிவியல் என அவை பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் இங்கே பல மொழிகளில், வெவ்வேறு நேரங்களில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் வானியல்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக இந்த மையத்தில் சில பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மேலும் தகவல்களை அறிய https://en.wikipedia.org/wiki/Birla_Planetarium,_Chennai

அறிய வேண்டிய மனிதர் - மல்லிகா ஸ்ரீநிவாசன்

டிராக்டர் உற்பத்தியில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது சென்னையைச் சேர்ந்த டாஃபே எனும் டிராக்டர்ஸ் அண்ட்  ஃபார்ம் எக்கியூப்மெண்ட் நிறுவனம். நடப்பு ஆண்டுக்கான ப்ராஸ்ட் & சுல்லிவனின் சர்வதேச தயாரிப்பு தலைமைக்கான மூன்று விருதுகளை டாஃபே நிறுவனம் வென்றுள்ளது. ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப தலைமைப் பிரிவில் இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமை டாஃபே-க்கு கிடைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயலதிகாரியாகவும் உள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மல்லிகா ஸ்ரீநிவாசன். 1959ம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியில் பிறந்த இவர் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். பின் சென்னை பல்கலைக்கழகத்தில் எகனோமேட்ரிக்ஸ் துறையில் கோல்டு மெடல் வாங்கிய மல்லிகா, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ-ல் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றார்.

எம்.பி.ஏ. முடித்த பின் அமெரிக்காவின் AGCO, டாடா ஸ்டீல் மற்றும் டாடா பிவரேஜஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்திலான டிராக்டர் உற்பத்தியில் ஈடுபட டாஃபே எனும் டிராக்டர் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் மொத்தம் 82 நாடுகளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

ஆசியாவின் தலைசிறந்த ஐம்பது பெண் தொழிலதிபர்களில் ஒருவர் என்றும், இந்தியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர் என்றும் புகழப்படும் இவர் இந்தியாவின் தலைசிறந்த விருதான பத்மஸ்ரீ விருதை 2014ம் ஆண்டு பெற்றார். மேலும் இவரைப்பற்றி அறிய https://en.wikipedia.org/wiki/Mallika Srinivasan

வாசிக்க வேண்டிய வலைத்தளம் - www.ctr24.com

கனடா வாழ் தமிழர்களால் நடத்தப்படும் இவ்வலைத்தளமானது அன்றாட நிகழ்வுகள், தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், சினிமா, அரசியல் சார்ந்த தகவல்களைப் பதிவேற்றிவருகிறது. செய்திகள், பதிவுகள், எம்மவர் நிகழ்வுகள், நிகழ்ச்சி நிரல் ஆகிய தலைப்புகளின் கீழ் தகவல்கள் பதிவிடப்படு
கின்றன. இதில் செய்திகள் என்ற பிரிவில் இந்தியா, இலங்கை, கனடாவில் நிகழும் அரசியல், விளையாட்டு, சமூக நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த பயனுள்ள சிறப்புக் கட்டுரைகள், சினிமா பிரபலங்கள் குறித்த செய்திகள், உலகச் செய்திகள், அரசியல் களம் எனப் பன்முகத்தன்மைவாய்ந்த கட்டுரைகளை வழங்குகிறது இத்தளம்.  

 படிக்க வேண்டிய புத்தகம் - கரன்சி காலனி  - ந. இளங்கோவன்

பரபரப்பாக இயங்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஒருவர் புதிதாகத் தொழில் தொடங்கவேண்டுமென்றால் இதுவரை இல்லாத அதிக அளவிலான போட்டிகள்,  நாளுக்கு நாள் அப்டேட் ஆகும் நவீன தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தல் சிக்கல்கள் போன்ற பல தடைகளைக் கடந்து வரவேண்டும். சுயதொழில் முனைவோர், இதுபோன்ற தடைகளையும் மோசமான சூழல்களையும் எவ்வாறு கடந்து வெற்றிக்கனியை ருசிப்பது என்ற வித்தையைக் கற்றுத்தந்து வழிகாட்டுகிறது இந்நூல்.

சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், ஏற்கனவே தொழில் செய்துகொண்டிருப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய சூத்திரங்களையும், தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள் கடந்துவந்த தடைகளையும், திருப்புமுனையாக அமைந்த சம்பவங்களையும் விளக்கி அவர்களின் வெற்றிப் பாதைகளை ஒவ்வொரு அத்தியாயமாக எளிய நடையில் விவரித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் ந.இளங்கோவன். அனைவருக்குமே பயனுள்ள தகவல்களைக் கொண்டது இந்நூல். (வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2)போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை - 600 017. தொடர்புக்கு: 044-24342771)