எதற்கும் காலம்தான் சிறந்த வலி நிவாரணி!



உளவியல் தொடர் 53

உடல்... மனம்... ஈகோ!


If egotism means a terrific interest in one’s self, egotism is absolutely essential to efficient living.  Arnold Bennett
  - ஈகோ மொழி

நீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்திருக்கலாம். அதன் போக்கில் சில இடங்களில் சில வளைவுகளில் நீர் முன்னோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கும்போது, அதன் ஓட்டத்தில் நீர் பின்னோக்கிப் பயணிப்பது போன்ற தோற்றத்தையும், வேகமாய்ச் சுழலும் தன்மையையும் பார்க்கமுடியும். மனிதனின் மனதில் தோன்றும் எண்ண ஓட்டமும் அதுபோலத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

மனதின் எண்ண ஓட்டம் ஒருபோதும் ஒரு நிலையான பெருக்காக இருப்பதில்லை. பல கூறுகளாகப் பிரிந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டபடியே பயணித்திருக்கிறது. பொருட்களின் இயக்கத்தில் சில வழிமுறைகளும், செயல்பாடுகளும் இயந்திர விசையிலானவை. ஆனால், மனதின் செயல்முறைகள் யாவும் எண்ணங்களின் அடிப்படையிலானவை. அதனாலேயே அவை ஓர் இயந்திரக் கட்டுப்பாடாக இல்லாமல் சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

 மனதில் எண்ணங்கள் உயர்வானதாக எழத் தொடங்கும் அதே நேரம் அதற்கு நேர் எதிரான, கீழான ஓர் எண்ணமும் எட்டிப்பார்க்கும். அதோடு அவை ஒன்றுடன் ஒன்று கலந்தும் இயங்கிக்கொண்டிருக்கும். இதன்  காரணமாகத்தான் உறுதியான நம்பிக்கை எழும் அதே நேரம் சந்தேகம் நிறைந்த அவநம்பிக்கையும் எட்டிப்பார்க்கிறது. தைரியம் எழும் அதே நேரம், பயமும் எட்டிப் பார்க்கிறது - இது இயற்கையானது. அவநம்பிக்கையையும், கீழ்மையையும் எழாமல் செய்ய வேண்டும் என்று முயல்வதைவிட அவற்றை உதாசீனப்படுத்துவதுதான் சரியான வழிமுறை.

நம்பிக்கையின் மீதான பற்றுதலை அதிகரிக்கும் விதமாக ஈகோ நமக்கு நாமே நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலான வாதத்தை முன்வைத்து ஓர் அரணாக அமைத்துக்கொண்டு நிற்கிறது.கற்களால் செதுக்கப்படும் சிலையின் உருவத்தைப் பார்க்கும் விழிகளுக்கு கல் எப்படி தெரிவதில்லையோ, அதேபோல் கற்களின் மீதான செதுக்கலை கவனிக்கும் கண்களுக்கு உருவம் புலப்படுவதில்லை.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஆசைகளும், கனவுகளும் கலந்தபடியே இருக்கிறது. அவை அனைத்திலும் முக்கியமானது அவரவரின் ‘தன்‘ இருப்புதான்.  அதை வடிவமைத்துத் தருவது ஈகோதான். வாழ்க்கையில் யாருக்கும் அவரவர் ஆசைகளுக்கும், கனவுகளுக்குமான இருப்பு எப்போதும் முழுமையடைந்த நிலையில் இருப்பதேயில்லை.

பல நேரங்களில் இருப்பு இழப்புகளின் கசப்பை ருசிக்கச் செய்தபடி இருந்துவிடுவதும் உண்டு. அது வெளிப்பார்வைக்கு புலப்படாது போனாலும், இழப்புகளால் ஈகோ உள்ளுக்குள் புண்பட்டு, காயப்பட்டுப்போவதுதான் முக்கியமான பிரச்னையாக மாறுகிறது.

இழப்புகளையும், நிராகரிப்புகளையும் கவனமாக கையாளாமல் போகும்போதுதான் ஈகோ கொந்தளிப்புடன் செயல்படத் தொடங்குகிறது. அதுபோன்ற நேரங்களில் உடனடியாக எதிர்வினையாற்றாமல் சூழ்நிலையை அமைதியாக ஏற்றுக்கொண்டு, கவனமாக கடந்துசெல்வதுதான் நல்லது. எப்போதும், எதற்கும் காலம்தான் சிறந்த வலி நிவாரணி.

ஈகோ என்ற அகங்காரத்தை முற்றிலுமாக அழித்துவிடுவது சாத்தியமான ஒன்றே இல்லை. அதை இல்லாமல் (வெளிப்படாமல்) செய்ய முயல்வது என்பது செயல்திறனை அழிப்பதற்குச் சமம். அடிப்படையில் ‘நான் இப்படிப்பட்டவன், நான் இப்படி இருப்பவன்‘ என்ற விருப்பம் (Will)  இல்லாமல் எந்தச் செயல்களையும் செய்துவிடவே முடியாது. அகங்காரம் ஓர் இயல்பான, இயற்கையான உணர்ச்சி வெளிப்பாட்டு நிலை.

அது ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான வெளிப்பாட்டை உயிருள்ள வரை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கக்கூடியது. அந்த வெளிப்பாடுதான் அவரவருக்கான செயல்திறனாக வலுப்பெற்று, உயிர்வாழ்தலின் இனிமையை ரசிக்க வைத்தபடி செயல்படச் செய்கிறது. மனதின் மொழியை வெளிப்படுத்தி நம்பிக்கையை ஊற்றெடுக்கச் செய்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மனிதருக்கும் தன்னம்பிக்கை உருவாகி வளர்ந்து எழுவது இப்படித்தான்.

இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், அகங்காரம் அடித்தளம் அமைத்த செயல்திறனின் வெளிப்பாட்டில் ஒவ்வொருவரும் முழுமையான தனிமையானவர்கள்.  அங்கே மூன்றாவது நபருக்கு இடமே இல்லை. அவரும் அவரது அகங்காரம் மட்டுமே இருக்கும். இந்த நிலைதான் பூரண முழுமையானது, அப்படியான அகங்காரத்தை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆளுமைத்திறனின் வெளிப்பாடாக அமைகிறது.

ஒரு தனி நபரை அவரது ‘நான்‘ நானாக வெளிப்படுத்தும் அகங்காரம் (ஈகோ) எப்போதும் அவரது கடிவாளக் கட்டுக்குள் இருக்கவேண்டும். அப்படியான நிலையில்தான் எப்போதும் வைத்திருக்கவேண்டும். அது ஒருவகையிலான பாவனைதான். அதனால்தான் ஈகோ என்பது மனம் அனுபவித்து சுவைக்கும் ஒரு ருசி போன்றது என்றே குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொருவரின்  வாழ்க்கையிலும் ஆசைகளும், கனவுகளும் பல இருந்தபோதும், இறுதியில் முக்கியமாகிப்போவது தன் இருப்புதான். அதை பூரணமாக ரசித்து அனுபவித்திட விருப்பைத் தாண்டிய ஒன்று உண்மையில் முக்கியமானது. அதைத்தான் லட்சியம் என்கிறார்கள். லட்சியம் சாதாரணமானது இல்லை.

யார் ஒருவர் எதன் பொருட்டும் எவ்விதமான இடர்ப்பாடுகளுக்கும் இடம் தராமல் பிடித்த பிடியில் உறுதியாய் இருந்து மரணிக்கவும் தயாராக இருக்கிறார்களோ அதுவே அவர்களுக்கு வாழ்நாளெல்லாம் ஆட்கொள்ளும் லட்சியமாக இருக்கும். ஒரு மனிதனின் உள்ளிருந்து எழுந்து திரண்டு பேருருவம் கொண்ட ஒரு திரட்சியை அடைவதை நோக்கிய நகர்வே லட்சியப் பயணம்.

உலகம் மிக மிகப்பெரியது. மனித மனதில் அகங்காரத்தின் செயல்பாடு நிறைந்த அறிவின் விஸ்தாரத்திற்குள் ஆசை, கனவு, லட்சியம் ஆகியவற்றின் உருவம் அதனுள் அடங்கக்கூடியதுதான்.

இன்னும் சொன்னால் அவை யாவும் சிறு துளிகளைப் போன்றவைதான். அதனால் தனி மனித வாழ்வில் அறிவின் செயல்பாட்டினால் ஒருவன் செயலாற்றினாலும், ஆற்றாது போனாலும் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால், இருப்பு குறித்தான பங்களிப்பு மட்டும் ஆற்றியிருந்தால் போதுமானது.தன் இருப்பை நிரூபிக்க தான் முக்கியமானவன், அவசியமானவன் என்ற நம்பிக்கை மட்டும் பூர்த்தியானால் போதும், ஈகோ முழுமையாகத் திருப்தி அடைந்துவிடும்.

குரு - சிஷ்யன் கதை

நிம்மதி கிடைக்குமா?

சிஷ்யன் ஆசிரமத்தில் மதிய உணவு சமைத்துக்கொண்டிருந்தான். அப்போது ஓர் இளைஞன் வந்தான். சிஷ்யனைப் பார்த்து, “ஐயா குரு இல்லைங்களா?“ என்றான்.   உடனே சிஷ்யன், “இல்லையப்பா குருநாதர் ஆற்றுக்குச் சென்றிருக்கிறார். என்ன விஷயம் என்னிடம் சொல்“ என்றான். அதற்கு அந்த இளைஞன், “ஐயா… என் தலை பூரா பாரமா இருக்கு. படுத்தா தூங்கவே முடியல. நிம்மதியே இல்ல!” என்றான்.

சிஷ்யன் இளைஞனைப் பார்த்து சிரித்துவிட்டு, “அளவோடு இருக்கவேண்டியது காலியாகவும், நிறைந்தும் இருக்கிறது’’ என்றான். “ஐயா.. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலே!’’ என்றான்.இளைஞனை மேலும் கீழும் பார்த்த சிஷ்யன், “உனக்கு  நான் புரியவைக்கிறேன். அதுக்கு முன்பாக சாப்பிடு வா’’ என்றான்.

வந்தவன் சாப்பிட்டான். சிஷ்யன் அவனுக்குத் திண்ணையில் இருந்த படுக்கையைக் காட்டி, “சிறிது ஓய்வெடு” என்றான். வந்தவனும் படுத்துக்கொண்டான். அவனருகில் அமர்ந்த சிஷ்யன், “வயிறும் மனதும் எப்போதும் அளவோடு நிறைந்திருக்க வேண்டும். இப்படித்தான் ஒரு நாள், பக்கத்து ஊரில் ஆற்றில் படகில் பயணித்த ஒருவன் தலையில் மூட்டையை சுமந்தபடி அமர்ந்திருந்தான்.

அதைப் பார்த்து எதிரில் இருந்தவர்,  “ஏம்ப்பா! எதுக்கு தலையில மூட்டையைச் சுமந்துகிட்டு வாறே? இறக்கி வையேன்!” என்றார். அதற்கு அவன் “வேணாங்க! படகு என்னை மட்டும் சுமந்தா போதும்! என் சுமையை நான் சுமந்துக்குவேன் என்றான்!’’ என்று சிஷ்யன் சொல்லும்போதே படுத்திருந்த இளைஞன் சிரித்தான்.

சிஷ்யன், “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டதும், “பின்னே சுத்த பைத்தியக்காரனா இருப்பான் போலிருக்கே. படகை விட்டு இறங்கும்போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா? ஆமா யார் அந்த ஆளு?” என்றான் இளைஞன்.உடனே, “நீதான் அவன்!” என்றான் சிஷ்யன்.

“நானா... என்னங்க சொல்றீங்க?” என்று கேட்ட இளைஞனிடம், “ஆமாம்ப்பா… வாழ்க்கைங்கிறதும் படகுப் பயணம் மாதிரிதான். பயணம் பூராவும் சுமைகளை சுமந்துகிட்டே போகிறவர்கள் ஒருநாளும் நிம்மதியா இருக்கவே முடியாது. தேவையானதை மட்டும் மனசுல சுமந்தா போதுமே! சரி எந்திரிச்சு, அந்தத் தலையணையைத்  தூக்கு” என்றான் சிஷ்யன்.

தலையணையைத் தூக்கியவன் தலையணையின் அடியில் ஒரு பாம்பு இருந்தது கண்டு அலறினான் “ஐயா! பாம்பு… பாம்பு!” என்று.  சிஷ்யன் அதை பார்த்து, “ஆமாம் பாம்பு. பயப்படாதே அது போயிடும். பாரு உன் தலையணைக்கு அடியில் ஒரு பாம்பு இருந்தும் நீ நிம்மதியாய் படுத்திருந்தாய்...!’’ என்றான்.

“அது ... அது எனக்குத் தெரியாதுங்களே! அதனால நிம்மதியா இருந்தேன்!” என்றான்.“பார்த்தாயா, பாம்பு அருகில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியலை. அதனால் நிம்மதியாக படுத்திருந்தாய்! அதுமாதிரிதான் சில உண்மைகளைத் தெளிவாக புரிஞ்சுகிட்டா போதும், சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளாம இருக்கும்போதுதான் மனசுல நிம்மதி இருக்கும். புரிந்ததா?’’ என்றான் சிஷ்யன்.

  “ஆமாங்க...! உண்மை எப்பவும் அவரவர் மனசுக்குள்ளேயே ஒளிஞ்சுகிட்டுத்தான் இருக்கு. அதை அறிவோட வெளிச்சத்தால கண்டுபிடிச்சுக்கலாம்கிறதை இப்போ புரிஞ்சுகிட்டேன்...!” என்றான் இளைஞன்.  சிஷ்யன் புன்னகைத்தபடியே அவனை தட்டிக்கொடுத்து வழியனுப்பினான்.

  -தொடரும்   

ஸ்ரீநிவாஸ் பிரபு