தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகராக உதவும் பட்டயப் படிப்புகள்!தொலைநிலைக் கல்வியில் கலை-அறியியல் படிப்புகளை மட்டுமல்ல சட்டப் படிப்புகளையும் படிக்கலாம். பி.எல். மட்டுமே சட்டப் படிப்பு அல்ல… ஓராண்டு டிப்ளமோ படிப்புகள் பல உள்ளன. அவற்றில் நமக்கு சரியானது எது என்று தேர்வு செய்து, பிடித்தமானதைத் தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கலாம். சட்டம் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளலாம். அதற்கு உதவும் வகையில் பெங்களூருவில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா கல்வி நிறுவனம் டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் ஆகும். அச்சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனத்தில், தொலைநிலைக் கல்வி முறையில் ஓராண்டு போஸ்ட் கிராஜுவேட் பட்டயப் படிப்பு மற்றும் இரண்டாண்டு எம்.பி.எல். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓராண்டு முதுநிலை டிப்ளமோ சட்டப்படிப்புகளாக மனித உரிமைகள் சட்டம், மருத்துவ சட்டம் மற்றும் நெறிமுறைகள், சுற்றுச்சூழலியல் சட்டம், அறிவுசார் சொத்துரிமைகள் சட்டம், குழந்தைகள் உரிமைச் சட்டம், நுகர்வோர் சட்டம் மற்றும் நடைமுறைகள், இணையதள சட்டம் மற்றும் இணையதள தடயவியல் ஆகிய படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

இரண்டாண்டு சட்டப் படிப்பாக மாஸ்டர் ஆஃப் பிஸினெஸ் லாஸ் எனும் எம்.பி.எல். படிப்பு கற்றுத்தரப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர விரும்புவோர், ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமோ நேரிலோ அல்லது தபால் மூலம் பெற்றும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.1500. தபால் மூலம் பெற விரும்புவோர் 1500 ரூபாய்க்கான டிமாண்ட் டிராஃப்ட்டோடு, விண்ணப்பக் கேட்புக் கடிதத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும். ஓராண்டு டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணம் படிப்புகளுக்கு ஏற்ப 15 ஆயிரத்திலிருந்து 55 ஆயிரம் வரை இருக்கும்.

இதுகுறித்த முழுவிவரங்களை www.ded.nls.ac.in என்ற இணையதளத்தில் விரிவாக பார்க்கலாம். இப்படிப்புகளுக்கான தேர்வுகள் அனைத்தும் பெங்களூரு, புனே, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறும். ஒவ்வொரு படிப்பிலும் 5 பேப்பர்கள் உள்ளன. கடைசி பேப்பர், சட்டம் சார்ந்த ஆய்வு அறிக்கை குறித்ததாக இருக்கும். இப்படிப்புகள் மூலம் நீதிமன்றங்களில் வாதாட முடியாவிட்டாலும், தனியார் நிறுவனங்களில் சட்டச் சிக்கல்களை கையாளும் வல்லுநராக, சட்ட ஆலோசகராக பணியாற்ற உதவும். விண்ணப்பிக்க கடைசி தேதி தாமதக் கட்டணத்துடன் விண்ணபிக்க கடைசி தேதி 15.10.2018.
 
- தி.ஜெனிபா