மாணவர்களுக்கான அறிவியல் திரைப்படத் திருவிழா!



மாணவப் பருவத்திலேயே இயற்கை குறித்தும், அறிவியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகமெங்கும் அறிவியல் திரைப்பட விழா நடத்தப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் நடத்தப்படும் இத்திரைப்பட விழா குறித்து சென்னையில் உள்ள ஜெர்மன் கலாசாரத்துறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கீதா வேதராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை.“கல்வி மற்றும் அறிவியல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை அறிவியல் திரைப்பட விழா நடத்தப்படவுள்ளது.

இத்திரைப்பட விழா முதன்முறையாக  கடந்த ஆண்டு இந்தியாவிலும் நடத்தப்பட்டது. 53 ஆயிரம் மாணவ மாணவியர் கண்டு பயனடைந்தனர்.சென்னையில் ஜெர்மன் கலாசாரத்துறை, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் மற்றும் என்விரோன்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இண்டியா, பாரதிய வித்யா பவன், கேந்திரிய வித்யாலயா சங்கதன், நேஷனல் ஸ்டெம் எஜுகேஷன், பி.ஏ.எஸ்.சி.எச். (ஸ்கூல் பார்ட்னர்ஸ் ஃபார் த ஃபியூச்சர்ஸ்) ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அறிவியல் கல்வியறிவை ஊக்குவிப்பதோடு சமகால விஞ்ஞான,

தொழில்நுட்ப மற்றும் உணவுமுறை பிரச்னைகள் குறித்து இத்திரைப்படங்கள் கல்வி நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன” என்று திரைப்பட விழாவின் அவசியத்தை விவரித்தார்.“மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞான ரீதியிலான விஞ்ஞானங்களைப் பொழுதுபோக்காகவும் தெரிவித்தால் மாணவர்கள் மனதில் ஆழப் பதியும் என்பதற்காக இவ்விழா நடத்தப்பட்டுவருகிறது. இந்தியாவில் திரையிடுவதற்கு ஏற்ற 38 திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். 9 முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு 10 திரைப்படங்களும் 12 வயது முதல் 16 வயது வரையிலானவர்களுக்கு 13 திரைப்படங்களும், 17 வயது மேற்பட்டவர்களுக்கு 15 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தத் திரைப்படங்கள் குறித்த விளக்கக் குறிப்பு அடங்கிய அட்டவணை (self-explanatory sheets) ஆசிரியர்களுக்கு கொடுத்துவிடுவோம். நமக்காகக் கொடுக்கப்பட்டுள்ள  திரைப்படங்களின்  லிஸ்ட்டை ஆசிரியர்களிடம் கொடுப்போம். அதில் எத்தனை படங்கள் வேண்டும் என அவர்கள் செலக்ட் செய்கிறார்களோ அத்தனை படங்களைக் கொடுப்போம். பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பிரின்சிபல் ஆகியோர் டி.வி.டி., பென்டிரைவ் போன்றவை மூலமாக பெற்றுச் சென்று பள்ளியில் இந்தத் திரைப்படங்களைத் திரையிட்டுக்காட்டி விளக்குவார்கள். இந்தப் படங்கள் டிசம்பர் 23ம் தேதி வரை மட்டுமே ஒளிபரப்பு செய்து காட்டும் வகையில் ஒரு ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

இதில், உணவுப் புரட்சி குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று திரைப்படங்கள் வழங்கப்படும் வழிமுறையைப் பற்றி எடுத்துரைத்தார் கீதா.“விருப்பமுள்ளவர்கள் https://goo.gl/forms/DPB1DuA7edFPRV3h1 என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044 - 2833 1314/2343 என்ற தொலைபேசி, geetha.vedaraman@goethe.de இ-மெயில், www.goethe.de/chennai - இணையதளம் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார் கீதா.

- தோ.திருத்துவராஜ்