+1 தேர்வை மீண்டும் கைகழுவும் தனியார் பள்ளிகள்!



சர்ச்சை

பிளஸ்-2 முடித்து உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அங்கு முதல் வருடப் பாடத்திட்டத்தைக் கையாள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்விலும் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறமுடியாத நிலை உள்ளது. பிளஸ் -1 பாடத்திட்டத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் நடத்தாமல் புறக்கணித்துவிட்டு அதிக தேர்ச்சிக்காக பிளஸ்-2 பாடத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்ததே இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 தேர்வை பொதுத் தேர்வாக அரசு அறிவித்தது. மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மதிப்பெண்கள் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்புக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியாக மார்க் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என்றார்.

தற்போதைய தேர்வுத் திட்டத்தினால் கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், பாடங்களைச் சரிவர படிக்கமுடியாமல் அவதிப்படுவதாகவும் மாணவர்களிடமிருந்து புகார்கள் வந்தன. எனவே, உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இதற்குச் சில ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து கல்வியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்ப்போம்…

பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன்
    
‘தேர்வுகளைப் பழக்கமாக்கிக்கொள், வெற்றிகள் வழக்கமாகிவிடும்’ என்பது எனக்குப் பிடித்தமான மாணவர்களுக்கான அறிவுரை. உண்மையில் இது மாணவர்களுக்கு மட்டுமின்றிப் பலருக்கும் உதவக்கூடியது. எவரும் பிறந்தது முதல் பல கட்டங்களில் பல தேர்வுகளைப் பல வடிவங்களில் எதிர்கொண்டு வென்றுவருகிறோம். ஆகவே, தேர்வு அஞ்சுவதற்கு அல்ல; மாறாக வென்று பெருமைகொள்வதற்குத்தான். தவிர, பலரைக் கடமையில் தவறாமல் கண்காணிக்கத் தேர்வு உதவுகிறது.

எட்டாம் வகுப்புவரை தேர்வில் யாரையும் ஃபெயில் பண்ணக்கூடாது என நாம் கொண்டிருந்த கொள்கை மாணவர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்து நாம் செய்துவந்தது ஒரு சமூக அநீதி என்றால் மிகை அல்ல. அதேபோல, உயர்கல்வி சேர்க்கைக்கு 11ஆம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில்கொள்ளப்படாத நிலையில் விளைந்து வந்த குறைபாடுகளைக் களையத்தானே நீண்டநாள் ஆய்வுசெய்து, கல்வியாளர்களின் கருத்தைப் பெற்று, நல்லதொரு மாற்றத்தை அரசு அறிவித்தது?

அதைச் சடுதியில் ஒருதலைப்பட்சமாக நீக்கியது கல்விச்சீரமைப்பில் ஒரு பெரும் பின்னடைவுதான். மாணவர்கள் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மூன்றைத் தொடர்ந்து எழுதத் தயார்படுத்திக்கொள்வது கடினம் என்பதை இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். ‘பருவத்தே பயிர்செய்’ என்பதற்கேற்ப, மாணவப் பருவம் முக்கியமாகப் படிப்பதற்குத்தான். சிலர் நினைப்பதற்கு மாறாக மாணவர்களில் பெரும்பகுதியினர் படிக்கவும் படித்துச் சாதனைபுரியவும் துடிப்புடன்தான் இருக்கிறார்கள். அவர்களை மட்டம்தட்டாதீர்கள்.

கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்)

+2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கல்லூரிக் கல்விக்கான தகுதியாகக் கருதப்படும் என அறிவித்தது ஏற்கத்தக்கதல்ல. 10, +1, +2 எனத் தொடர்ந்து வரும் பொதுத் தேர்வுகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதால், இந்த மாற்றம் எனக் காரணம் காட்டப்படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல!  சுயநிதி தனியார் பள்ளிகளின் அழுத்தம் இதன் பின்னணியில் இருப்பதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவரை தனியார் பள்ளிகள், 10-ம் வகுப்புப் பாடங்களை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்புப் பாடங்களை 11-ம் வகுப்பிலும் நடத்திவந்தனர்.

இரண்டாண்டுகள் ஒரே பாடத்தைப் படித்த காரணத்தால் 10, +2 பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களைவிட அதிக மதிப்பெண்களை எடுக்க முடிந்தது. ஆனால், அரசுப் பள்ளியில் அப்படி நடத்த முடியாது. இதைத் தவிர்க்கத்தான் + 1 வகுப்பிலும் பொதுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. தவிரவும், +1 வகுப்புப் பாடங்களைப் படிக்காமல் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முழுமையான கல்வி பெறாத காரணத்தால், கல்லூரி முதலாம் ஆண்டிலேயே தேர்வுகளில் தோல்வி அடைவதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் + 1 பாடங்களையும் உள்ளடக்கி நடைபெறும் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில், நமது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே + 1 தேர்வு மதிப்பெண்களைத் தவிர்ப்பது மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். எனவே, தொடர் தேர்வுகளைச் சுமையாகக் கருதாத அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து வரும் தேர்வுகளை மனஅழுத்தம் அற்றவைகளாக மாற்ற, ஆண்டுக்கு இரு பருவ முறையில் (Semester system) தேர்வுகளை நடத்தலாம். தனி வகுப்புகள், விடுமுறை நாள் வகுப்புகள் ஆகியவை மாணவர்களுக்கு மிகுந்த மனச்சோர்வை உண்டாக்குகின்றன.

ஆகவே, அவற்றைத் தவிர்க்க, எளிமையான தேர்வு முறை, பாடச்சுமை குறைப்பு ஆகியவற்றைச் செயல்படுத்தலாம். மேலும் + 1 தேர்வு மதிப்பெண்களைப் புறக்கணிப்பது ‘தனியார் பள்ளிகள்தான் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரமுடியும்’ என்ற பொய்யான தோற்றத்தைப் பெற்றோர்களிடம் உண்டாக்கிவிடும். இதனால் கல்வியில் தனியார் மயமும் வணிகமயமும் அதிகரிக்கும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிடும். மேலும் கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குவது சமூக நீதிக்கு எதிரானதாகும். எனவே, +1 தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிக் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாது எனும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.

- தோ.திருத்துவராஜ்