நல்ல விஷயம் 4



வளாகம்

அறிய வேண்டிய மனிதர் அஜய் வி. பட்

இன்றைய நவீன காலத்து கம்ப்யூட்டர் டெக்னாலஜியின் முன்னோடியாக கருதப்படும் அஜய் வி. பட் செப்டம்பர் 6, குஜராத் மாநிலத்தின் வதோதராவில்  1957-ல் பிறந்தார். இந்தியாவின் சிறந்த கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட்டான இவர் ‘மஹாராஜா சாயாஜி ராவ் யுனிவர்சிட்டி ஆஃப் பரோடாவில்’  இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பின் யுனைடெட் ஸ்டேட்ஸின் ‘தி சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க்‘ என்ற அமெரிக்க பல்கலைக்கழகத்தில்  முதுகலைப் பட்டம் பெற்றார். 1990 ஆம் ஆண்டு இன்டெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர் தன் தொழில்நுட்ப அறிவாற்றல் காரணமாக  பணிக்குச் சேர்ந்த குறுகிய காலத்திலேயே இன்டெல் நிறுவனத்தின் முதன்மை கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட்டாக ஆனார்.

இவர் கண்டுபிடித்த USB (Universal Serial Bus), AGP (Accelerated Graphics Port), PCI Express போன்றவை  இவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. இன்றைய கணினி சார்ந்த ஒவ்வொரு பொருட்களிலும் இவரது கண்டுபிடிப்பு பல விதங்களில்  பயன்படுகிறது. தன் நிறுவனத்தின் ராக் ஸ்டார் என இன்டெல் நிறுவனம் இவரைக் கொண்டாடியது. மேலும் நவீன கணினி இணைப்புச் சாதனங்கள்  மற்றும் அதிவேக தொலைத்தொடர்புச் சாதனங்கள் போன்ற இவரின் கண்டுபிடிப்புகளுக்கு 2002ம் ஆண்டில் ‘அச்சீவ்மென்ட் இன் எக்செலன்ஸ்‘ எனும்  விருது அளித்து பெருமைப்படுத்தியது அமெரிக்கா.

வாசிக்க வேண்டிய வலைத்தளம் www.agritech.tnau.ac.in

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணையதளமான இதில் வெற்றிக்கதைகள், உழவர் கூட்டமைப்பு, உழவர் கண்டுபிடிப்பு, வெளியீடுகள்  ஆகிய பிரிவுகளில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், விதை, பட்டுப்புழு  வளர்ப்பு, வனவியல், மீன்வளம், கால்நடை போன்ற தலைப்புகளின் கீழ் தகவல்கள் பதியப்படுகின்றன.

மேலும் வேளாண் துறையில் பயன்படும் நவீன தொழில்நுட்பங்கள், அரசுத் திட்டங்கள், சேவைகள், சந்தைச் செய்திகள், வேளாண் செய்திகள், தினசரி  வேளாண் நிகழ்ச்சிகள் என விவசாயம் மற்றும் சந்தைப்படுத்துதல் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் வழங்குகிறது. விவசாயிகள், விவசாய  பட்டப்படிப்பு மாணவர்கள் மட்டுமில்லாமல் விவசாயம் சார்ந்த தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள வலைத்தளம் இது.

பார்க்கவேண்டிய இடம் அழகன்குளம்


இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சியில் உள்ள கிராமமான அழகன்குளம் பாண்டியர்களின் காலத்தில் ஒரு துறைமுக நகரமாக விளங்கியது.  இவ்வூர் துறைமுகத்தின் வழியாகத்தான் பண்டைய தமிழர்கள் ரோம் போன்ற பல வெளிநாடுகளுடன் வாணிபத் தொடர்புகொண்டிருந்துள்ளனர்.  மன்னராட்சி நடைபெற்ற இப்பகுதியின் பெயர் அழகாபுரி ஆகும். பின்னர் அழகாபுரி என்ற பெயர் மருவி அழகன்குளம் என்று அழைக்கப்பட்டுவருகின்றது.
மன்னர்கள் ஆட்சி செய்ததற்குச் சான்றாகச் சிதிலமடைந்த கோட்டை மண்ணில் புதையுண்டு அந்தப் பகுதி மேடாகக் காட்சியளிக்கிறது. அந்தப்  பகுதியில் இருந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் துறையினரால் வாள், கேடயம், பொற்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடக்கே  பாக் நீரிணையும், தெற்கே வைகை ஆறும், கிழக்கே வைகை முகத்துவாரமும், மேற்கே பனைக்குளம் கிராமமும் இக்கிராமத்தின் எல்லைகளாக உள்ளன.

படிக்க வேண்டிய புத்தகம் இரண்டாம் சுற்று - ஆர்.பாலகிருஷ்ணன்

தமிழ் இலக்கிய மாணவன் ஒருவன், இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழில் தேர்வெழுதி முதல் முயற்சியில் வென்றது, இந்திய ஆட்சிப்  பணியாளராக வலம்வந்தது, மாநில வளர்ச்சி ஆணையர், திராவிடவியல் மற்றும் இந்தியவியல் ஆய்வாளர் எனப் பன்முகம்கொண்டு வாழ்வியல்  அனுபவங்களின் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல். மனித வாழ்க்கையில் இரண்டாம் சுற்று என்று உண்மையில் எதுவும் உள்ளதா? என்ற  கேள்வியை மையமாக வைத்து விடாமுயற்சி, கடின உழைப்பு, நேரம் தவறாமை என ஆளுமை வளர்க்கும் பண்புகளைச் சொல்லியும், எதார்த்த உலகின்  நடைமுறை வாழ்க்கையின் தத்துவார்த்த உண்மைகளையும் தனது அனுபவங்களின் ஊடாகப் பேசுகிறார் இந்நூலின் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணன்.  வாழ்க்கை எனும் தொடர் ஓட்டத்தில் ‘இது எனது இரண்டாம் சுற்று’ என்று நெகிழ்ந்து உணர்ந்த தருணங்களைக் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும்  தொகுத்து வாழ்க்கைப் பயணத்தில் அன்பு, அறம் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்தைப் போதிக்கிறது இந்நூல். இந்நூலைப் படிக்கும் அனைவருக்கும்  அனுபவங்கள் தரும் பாடத்தைப் புரிந்துகொள்ள வழிசெய்யும். (வெளியீடு: எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம், சமயபுரம், திருச்சி  621112. விலை: ரூ.240.)