படிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா? ஏராளமான பணி வாய்ப்புகளைக் கொண்ட தனியார்துறை நிறுவனங்கள்!



வழிகாட்டல்

அரசுத் துறை பணிகளில் பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகள் உள்ளதால்தான் எல்லோருக்குமே அரசுப் பணிகளின் மீது ஒரு ஈர்ப்பு  உண்டு. ஆனால், அரசுப் பணிகளை விடவும் அதிகமான சலுகைகளை வழங்கும் தனியார் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அரசுத்  துறையில் இரண்டாயிரம் பணியிடங்களுக்கு பத்து லட்சம் பேர் போட்டியிடும் சூழல் தனியார் துறையே போதும் என்ற மனநிலையை ஏற்படச்  செய்துவிடும். அரசு வேலைகளும் பொதுத்துறைப் பணிகளும் நல்ல வாய்ப்புகள்தான்.அதிக மக்கள் தொகை கொண்ட சமூகத்தில் அனைவருக்கும்  அரசுப்பணி என்பது சாத்தியமற்ற ஒன்று என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவே, பெருவாரியான மக்கள் தனியார் துறையைத்தான் நாடவேண்டியிருக்கிறது. காரணம், சுமார் 80% வேலை வாய்ப்புகள் இங்குதான்  கொட்டிக்கிடக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ, தனியார் துறைக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். ‘தனியார்’ என்றாலே,  கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்கள், தொழிலாளர் உழைப்பை சுரண்டிப் பிழைப்பவர்கள் என்று பொய்யான ஒரு பிம்பம் உருவாகியிருக்கிறது. பத்திரிகை  உலகம் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை, லட்சக்கணக்கான மக்கள் பணிபுரிகிற தனியார் துறை பற்றிய நமது கண்ணோட்டம் மாறியாக  வேண்டும்.

1990களில் உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவை நோக்கி பன்னாட்டு நிறுவனங்கள்  அணிவகுத்து வந்தன. ஏறத்தாழ இதே காலகட்டத்தில், கணினித்துறையும் வெகு வேகமாக பரவி வளர்ந்தது. இவற்றால், ஆயிரக்கணக்கான புதிய பணி  வாய்ப்புகள் தோன்றின. இந்த மாற்றம்தான், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்குவகிக்கிறது. பல ஆயிரம் கோடிகள் முதலீட்டில்  செயல்படும் அசுர நிறுவனங்கள்தாம் தனியார்துறை என்று எண்ணிவிடக்கூடாது.

சில ஆயிரம் ரூபாயுடன் தொடங்கப்படும் சில்லரை வணிகக் கடைகளும்கூட தனியார் துறையில் அடங்கியதுதான். இன்று சுமார் 40% மக்கள், நிறுவனம்  அல்லாத சிறிய வணிக நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள்தாம். இதிலும் அமைப்புசாராத் தொழில்களில் வேலை செய்வோரின் எண்ணிக்கை மிகவும்  கணிசமானது. இங்கு, தொழிலாளர்நலச் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படாமையும், சுரண்டல் பாணி முதலாளித்துவமும் பரவலாக இருந்து
வருகின்றன. மறுக்க முடியாது. ஆனாலும், ‘வேலை வாய்ப்பு’ என்கிற கோணத்தில் மட்டுமே இந்தப் பகுதியில் நாம் இத்துறையை அணுகவேண்டும்.

சரி… தனியார் துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள், யார் யாருக்கெல்லாம் இருக்கின்றன..? அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வு எழுதி  வேலைக்கு செல்வதைப் போன்ற நடைமுறை பெரும்பாலும் தனியார் துறையில் இல்லை. தனிநபர் தொடர்புகள் (personal contacts)  மூலமாக பணியாட்களைத் தேர்வு செய்யும் நடைமுறைதான் பரவலாக உள்ளது. உலகம் முழுக்க இப்படித்தான்.எந்தப் பணிக்கு என்ன தகுதி வேண்டும்?  அதற்கான பணி அனுபவம் இருக்கிறதா? என்கிற இரண்டு அம்சங்கள்தாம் தனியார் துறை வேலை வாய்ப்பில் முன்நிற்கிற இரு பெரும் அம்சங்கள்.

பாட அறிவும் பொது அறிவும் இங்கே அதிகம் சோதித்துப் பார்க்கப்படுவதில்லை. தன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்துக்கு இவர்  பொருத்தமானவரா? தான் தருகிற ஊதியத்துக்கு இணையாக அல்லது அதற்கு மேலாக, இவரது பணிப் பங்களிப்பு மதிப்பு மிக்கதாக இருக்குமா? என்று  மட்டுமே தனியார் துறையில் பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். யாரும் கோபித்துக்கொள்ளக்கூடாது. அரசுப் பணியில்  மிக உயரிய பதவியில் உள்ளவர்களை விட திறமையானவர்கள் தனியார் துறையில் உள்ளனர்.

காரணம், இங்கே பணித்திறன் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு சிறுதொழில் நிறுவனம், அங்கே ‘லேத்’ ஒன்றில்  பணிசெய்ய ஆள் வேண்டும். என்ன தகுதி  இருந்தால் பணியில் சேர்த்துக்கொள்வார்கள்..? யாருடைய வழிகாட்டுதலும் இன்றி பணியில் சேர்ந்த முதல்  நாளில் இருந்தே, ‘லேத் மெஷின்’ பயன்படுத்தத் தெரிகிற அனுபவம் உள்ளவராக இருக்கவேண்டும். அவ்வளவுதான். தனியார் துறையில் பணிக்கு  தகுதி உடைய யாராக இருந்தாலும், அவர் யார் மூலமாக வந்தாலும், சேர்த்துக்கொள்ளப்படுவார்.

சரிதானே..? என்ன தெரிகிறது..? தனியார் துறை வேலை வாய்ப்பில், அடிப்படை விதி ஒன்று உள்ளது. அது என்ன..? ‘வேலை தெரிந்திருக்க  வேண்டும்’ அவ்வளவுதான். நன்றாக நினைவில் கொள்ளவேண்டிய விதி இது. ஒரு வேலையை முதலில் கற்றுக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும்.  கடினம்தான். ஆனாலும் இதுதான் மிக முக்கியத் தேவை. எப்படி கற்றுக்கொள்வது..? அதைப்பற்றி விரிவாகப் பார்க்கத்தான் போகிறோம்.
யார் யாருக்கு எந்தெந்த வேலையில் விருப்பம் இருக்கிறதோ, அந்த வேலையை நன்கு செய்து முடிக்கக் கற்றுக்கொண்டு,போதிய திறன் பெற்றுவிட்டால்  போதும். கவலையே வேண்டாம்.

உலகம் முழுக்க எங்கு வேண்டு மானாலும் போகலாம். தகுதியான வேலை தானாகவே தேடிவரும். மாறாக, என்னிடம் இந்தக் கல்வித்தகுதி  இருக்கிறது. வேலை கொடுங்கள் என்றால், மன்னிக்கவும், உள்ளூரிலே கூட யாரும் வேலை தரமாட்டார்கள். இந்த உண்மையை மனதில் பதிய  வைத்துக்கொண்டு, தனியார் துறைக்குள் நுழைவோம். எதிர்மறையான சிந்தனைகளைச் சற்றே ஒதுக்கிவிட்டு, தனியார்துறைப் பணி குறித்த சாதகமான  அம்சங்களைப் பார்ப்போம். முதலில், சம்பளம். தொடக்கத்தில் மிகக் குறைவான ஊதியமே கிடைக்கும். ஆனால், பணியில் தனது திறமையை ஒருவர்  நிரூபித்துவிட்டால் போதும். பிறகு, தனக்கு வேண்டிய ஊதியத்தை ‘பேரம்’ பேசிப் பெறுகிற நிலைக்கு, மிகக் குறுகிய காலத்திலேயே  அடைந்துவிடலாம்.

அடுத்ததாக, ‘பணி உயர்வு’. இன்று தனியார் துறையில் மிக உயரிய நிலையில் உள்ள எல்லாருமே ஆரம்பகாலத்தில் சாதாரண பணியில்  அடியெடுத்து வைத்தவர்கள்தாம். எழுத்துகளை அச்சுக் கோர்த்த பணியாளர், மிகப் பெரும் பத்திரிகை உரிமையாளராக உயர்ந்தது, திரைத்துறையில்  ‘லைட்மேனாக’ நுழைந்து பல கோடிகளில் படம் தயாரித்த அதிபர்களாக பரிணமித்தது போன்ற உண்மைச் சம்பவங்கள் உலகம் முழுக்க  உண்டு.மறந்துவிட வேண்டாம். ஆகவே, தனக்கான இடம், ஊதியம், அங்கீகாரம், பெருமை தனியார் துறையில் நிச்சயம் கிடைக்கும் என்கிற  நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்து பாருங்கள். ஒரு ‘தனி’ உலகம் தன் வாசல் திறக்கும். வெற்றிப்படிகளில் ஏற முதல் படியில் காலெடுத்து  வைப்போம்!

(வளரும்…)

-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி