அறிவியல் கருத்தரங்கில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி!



சாதனை

உலகத்தில் தற்போது நடப்பது நான்காம் தொழிற்புரட்சி, அதாவது 4.0 தொழில்நுட்பம். நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தது முதல் தொழிற்புரட்சி என்றும்,  மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது இரண்டாவது என்றும், கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்டது மூன்றாவது என்றும், தற்போதுள்ள டிஜிட்டல்  தொழில்நுட்பத்தை நான்காம் தொழிற்புரட்சி என்றும் அழைக்கிறார்கள். இந்த நான்காம் தொழிற்புரட்சி குறித்த கருத்தரங்கங்களும்  நடத்தப்பட்டுவருகின்றன.

தமிழகப் பள்ளிக்கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து  ‘தொழிற்புரட்சி 4.0  (Industrial Revolution (IR) 4.0 Are we prepared?) நாம் தயாரா?’ என்ற தலைப்பில் மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கப் போட்டி சென்னையில் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவ - மாணவியர் கலந்துகொண்டனர். இந்தத்  தொழிற்புரட்சிக்கு நாம் தயார் என வந்திருந்த அனைவரும் பேசுகையில், இல்லை இந்தத் தொழில்நுட்பம் நம்மைப் பாதிக்கும் என எதிர் மறையாகப் பேசிய தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அரசுப் பள்ளி மாணவி ரா.பிரான்சினா பிளஸி ஜெபமலர் முதலிடம் பிடித்தார்.

இதன்மூலம் இவர் பெங்களூருவில் அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ள தேசிய போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்த மாணவி பயிலும் லோயர்  கேம்ப் அரசுப் பள்ளி கேரள - தமிழக எல்லையில் இயற்கை வளம் நிறைந்த, பென்னிகுயிக் நினைவு மண்டபம் அமைந்த கூடலூர் பேரூராட்சிக்கு  உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. மாணவியின் பெற்றோர் தந்தை ராபர்ட் ஜார்ஜ் சுயதொழில் செய்கிறார். தாயார் ஹெப்சிபா வசந்தராணி முதுகலை  ஆசிரியை யாக இதே பள்ளியில் பணியாற்றுகிறார். தன் மகளின் திறமைகளைப் பட்டியலிட்ட மாணவியின் தந்தை ராபர்ட் ஜார்ஜ், ‘‘பிரான்சினா  சிறுவயது முதலே பேச்சுப்போட்டி, நாடகம் மற்றும் அறிவியல் கண்காட்சிகளில் பங்குபெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

சிறுவயதிலேயே அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர். பிரான்சினா இதற்குமுன்பு ஆறாம் வகுப்பு பயிலும்போது 43-வது ஜவஹர்லால் நேரு  அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், ஏழாம் வகுப்பு பயிலும்போது 44-வது ஜவஹர்லால் நேரு அறிவியல்  கண்காட்சியில் மாநில அளவில் ஐந்தாம் இடத்தையும், இன்ஸ் பயர் (Inspire Award) விருதில் மாநில அளவில் வெள்ளிப்பதக்கமும்  பெற்றுள்ளார். 2017-ஆம் ஆண்டு ‘வீட்டிற்கொரு விஞ்ஞானி’ அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

2017-ஆம் ஆண்டிற்கான ‘கணினி பயன்பாடு’ (Techno Club) போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் வென்றுள்ளார். வட்டார வள மையம்  சார்பாக நடத்தும் அறிவியல் கண்காட்சியில் 2017 மற்றும் 2018 தொடர்ந்து இரண்டு ஆண்டு கள் சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுத் தந்துள்ளார்.’’  என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், ‘‘தேசிய அளவில் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகம்  மூலம் நடத்தப்பட்ட அறிவியல் கருத்தரங்கத்தின் தலைப்பு Industrial Revolution (IR) 4.0 Are we Prepared?.

இந்தக் கருத்தரங்கில் ஆங்கிலத்தில் தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார். தற்போது நாம் தயாராக இல்லை என்பதையும், நாம் சந்திக்கப் போகும்  சவால்களையும் இதனால் இயற்கை வளம் எவ்வாறாக பாதிக்கப்படும் என்பதையும், மனித இனம் பொருளாதாரத்திலும், வாழ்க்கை முறையிலும்  எவ்வளவு தீய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் தெளிவுடன் பதிவு செய்தார். மேலும், தொழிற்புரட்சி 4.0 முதலாளிகளுக்கு மட்டுமே  லாபகரமாக உள்ளது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கினார்.

தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டமும், ரோபோக்களின் ஆதிக்கமும், வறுமை, உணவு உற்பத்திப் பாதிப்பு, தனி மனித சுதந்திரப் பாதிப்பு,  இயற்கை வளம் அழித்தல், உணவுப்பொருட்களின் நச்சுத்தன்மை அதிகரிப்பு போன்றவை பற்றி எடுத்துரைத்தார். மீநுண் தொழிநுட்பம் (Nano  Technology) மூலமாக மருத்துவத் துறையில் சாதனைகள் நிகழ்ந்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் மூலக்கூறுகள் மீநுண்  மாசுபாட்டை (Nano Pollution) உருவாக்க காரணமாக இருக்கின்றன என்பதை விரிவாக விளக்கினார்.

முடிவாக, தொழிற்புரட்சி 4.0 நாம் தற்போது தயாராக வேண்டுமெனில், மேற்கண்ட சவால்களைச் சந்தித்து, அதனை மேற்கொள்ளும்  வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும் என்று தன் கருத்தைப் பதிவு செய்து நடுவர்களின் வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்து மாநில அளவில்  முதலிடம் பெற்றாள் என் மகள்’’ என்று பெருமிதத்தோடு பேசி முடித்தார் ராபர்ட். மாணவி பிரான்சினாவிடம் பேசுகையில், ‘‘இயற்கை வளத்தைப்  பாதுகாப்பது பற்றியும், இயற்கை விவசாய முறையே மனிதனை அழிவிலிருந்தும், நோயிலிருந்தும் பாதுகாக்கும் என்பதை தெளிவாக மக்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்;

எவ்வளவுதான் தொழிற்புரட்சியை மனிதன் விரிவுபடுத்தினாலும், மனிதனுடைய வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதற்கு மனித இனம் ஒருபோதும்  இடமளிக்கக்கூடாது. மனிதன் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ ஏற்ற வகையில் இயற்கை அமைப்பு நம் உலகில் சிறப்பாக உள்ளது. இந்த  இயற்கை அமைப்பை (Natural Systems) மனிதன் மாற்ற நினைத்தால், மனிதனை இயற்கை குறுகிய காலத்திலே உலகில் வாழ  அனுமதிக்காது.’’ என்று தெரிவித்த மாணவி, ‘‘தேசிய அளவில் நடைபெறும் கருத்தரங்குகளிலும் பங்குபெற்று நம் மாநிலத்திற்கு பெருமை  சேர்ப்பேன்’’ என்று பிரான்சினா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் முதல் இடத்தைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பெங்களூருவில் அக்டோபர்5-ஆம் தேதி  விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் தேசிய அளவிலான போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒரு  ஆண்டுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் 9 மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசாக தலா ரூ.1,000 மாதந்தோறும்  ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும். இதுதவிர இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள், அறிவியல்  உபகரணங்கள் பரிசாக வழங்கப்படும்.

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ்வும், தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்துவும் மாணவியைப் பாராட்டியுள்ளனர்.  பள்ளியின் தலைமை ஆசிரியர் நா.கவிதாவும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான திருமாவளவனும் பள்ளியில் மாணவிக்குப் பாராட்டு விழா  நடத்தி உற்சாகப்படுத்தியுள்ளனர். தேசிய அளவிலான போட்டியிலும் பிரான்சினா வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்!

- திருவரசு