தமிழகத்தில் ஒருவர்தான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவரா? ஓர் அலசல்!



சர்ச்சை

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகவும், இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத்  தலைவராகவும் இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றோம். அந்நாளில்  தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. எந்த சலசலப்பும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்ட  நிலையில் இந்த ஆண்டு அதிக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த ஆண்டுவரை தமிழகத்திற்கு 22 அல்லது 23 விருதுகள் வழங்கப்பட்டு வந்தது.  ஒட்டுமொத்தமாக 374 விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுவந்தது.

இதற்கு முன்னர் விருதுபெற விரும்புவோர் தங்களது சாதனைகளை கருத்துருக்களாக்கி முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பர். அங்கு  ஒரு குழு அமைக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று பேர் மாநிலத்திற்குப் பரிந்துரை செய்யப்படுவர்.  மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்டங்களிலிருந்து வந்துள்ள கருத்துருக்கள் அனைத்தையும் பரிசீலித்து விருதுக்குத் தகுதியானவர்கள்  பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எவ்வித மாறுதலும் இன்றி விருதுக்குத் தேர்வு செய்யப்படுவர். அந்த  நடைமுறை இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு விருதுபெற விரும்புவோர் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பழைய நடைமுறைபோலவே மாவட்டத்திலும் மாநிலத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டது. இறுதியாக 6 பேர் கொண்ட பட்டியல் மத்திய அரசுக்குப்  பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையில் இருந்து அந்த 6 பேருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டு குறிப்பிட்ட  தேதியில் டெல்லியில் நேரில் வந்து பள்ளியைப் பற்றிய ஒளிஒலி செயல்விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இறுதியாக வெளியிடப்பட்ட  தேர்வுப்பட்டியலில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகச் சிறிய மாநிலமான சிக்கிமில் இருந்து மூவரும், அண்டை  மாநிலமான கர்நாடகம், தெலங்கானா ஆகியவற்றில் இருந்து மூவரும் கேரளாவில் இருந்து இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்  தமிழகத்திற்கு ஒரு விருது மட்டும் வழங்கப்பட்டதன் மூலம் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு கல்வியாளர்கள் கூறும்  கருத்துகளைப் பார்ப்போம்...
    
கு.தியாகராஜன், மாநில தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

தேசிய நல்லாசிரியர் விருது சென்ற ஆண்டு வரை 374 (தமிழ்நாட்டிற்கு - 22) பரிந்துரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 374 பேருக்கும் விருது  வழங்கப்பட்டுவந்தது. ஆனால்,தற்போது 374 பரிந்துரை விண்ணப்பங்களிலிருந்து 145 பரிந்துரை விண்ணப்பங்களாக (தமிழ்நாட்டிற்கு - 6)  குறைக்கப்பட்டுள்ளது. 145 பரிந்துரை விண்ணப்பங்களிலிருந்து வெறும் 45 பேருக்கு (தமிழ்நாடு - 1) மட்டுமே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  (Mhrd) விருது வழங்கியுள்ளது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலத்திற்கும் அதிகப்பட்ச பரிந்துரை விண்ணப்பங்களின்
எண்ணிக்கை 6 (சென்ற ஆண்டு 22) மட்டுமே இது வருந்ததக்கதாகும்.தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,15,568. உயர்  தொடக்கப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 62,156.

உயர்நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 71,794. மேல்நிலைப் பள்ளிகளில் அரசு  மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,41,509. இத்தனை ஆசிரியர்களில் வெறும் ஒருவருக்கு மட்டுமே விருது  வழங்கியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, பெருகி வரும் ஆசிரியர்களின்  எண்ணிக்கைக்கு ஏற்ப விருதுகளின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டுமே தவிர குறைப்பது ஆசிரியர்கள் மீதும்  கல்வித்துறை மீதும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஈடுபாடின்மையைக் காட்டுகிறது.

முனைவர் முருகையன் பக்கிரிசாமி, தேசிய விருது பெற்ற கல்வியாளர்

தத்துவமேதை, முன்னாள் குடியரசுத் தலைவர், பேராசிரியர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தின விழாவாக இந்நாளில்  கொண்டாடி வருகிறோம். 2004-ம் ஆண்டில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய எனக்குத் தேசிய விருது வழங்குவதற்கான அறிவிப்பு ‘மத்திய  அரசிடமிருந்து வந்தது. அதில் மத்திய அரசின் சிறப்பு விருந்தினராக ஐந்து நாட்கள் கருதப்படுவீர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தது மிக்க மகிழ்வைத்  தந்தது.

தமிழ்நாட்டிலிருந்து 22 பேரும் ஏனைய மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களோடு 5 நாட்கள் ஒருதாய் மக்கள் என கலந்து பழகினோம்.  வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டு 22 பேர் இல்லை. தமிழ்நாட்டில் கோவை ஆசிரியர் திருமதி. சதி மட்டும் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். தமிழகக் கல்வி அமைச்சர் கடிதம் எழுதி, எண்ணிக்கையை உயர்த்தப்போவதாக அறிவித்தும், ‘நீட்’ தேர்வுக் கதை ஆகிவிட்டது முடிவு. தமிழ்நாடு அரசு  விட்டுக்கொடுக்கும் பட்டியலில் இந்நிகழ்வும் ஒன்றாகிவிட்டது.

விருதால் விருது பெறுகிறவருக்குப் பெருமை என்பதைவிட விருது பெறுகிறவரால் விருதுக்குப் பெருமை என்கிற வகையில் 22 ஆசிரியர்கள்  தமிழகத்தில் கிடைக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே தமிழகம் புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது.  ‘நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே’ என்றார் புறநானூற்றுப் புலவர். இதிலும் அரசியல் வேண்டாம் என்பதுதான் அனைவரின் வேண்டுகோள்.  அதுவே எனது வேண்டுகோளும் கூட.

உமா, ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்காகவே தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது உண்மையானால், தமிழகம் வேண்டுமென்றே  புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே சரி. டிஜிட்டல் இந்தியாவாக அறிவித்திருந்தார் பிரதமர், தமிழக அரசுப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள்  தங்கள் பள்ளிகளில் இதை செயல்படுத்தி வருகின்றனர். தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கும் முன்னரே தங்கள் பள்ளி, கிராமங்களைத்  தூய்மையாகவே வைத்து பெருமைபடுத்தியோர் ஏராளம் நம் தமிழகத்தில். இதேபோல ஒவ்வொரு பிரிவிலும் சில நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை நம்  தமிழகத்தில் அடையாளம் காணலாம்.

இடைநிற்றல் ஏற்படாமலிருக்க பல ஆசிரியர்கள் பல்வேறு முறைகளைக் கையாண்டு தொடக்கப் பள்ளியில் கூட 600க்கும் மேற்பட்ட மாணவர் படித்து  வரும் பல பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. சமூகத்துடன் இணங்கி, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வழியே பள்ளிகளை வழிநடத்தி   கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி வரும் பள்ளிகள் சில நூறு. மக்களின் பாராட்டைப் பெற்று கல்விச் சீர் பெற்று வளப்படுத்தி வரும் ஆசிரியர்கள்  பல நூறு பேர். வகுப்பறையில் நூலகம் அமைத்து மேம்படுத்தி மாணவர் சிந்தனையை நெறியாக்கி வாழும் ஆசிரியர் பல நூறு பேர். விளையாட்டுத்  துறையில் சாதிக்கும் மாணவரை உருவாக்கி வரும் ஆசிரியர் பல நூறு பேர்.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்திய அளவில் சாதிக்கும் மாணவரை உருவாக்கும் ஆசிரியர் பல நூறு பேர். பசுமை இந்தியாவை உருவாக்க  கற்பித்தலோடு இணைத்து மாற்றம் படைத்து வரும் ஆசிரியர்கள் பல நூறு பேர். மேற்கூறியவர்களுள் சரியான மதிப்பீட்டைத் தந்து ஏன் இவர்களை  எல்லாம்  மாநில அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யவில்லையா அல்லது பரிந்துரை செய்து மத்திய அரசு நிராகரிப்பு செய்ததா? சில  கல்வியாளர்களிடம் இதுபற்றி பேசுகையில், இந்த ஆண்டு மாநில அரசு தேர்வு செய்து பரிந்துரைத்தவர்களுக்கு டெல்லியில் ஒரு நேர்காணல் வைத்ததே  இந்தப் புறக்கணிப்புக்கு மிக முக்கியக் காரணம் என்கின்றனர். எது எப்படியோ தமிழக ஆசிரியர்கள் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டு இருப்பதும்  திட்டமிட்ட கல்வி அரசியல்தான்.

- தி.ஜெனிபா