கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8,339 பணி வாய்ப்புகள்!வாய்ப்பு

ராணுவத்தினரின் குழந்தைகளுக்கான கல்வி நிறுவனமாக இந்திய அரசால்  1962ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளிகள். தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாக உள்ளது.

இந்த அமைப்புக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகள் உட்பட மொத்தம் 1190 பள்ளிகள் இயங்குகின்றன. இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இப்பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வர், துணை முதல்வர், நூலகர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என்பன போன்ற மொத்தம் ஏழு பிரிவின் கீழ் 8,339 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

பணியிடங்கள்

முதல்வர், துணை முதல்வர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நூலகர், பிரைமரி ஆசிரியர், பிரைமரி இசை ஆசிரியர் உள்ளிட்ட 8,339 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடத்தப்படவிருக்கின்றன.
 
கல்வித் தகுதி

முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய ஏழு வகையான பிரிவின் கீழ் ஆள்சேர்ப்பு நடத்தப்படவிருப்பதால் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பதவிகளுக்கேற்ப உள்ள கல்வித்தகுதி விவரங்களை www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

வயது வரம்பு

இப்பணியிடங்களில் முதல்வர் பணியைத் தேர்ந்தெடுக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 35 முதல் 50 வயதுக்குள்ளும், துணை முதல்வர் பணிக்கு 35 முதல் 45 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்குள்ளும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர் பணிக்கு 35 வயதுக்குள்ளும், நூலகர் பணிக்கு 35 வயதுக்குள்ளும், பிரைமரி ஆசிரியர் மற்றும் பிரைமரி இசை ஆசிரியர் பணிகளுக்கு 30 வயதுக்குள்ளும் இருத்தல் அவசியம். எஸ்.சி., எஸ்.டி. விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 13.9.2018.

தேர்வுக் கட்டணம்

முதல்வர், துணை முதல்வர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.1500ம், மற்ற பணிகளுக்கு ரூ.1000ம் தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்தல் வேண்டும். மேலும்
எஸ்.சி/ எஸ்.டி / மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்வுக் கட்டணம் ஏதும் கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் முழு விவரங்களுக்கு www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா.