நவீன கட்டடக்கலை படிப்புகளும் வாய்ப்புகளும்!



புதிய படிப்பு

கட்டடக்கலையில் உலகுக்கே முன்னோடியாக திகழ்வது நம் தமிழகம் என்பதை ஓங்கி நிற்கும் தஞ்சைப் பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் என பல கோயில்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
அதற்கும் ஒருபடி மேலே போய் அகழ்வாராய்ச்சியில் கீழடியில் புதையுண்டு கிடைத்த நகரமைப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இவையெல்லாம் நம்மை பிரமிப்புக்குள்ளாக்கிய பழங்கால கட்டடக்கலைகள். தற்போதைய கட்டடக்கலை வேறு விதமானது. அதற்கான தனிப் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளே உள்ளன.

கட்டடக்கலைத்துறை நவீனத்துவம் பெற்று வருகிறது. அக்கலை படிப்புகளைப் படிப்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் உலகம் முழுக்க விரிந்துகிடக்கிறது. அத்தகைய கலைப்படிப்புகள் என்னென்ன, அதற்கான வாய்ப்புகள் எங்கே எப்படி உள்ளது என்பது பற்றிய கருத்தரங்கம் 4.0 என்ற தலைப்பில் மிடாஸ் (மார்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் ஆர்க்கிடெக்சர், சுவர்ணபூமி) சார்பில் சென்னையில் நடந்தது. இக்கருத்தரங்கில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ  மாணவியர் பெருமளவில் வந்து கலந்துகொண்டனர்.

கனடா ரிசர்ச் சென்டர் நிறுவனத்தின் தலைவர் அனுஜ் சர்மா மாணவர்களுக்கு கட்டடத் துறையின் நவீனத்துவம் மற்றும் அதனை செயல்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பவர் பாயின்ட் வீடியோ மூலம் திரையிட்டு விளக்கினார்.

இந்த உலகம் தொழில்நுட்பத்துறையினால் எவ்வாறு மாற்றம் கண்டு வருகிறது என்பது பற்றியும் விரிவாக விளக்கினார். உலகின் ஒவ்வொரு துறையிலும் கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி மூலம் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றம் பற்றி விளக்கினார். கலந்தாய்வு நேரத்தின்போது, மாணவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

மிடாஸ் நிறுவனத் தலைவர் சஷாங்க் சாக்ராடியோ பேசுகையில், ‘‘கட்டடக்கலை மற்றும் கட்டுமானத்துறை இன்னும் சில ஆண்டுகளில் ஏஐ (AI - Artifitial Inteligence) மற்றும் ஐஓடி - (IOT Internet of Things) ஆகிய படிப்புகள் கட்டடக்கலை மற்றும் கட்டுமானத்துறையில் இன்னும் சில ஆண்டுகளில் மேலாதிக்கம் செலுத்தும்.

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது மனிதனைப் போன்று பார்க்கும் திறன், பேச்சைப் புரிந்துகொள்வது, முடிவெடுக்கும் திறன் நுண்ணறிவுகொண்ட கணினிகளைப் பற்றி படிக்கும், உருவாக்கும் தொழில்நுட்பம் ஆகும்.

அதேபோல செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்ட ரோபோக்கள் மூலம் நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டீர்கள் என்பதை உணர்ந்து, படுக்கையறையில் உள்ள விளக்கு, மின்விசிறி, ஏசி-யினை அணையச் செய்தல் போன்ற செயல்களைச் செய்யும். இந்த ஏசி, மின்விளக்கு, மின்விசிறி, ரோபோ போன்றவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். இந்த ஒருங்கிணைப்பினை செய்வதற்கான கல்வியே ஐஓடி’’ என்றவர், கட்டடக்கலைத்துறை பற்றி விளக்கினார்.

‘‘கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் என்பது கட்டடத்தின் வடிவமைப்பை மாற்றுவதன் மூலம் அதன் வாழ்நாளை அதிகரிப்பது ஆகும். எடுத்துக்காட்டாக சமதளமான கூரை உங்கள் வீட்டில் உள்ளது என வைத்துக்கொள்வோம்.

மழைநீர் கூரையில் தேங்கி நின்று வெளியேறும். அது, கட்டடத்துக்கு பலவீனத்தை ஏற்படுத்தும், கட்டடம் விரைவில் சேதமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேநேரத்தில், கூரையை கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் மூலம் சரிவாக வடிவமைக்கும்போது, ஒருசில நொடிகள் கூட கூரையில் மழைநீர் தேங்காது.

கிராமங்கள் அனைத்தும் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக நகரமயமாக்கப் பட்டுவருகின்றன. எனவே, உணவுத் தேவைக்காக வசிக்கும் இடங்களிலேயே விவசாயம் செய்யும் அடுத்த நிலைக்கு நாம் சென்றுகொண்டிருக்கிறோம். சரிவான மலைப்பாங்கான பகுதிகளிலும் பண்ணைகளை உருவாக்கி பயிரிடக்கூடிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துவருகின்றன.

மக்கள் தங்களுக்குத் தேவையான கீரை மற்றும் காய்கறிகளை தங்கள் வீட்டுமாடிகளிலும் பால்கனிகளிலும் வீட்டிற்கு உள்ளேயும் வளர்த்துவருகின்றனர். இதனால் கட்டடங்கள் பாதிக்காவண்ணம் இருப்பதற்கு ஏற்ற வகையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். இதற்கு கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி பெரிதும் உதவுகிறது.

கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது மற்றுெமாரு வளர்ந்துவரும் தொழில்நுட்பம். ஒருவர் 10 கணினிகளை ஒருங்கிணைக்க ஒரு சர்வர் தேவைப்படுகிறது எனில், அதனை சொந்தமாக நிறுவ பல லட்சங்கள் தேவைப்படும்.

ஆனால், அவ்வாறின்றி அதேபோன்ற சர்வர் உலகின் ஏதோ ஒரு நாட்டில் இருந்தால்கூட அதனை வாடகைக்கு எடுத்து அந்த சர்வருடன் இந்தக் கணினிகளை இணைப்பதால் சில நூறு ரூபாய் செலவுகளில் இந்த வேலையை செய்துவிட இயலும். இவ்வாறு உலகில் இருக்கும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது. இந்தப் படிப்புகளைப் படித்து முடித்தவுடன் வேலையில் சேர்வதற்கான வாய்ப்பு உலகெங்கும் விரிந்துகிடக்கிறது’’ என்றார்.

மாற்றம் ஒன்றே மாறாதது. மாறிவரும் நவீனத்துவத்துக்கு ஏற்ப நாமும் மாற்றங்களை ஏற்படுத்தக் கற்றுக்கொண்டால்தான் வெற்றிக்கான வாய்ப்புகள் அமையும் என்பதை இந்தக் கட்டடக்கலைத்துறை நுண்ணறிவு படிப்புகள் மாணவர்களுக்கு உணர்த்தும் என்பது நிதர்சனமான உண்மை.

தோ.திருத்துவராஜ்.