செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்  

கணினி ஆசிரியர் பணிக்குப் புதிய கல்வித் தகுதி!

பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இந்நிலையில் 748 அரசுப் பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க ஓராண்டுக்கு முன் பள்ளிக்கல்வி இயக்குநரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, ‘கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்’ என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்துப் பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காகக், கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புதிய கல்வித் தகுதிக்கான கோப்பை தயாரித்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில் கணினி அறிவியல் பாடம் நடத்த, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், கணினி பயிற்றுநர்கள் என்ற பதவியில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுக்க வேண்டும்.

பள்ளிக்கல்வி விதிகளின்படி, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். எனவே, இந்த விதிகளின்படி, கணினி அறிவியல் பாட ஆசிரியர் பதவிக்கு, முதுநிலைப் படிப்புடன் பி.எட்., முடித்தவர்களை நியமனம் செய்ய விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவரும் நிலையில், சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு வழங்கப்படும் 14 விதமான நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதற்காக ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டுவருகிறார்கள். பொதுவாகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூலை மாத இறுதியிலேயே நிறைவடைந்துவிடும். கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்டு 31 வரை நீடிக்கப்பட்டுவந்த நிலையில், பின்னர் செப்டம்பர் 30 வரை நீடிக்கப்பட்டது.

அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நீட்டிப்பைப் பயன்படுத்தி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், வட்டார கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு இல்லை!

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியிருந்தார். தற்போது இந்த திட்டத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அளித்துள்ள பதிலில், 2019ம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019 ல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. 2019 ல் குறைந்தபட்சம் ஆஃப்லைன் (offline) முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன், மனிதவள மேம்பாட்டுத் துறை ஆலோசித்துவருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறைக்கு அளித்த அழுத்தம் காரணமாக 2019ல் பிப்ரவரி மற்றும் மே மாதங்கள் என இருமுறை நீட் தேர்வு நடத்தும் யோசனை மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பேப்பர் - பேனா முறையிலேயே தேர்வை தொடர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

5,000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம்!

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் வாங்க வேண்டும். அந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வித்துறைக்கு கீழே இருக்கக்கூடிய ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் பெறவேண்டும். உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளாக இருந்தால் தனியார் பள்ளி இயக்குநரிடம் அங்கீகாரம் வாங்க வேண்டும்.

ஆனால், தமிழகம் முழுவதும் கட்டட அங்கீகாரம் வாங்காத 5,000 பள்ளிகள் இயங்கிவருகின்றன. குறிப்பாக மெட்ரிகுலேஷன் இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 2,000 பள்ளிகள், தொடக்கக் கல்வித்துறைக்கு கீழே உள்ள 2,000 பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,000 பள்ளிகள் என 5,000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவருகின்றன.

இந்தப் பள்ளிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்துவருகின்றனர்.இலவசம் மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் இயங்கக்கூடாது. அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது சட்டத்திற்கு எதிரானது. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 5,000 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரத்தை 31.05.2019-ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.