பயம் ஓர் உருவமில்லா மிருகம்!



உளவியல் தொடர் 49

உடல்... மனம்... ஈகோ!


Letting go of your ego opens the door to taking a new and creative course of action. Suzanne Mayo Frindt
- ஈகோ மொழி

மனிதர்கள் பொதுவாக ஒரு புதிய சூழலில் தங்களின் உண்மையான குணத்தை, நிஜமான ஆளுமையை வெளிப்படுத்தத் தயங்கியபடியே இருப்பார்கள். காரணம், மனதிற்குள் திடீரென்று எட்டிப் பார்க்கும் பயம்தான். உள்ளுணர்வு சிகிச்சைமுறை பயணத்தோடு (Intuitive Healing Journey) ஈகோவின் துணைகொண்டு பயத்தைப் போக்கி, ஆளுமைத்திறனை வளர்க்கமுடியும்.

பயம் ஒரு ஆழமான உணர்ச்சி. அது ஒரு தத்தளிப்பு நிலை. அந்தத் தத்தளிப்புதான் மனதைத் துவளச் செய்துவிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் எப்போதும் ஏதோ ஒன்றைப்பற்றி பயந்தபடியே இருக்கிறான். உதாரணமாக, சிலருக்கு கார் ஓட்டுவதில் பயம் இருக்கும். இத்தனைக்கும் அவர்களிடம் சொந்தமாக கார் இருக்கும், கார் ஓட்டத் தெரியும், உரிமமும் வைத்திருப்பார்கள்.

ஆனால், தனியே கார் ஓட்டவேண்டிய சூழல் வரும்போது திடீரென்று பயப்படுவார்கள். இப்படியான பயத்தை ஈகோவைக் கொண்டு போக்க பயன்படுத்தும் முறைதான் உள்ளுணர்வு சிகிச்சைமுறை பயணம். இதை அகச் சிகிச்சை - புறச் சிகிச்சை என்று இரண்டு நிலைகளில் மேற்கொள்ளலாம்.

இந்த இரு சிகிச்சை முறைகளிலும் முதலில் எந்தச் சூழல் பயத்தை தோற்று விக்கிறதோ அதில் நம்மை வலிய ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நீச்சல் அடிப்பதன் மீதான பயம் தண்ணீரில் குதிப்பதிலிருந்து விலகுவதைப் போல், பயம் உருவாகும் சூழலைச் சந்திப்பதிலிருந்துதான்  பயம் உருவாவதற்கான காரணத்தை அறியவும், பின் அதனைக் களையும் சந்தர்ப்பத்தையும் கண்டறிய முடியும். எனவே, முதலில் அந்தச் சூழலை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

கார் ஓட்டும்போது ஏன் பயம் வருகிறது? எந்த இடத்தில் பயம் எட்டிப்பார்க்கிறது? என்பதைக் கண்டறிய முதலில் செய்ய வேண்டியது டிரைவிங் சீட்டில் உட்காருவது. அந்த இடத்தில் ஈகோ விழித்துக்கொண்டு தனது சிகிச்சை முறையைத் தொடங்கிவிடுகிறது.

அதன் பலனாக நெரிசலான இடத்தில், குறுகலான பாதையில், திடீரென்று எதிர்ப்படுபவர்களால் பயம் எழுவதும், மோதிவிடுவோமோ என்ற அச்சம் பயமாக மாறுவதும் தெரியவரும். சூழலால் எழும் பதற்றம், நடுக்கம் தன்னம்பிக்கையைக் குலைத்து தடுமாறச் செய்வது பயம் உருவாவதற்கு காரணமாக அமைவது புரியும்.

இதில் விசித்திரம் என்னவென்றால் எது பயம் என்பது புரிய ஆரம்பித்தவுடனேயே பயத்தின் அடர்த்தி குறையத் தொடங்கிவிடும். தைரியமா ஓட்டலாம், மெதுவா ஓட்டலாம் என்ற ஈகோவின் சிகிச்சை முறையால்,  ஒரு கட்டத்தில் கார் ஓட்டுதல் இயல்பான செயலாக மாறி, பயங்களும், தயக்கங்களும் உடைந்து, ‘சே… இதுக்கா பயந்தோம்’ என்று பின்னர் புன்னகைக்க வைக்கும்.

பயம் ஓர் உருவமில்லா மிருகம். அது மனதின் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு சதா குரல் எழுப்பிக்கொண்டே இருந்தாலும், அதன் அடர்த்தி எத்தனை கனமானதாகவும் இறுக்கமானதாகவும் இருந்தாலும் ஈகோவின் துணையுடனான சிகிச்சைமுறைப் பயணத்தில் அது காற்றில் கரையும் கற்பூரமாக மாறுவதை பயமின்றி பார்க்க முடியும். ஈகோவின் துணையுடனான இப்பயணம் மனிதர்களின் ‘நான்’தனைத் தேடிக் கண்டறியும் பயணமாகவும், பயத்தை விரட்டும் பயணமாகவும் இருக்கும். தொடர்ந்து பயணப்பட பயணப்பட பயத்தின் ஒவ்வொரு layerம் வெங்காயத்தின் மேல்தோல்போல் உரிந்து கழன்று சென்றுகொண்டேயிருக்கும்.

சிலருக்குச் சிந்தனையிலும், யோசனையிலும் பயம் எழுந்து வேகத் தடையை காட்டி நிற்கும். உதாரணமாக, சில விஷயங்களை நினைக்கவே (குறிப்பாக பரிட்சை) சிலர் பயப்படுவார்கள். ‘இதை செய்யணும்... அதைச் செய்யணும்னு நினைச்சாலே பயமா இருக்கு’ என்று சொல்வது இதனால்தான்.

எண்ணங்களின் மீதான பயத்தைப் போக்க, ஈகோவுடனான அகச்சிகிச்சை முறையைக் கையாளத் தொடங்கும்போது, முதலில் உடலுக்கு உபாதை தராத இடத்தில் சௌகர்யமாக உடலை தளர்த்தி அமர வேண்டும்.

(படுக்கக் கூடாது. உறங்கிப்போகும் அபாயம் உண்டு) புறச் சூழலால் உடலுக்கு இடையூறும் இல்லாத நிலையில் அமர்ந்து எண்ணங்களையும், யோசனையையும் விரிவடையச் செய்து கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கும்போது, பயம் எந்த புள்ளியில் எட்டிப்பார்க்கிறது, அதைக் கடந்து செல்வதற்கான வழி என்ன என்பதும் புரியவரும். (பரிட்சையில் மார்க் குறைஞ்சிடுமோங்கிறது பயம்) இந்தச் சிகிச்சை முறையை ஒரு தேடுதல் முறை என்றுகூட சொல்லாம்.

உளப்பூர்வமான சிகிச்சை முறையிலான கவனிப்பின்போது எண்ணங்களையும், பயங்களையும், அதை விலக்குவதான வழிமுறைகளையும் ஒரு நேரடி வர்ணனைபோல் வார்த்தைகளாகச் சொல்லிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வார்த்தைகளின் ஓசை மனதில் பதிந்து ஒரு செயல்பாடாக மாறி பலனளிக்கும். எந்த இடத்திலும் முன் முடிவுகளுடன் அணுகக்கூடாது. புதியபாதையில், புதிய பயணத்தில் இருப்பதாக எண்ணிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் சுவாரஸ்யமும், இனிமையையும் பயனுள்ளதாக இருக்கும்.

உள்ளுணர்வு சிகிச்சைமுறைப் பயணத்தால் உடல் தளர்ந்து, மனம் தெளிவடைந்து, எண்ண ஒட்டங்கள் சீராகி, ஈகோ அமைதியாகி, மனம் பதற்றமின்றி இருப்பதுதான் இதன் சிறப்பு. இது தியானத்திற்கு இணையானது. இதில் ஈகோ துணைநிற்பதால் ஆளுமையை வடிவமைக்கும் எண்ணங்களைத் தடுக்கும் இடங்களையும், அதைக் கடந்து வரச் செய்யும் முறைகளையும் இனம் கண்டு அதைச் சரிசெய்துகொள்ள வழிவகுத்துத் தருகிறது.

ஈகோவின் துணையுடனான வேகமற்ற நடையிலான இந்தச் சிகிச்சை முறைப் பயணத்தில் பயத்தையும், தயக்கத்தையும் வெல்வேன் என்ற நேர்மறை எண்ணம் அவசியம் வேண்டும். கூடவே மிக முக்கியமாகத் தேவைப்படும் மற்றொன்று - பொறுமை.

குரு சிஷ்யன் கதை

மனதை விசாலமாக்கு!

குருவும் சிஷ்யனும் ஆசிரமத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞன் வந்தான். குருவைப் பார்த்ததும் அவன் கதறி அழத் தொடங்கினான். சிஷ்யன் ஆச்சர்யமாக பார்த்தான். இளைஞன் அழுது முடிக்கும்வரை பொறுத்திருந்த குரு கனிவாகக் கேட்டார்.‘‘இளைஞனே, ஏன் இப்படி அழுகிறாய்? உனக்கு என்ன பிரச்னை?’’ என்றார்.

அதற்கு இளைஞன் “குருதேவா, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்துவருகிறேன். எதிலும் தோல்வி. தாங்கமுடியாத துயரம்.  ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை. என் மனம் மிகவும் பலவீனமாகிவிட்டது. என் பிரச்னைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மனம் வலிமை பெற ஒரு வழி சொல்லுங்கள்’’ என்றான் அழுதபடியே.

இளைஞனின் அருகே வந்த குரு அன்புடன் அவன் தலையை தடவிக்கொடுத்தார். சிஷ்யனைப் பார்த்து உப்பை எடுத்து வரச் சொன்னார். அதை அந்த இளைஞனிடம் தந்து, “இளைஞனே, இந்த உப்பை அந்த குவளையிலுள்ள நீரில் கலந்து அருந்து’’ என்றார்.இளைஞன் குரு சொன்னபடியே செய்தான்.

இரண்டு வாய் குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது. மேற்கொண்டு குடிக்க முடியாமல் குவளையைக் கீழே வைத்து, “என்னால் குடிக்கமுடியவில்லை குருதேவா மிகவும் கரிக்கிறது.” என்றான்குரு அவனிடம் மீண்டும் கொஞ்சம் உப்பைத் தந்து, “சரி இதை எதிரில் இருக்கும் அந்தக் குளத்தில் கரைத்து, அந்தக் குளத்துநீரைக் குடித்துப் பார்”என்றார்.

இளைஞன் குரு சொன்னபடியே செய்தான். குளத்துநீரில் கரிப்பு கொஞ்சம் கூடத் தெரியவில்லை. தாகம் தீர நீரைக் குடித்துவிட்டு வந்தான்.‘‘பார்த்தாயா... நீ குவளையிலும், குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான்.

ஆனால், சிறிய குவளையில் இருந்த தண்ணீரில் கரைந்த உப்பு அதிக கரிப்புச் சுவையாக இருந்தது. குடிக்க முடியவில்லை. ஆனால், அதே உப்பு அதிக நீர்கொண்ட குளத்து நீரில் கரைக்கப்பட்டபோது, கரிப்புச் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை. மனித வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் உப்பைப் போலத்தான்.

வாழ்க்கை நெடுகிலும் அவை வந்துகொண்டேயிருக்கும். மனதைக் குவளையைப்போல் குறுக்கிக்கொள்ளாமல், குளத்தைப்போல் விஸ்தாரமாக்கிக்கொள்ள வேண்டும். மனதின் அளவு விசாலமாகும்போதுதான் துன்பங்கள் கரைந்து காணாமல் போகின்றன. எனவே, நிறைய அறிவையும் அனுபவங்களையும் பெற மனதைப் பெரியதாக்கு, வலுப்படுத்து. அப்போது உன் துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப்போல் கரைந்து காணாமல் போகும். அந்தத் தெளிந்த நிலையில்தான் வாழ்க்கைக்கான புதிய வழிகள் புலனாகும்”என்றார்.

குருவைப் பார்க்க வந்த இளைஞன், ‘‘நீங்கள் சொல்வது உண்மைதான் குருவே. இப்போது புரிந்துவிட்டது மனதை வலிமையாக்கும் வழி” என்று சொல்லி வணங்கிவிட்டுச் சென்றான்.

- தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு