IIM-ல் முதுநிலை மேலாண்மை பட்டம் படிக்க CAT-2018 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க!



நுழைவுத்தேர்வு

இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு மற்றும் மேலாண்மை ஆய்வாளர் படிப்புகள் போன்றவற்றில் சேர்க்கை பெறுவதற்கான பொது சேர்க்கைத் தேர்வுக்கு (Common Admission Test - CAT 2018) இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டின் கல்வி நிறுவனங்கள் அஹமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, போத் கயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ஜெய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டாக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மாபூர், திருச்சிராப்பள்ளி, உதய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் உள்ளன.

எந்தெந்த கல்வி நிறுவனத்தில் என்னென்ன படிப்புகள் வழங்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்...மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் PGP (Post Graduate Programme) என்ற படிப்பு வழங்கப்படுகிறது.

PGP - FABM (Post Graduate Programme in Food and Agri-business Management) என்ற படிப்பு அஹமதாபாத்திலும், PGPEM (Post Graduate Programme in Enterprise Management) என்ற படிப்பு பெங்களூருவிலும், e-PGP (eMode Post Graduation Programme) என்ற படிப்பு அஹமதாபாத்திலும், PGPPM (Post Graduate Programme in Public Policy Management) என்ற படிப்பு பெங்களூருவிலும், PGP-HRM (Post Graduate Programme in Human Resource Management) என்ற படிப்பு இந்தூர், ராஞ்சியிலும், EPGP (Executive Post Graduate Programme in Management) என்ற படிப்பு காசிப்பூர், கோழிக்கோடு, ரோஹ்டாக் ஆகிய நிறுவனங்களிலும், PGP-ABM (Post Graduate Program in Agri-Business Management), PGP - SM (Post Graduate Programme in Sustainable Management) என்ற படிப்பு லக்னோவிலும், EPGPX  (One Year Post Graduate Programme in Management for Executives) என்ற படிப்பு ரோஹ்டாக்கிலும், PGPEX (Post Graduate Program for Executives) என்ற படிப்பு ஷில்லாங்கிலும், PGPBM (Post Graduate Programme in Business Management) என்ற படிப்பு திருச்சி யிலும் உள்ளன.

மேலும் பிஎச்.டி (Ph.D) படிப்பிற்கு இணையான படிப்புகள் அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, இந்தூர், காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, ஜெய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டாக், ஷில்லாங், திருச்சி, உதய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ளன.

விண்ணப்பிக்கத் தகுதி

இளநிலைப் பட்டப்படிப்பில் பொதுப்பிரிவினர் குறைந்தது 50 விழுக்காடும் அல்லது அதற்கு சமமான மதிப்பீடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 45 விழுக்காடும் அல்லது அதற்கு சமமான மதிப்பீடும் பெற்றிருக்க வேண்டும். தற்போது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்களும் தேர்வு எழுதி தேர்வு முடிவிற்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இட ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் 15 விழுக்காடும், 7.5 விழுக்காடு பழங்குடியினருக்கும், நான் கிரீமி பிரிவைச் சார்ந்த பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடும், 5 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iimcat.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,900, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.950 செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 19.9.2018.

நுழைவுத் தேர்வு

இந்த நுழைவுத்தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி என்று 7 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 140 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு எழுதுவதற்கான மையங்களாக 4 மையங்கள் வரை குறிப்பிட வேண்டும். இந்த மையங்களில் ஏதாவதொரு மையம் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மையங்கள் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் அருகிலுள்ள வேறொரு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.தேர்வு முறையைப் பற்றி ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் வலைத்தளம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். CAT-2018 தேர்வின் ஸ்கோர் ஒரு இன்றியமையாத தகுதியாகும்.

இத்தேர்வில் பொதுவாக குவாண்டிட்டேட்டிவ், ஆப்டிடியூட், வெர்பல் எபிலிட்டி, லாஜிக்கல், அனாலிட்டிக்கல் ரீசனிங், டேட்டா இண்டர்பிரட்டேசன் ஆகிய பாடப்பிரிவுகளில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். தேர்வர்களின் நேர மேலாண்மையைச் சோதிக்கும் வகையில் இத்தேர்வு இருக்கும்.

குவாண்டிட்டேட்டிவ் பிரிவில்வடிவக் கணிதம், மீப்பெரும், மீச்சிறும் மதிப்பு, சராசரி, திரிகோணமிதி, அல்ஜீப்ரா, பார்ட்னர்ஷிப், அளவியல், இலாப  நட்டம், நேரம், வேகம், தூரம், விகிதம், ஓருறுப்பு, ஈருறுப்பு சமன்பாடுகள், இருபடி சமன்பாடுகள், அடுக்குக்குறி விதிகள், எண்கள், ஜாமெட்ரிக் புரொகிஷன், இன் ஈகுவாலிட்டி, வேலை, நேரம், விழுக்காடு, மடக்கைகள் இடம்பெறும்,ஆங்கிலத்தில்கோடிட்ட இடம், வெர்பல் ரீசனிங், வாக்கியங்கள் முடித்தல், இலக்கணம், சிலாகிசம் (syllogisms), ஜம்புல்டு பாராகிராப், பத்தி முடித்தல், கான்டக்ஸ்டு யூசேஜ், ஆங்கில அயல்மொழி வார்த்தைகள், காம்ப்ரிஹென்சன், அனாலஜி, வாக்கியங்கள் பிழைகள் திருத்துதல், வெர்பல் லாஜிக், ஒரே வார்த்தையில் பல்வேறு பயன்கள், இடியம்கள், பாரா ஜம்புல்ஸ், எதிர்ப்பதங்கள், ஒரு வார்த்தை பிரதியீடு ஆகியவை இடம்பெறும்.

அனாலிட்டிக்கல் ரீசனிங் பிரிவில்இரத்தத் தொடர்பு, தொடர்கள், பிரிப்போசிசன், விடுகதைகள், கடிகாரம், காலண்டர், தொடர்கள், விவரங்கள் வரிசைப்படுத்துதல், குடும்ப உறவுகள், பைனரி லாஜிக், இடம் வரிசை, வெண் படம், கணம், விவர வடிவம், சிலாகிசம் ஆகியவை இடம்பெறும்.டேட்டா இண்டர்பிரட்டேசன் பிரிவில்டேபிள்ஸ், பை சார்ட்ஸ், கேசில்ட்ஸ், பார்ஸ் லைன் கிராப், டேட்டா சபிசியன்ஸி ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

அனுமதிச் சீட்டு

விண்ணப்பித்த மாணவர்கள் இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை (Admit Card) 24.10-2018 முதல் 25.11.2018 வரை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் பொது நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்
களில் 25.11.2018 அன்று நடத்தப்பெறும்.

தேர்வு முடிவுகள்

இத்தேர்வின் முடிவுகள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படும். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்தத் தேர்வை அங்கீகரிக்கும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக்கும்.