நிழலாடும் நினைவுகளில் கலைஞர்!



பயிற்சி

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழக மக்களின் பேராதரவு பெற்ற தமிழறிஞரும், அயராத உழைப்புக்கு உதாரணமானவருமான முன்னாள் முதல்வர் தி.மு.க-வின் தலைவர் கலைஞரின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு. அவரைப் பற்றிய நினைவலைகள் எல்லோரையும் போல எனக்குள்ளும் நிழலாடுகின்றது.

1990களின் இடைப்பகுதியில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நிலவிய நேரத்தில், தலைமைச் செயலகத்திலிருந்து எனக்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது. அப்பொழுது நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததோடு, நுழைவுத்தேர்வுகள் மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவை இயக்கிவந்தேன். மற்ற மாநிலங்கள் நம்மை முன்மாதிரியாக கொள்ளுமளவுக்கு இத்துறையில் நம் செயல்பாடு சிறப்பாக இருந்தது. தலைமைச் செயலகத்திலிருந்து பேசியவர் முதல்வரின் செயலர். ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி.

என்னிடம் பேசிய அதிகாரி தமிழகப் பொதுப்பணித்துறையில் பெரிய அளவில் பணி உயர்வுகள் தரவேண்டியிருப்பதாகவும் அதற்கு வசதியாக ஒரு திறத்தேர்வு நடத்தித் தருமாறும் என்னைக் கேட்டார். நான் திகைத்துப் போனேன். நான் எனக்கு உள்ள பணிகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, திட்டம் போட்டுச் செயல்படுத்துபவன். திடீரென்று இதை எடுத்துக்கொள்ள முடியாது.

இதை அவருக்குத் தொலைபேசியில் விளக்கி, மேலும், “நாங்கள் நடத்தும் தேர்வுகள் மாணவர்களுக்கான உயர்கல்வி நுழைவுத்தேர்வுகள்; நீங்கள் சொல்லும் பதவி உயர்வுக்கான தேர்வுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பகம் முதலியவற்றின் மூலம் நடத்திக்கொள்ளலாமே” என்றேன். அவர் சற்று நிதானித்து விட்டு, “மீண்டும் பேசுவோம்” என்று சொல்லி நிறுத்தினார்.

சற்று நேரத்தில் அவரே மீண்டும் பேசினார். “முதல்வர் இதை நீங்கள்தான் செய்யவேண்டும் என விரும்புகிறார்” என்றார். நான் பெருத்த மகிழ்ச்சியுடன் அதைச் செய்து முடித்தேன் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.இதன் மூலம் இரண்டு உண்மைகள் தெளிவாகின்றன. ஒன்று, கலைஞர் செயல்பாடுகளுக்கேற்ற பதவி உயர்வு தருவதிலும் தகுதிக்கு மதிப்பளிப்பதிலும் உறுதியாக இருந்தது. இரண்டு, அன்றைய அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விச் செயல்பாடுகளில் அவருக்கு இருந்த அளவுகடந்த நம்பிக்கை.

1999 வரை நான் இந்தப் பொறுப்பில் இருந்தேன். அந்த நாட்களில் நான் நடத்திய நுழைவுத் தேர்வுகளிலும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையிலும் அரசின் எந்தத் தலையீடும் இருந்ததில்லை. கல்வியாளர்களின் பொறுப்பிலேயே எல்லாமே சீராக நடந்தன. முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணனின் ஈடு இணையில்லா ஒற்றைச்சாளரச் சேர்க்கை முறை கலைஞர் ஆசியுடன் இந்தக் காலகட்டத்தில்தான் (1997ல்) அறிமுகமானது. கலைஞரின் ஆட்சிக் காலம் கல்விக்குப் பொற்காலம் எனலாம்.

கலைஞருடன் எனக்கு நேர்ந்த மற்றொரு அனுபவமும் நினைவுகூரத்தக்கது. 29.09.2000 அன்று தலைமைச் செயலகத்தில் கலைஞரின் கரத்திலிருந்து பொன்னாடையும் பாராட்டுக் கேடயமும் பெற்ற சிலரில் நானும் ஒருவன். முதல்வரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாடு. பள்ளிக் கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வியை இணைக்கும் பணியை அவர் தலைமை ஏற்று வெற்றிகரமாக முடித்திருந்த நேரம் அது.

அப்பணியில் திட்டமிடல், நூல் எழுதுதல் முதலிய பல பணிகளை ஆற்றியவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி அது. அந்தப் பாராட்டு நிகழ்ச்சியின்போது நான் முதல்வரின் மேசைக்கு அருகில் நேர் எதிரில் அமர நேர்ந்தது. ஆகவே, என்னைப் பெயர்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு, பள்ளி மாணவர்களுக்கான கணினிப் புத்தகப் பகுதிகளைத் தமிழில் எழுதியிருப்பதைச் சொன்னேன்.

அத்துடன், ‘Computer Language’ என்பதை, ‘கணினி மொழி’ என்றோ ‘கணி மொழி’ என்றோ மொழி பெயர்க்கலாம்; நான் ‘கணி மொழி’ என்பதைத்தான் முழுவதும் பயன் படுத்தியிருக்கிறேன்” என்றேன். அவர் லேசாகச் சிரித்துவிட்டு, “கவனித்தேன். முதலில் ‘னி’க்குப் பதிலாக ‘ணி’ போட்டுவிட்டீர்களோ என்று கூட நினைத்தேன்” என்றார்.

தொடர்ந்து, “இதை என்னைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யவில்லையே?” என்றார். “இல்லை, இல்லை; எழுத்துச் சிக்கனத்திற்காகத்தான் செய்தேன்” என்றேன். இது அவரது பகட்டில்லாத, பழகுதலுக்கு எளிமையான, இனிமையான போக்கையே காட்டுகிறது. தலைசிறந்த வித்தகரை நாம் இழந்துவிட்டோம்.     

கலைஞர் கருணாநிதியின் கல்விப் பருவம்!

திருக்குவளை தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றபோதே, தலைமை ஆசிரியரிடம் தனிக் கல்வியும் கற்றார். திருக்குவளையில் படிப்பை முடித்த பின்னர், திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தார்.திருவாரூர் போர்டு பள்ளியில் படித்த காலத்தில் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த அவர், பள்ளி ஆக்கி அணியில் இடம்பிடித்தார். பள்ளி நாட்களிலேயே நாடகம், கவிதை, மேடைப் பேச்சு ஆகியவற்றில் தனித்திறன் பெற்றவராகவே திகழ்ந்தார்.

1938 - அப்போது ஆட்சியில் இருந்த ராஜாஜி அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக்கினார். தமிழகத்தில் முதல் இந்தி போர் மூண்டது. அப்போது பள்ளி மாணவராக இருந்த கருணாநிதியும் தமிழுக்காக கொடி தூக்கி திருவாரூர் வீதிகளில் போராட்டக்களம் கண்டார்.

பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை தொடங்கினார். ‘மாணவ நேசன்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார். 1939-ல் திரூவாரூர் பள்ளியில் பேச்சுப் போட்டி, நட்பு என்ற தலைப்பில் பேசினார் மாணவர் கருணாநிதி. அதுதான் அவரது கன்னிச் சொற்பொழிவு. இதன் பின்னர்தான் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைத் தொடங்கி வாரந்தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்தினார்.

1940-ல் தமிழ்நாடு மாணவர் மன்றத்தைத் தொடங்கினார். 1941-ல் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் கிளைகளை தஞ்சை மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் தொடங்கும் பணியில் தீவிரமாய் ஈடுபட்டார். 1942-ல் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட நாடு இதழின் மூன்றாவது ஏட்டில் ‘இளமைப் பலி’ என்ற கருணாநிதியின் கட்டுரை வெளியானது.அரசியல் ஆர்வத்தால் பள்ளிப் படிப்பின்போதே நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். அங்கிருந்துதான் அவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.

பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன்