இடத்துக்கேற்றபடி மாறும் மனித முகமூடி !



உளவியல் தொடர் - 47

உடல்... மனம்... ஈகோ!

It’s so egotistical to believe that we know more about someone else’s reality than they do, and such a waste of time. Shreve Stockton

- ஈகோ மொழி

ஈகோவின் செயல்பாட்டினால் பதிக்கப்படும் முத்திரைகளும், அடையாளங்களும் இணைகோடுகளைப்போல் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஈகோ பதிக்கும் முத்திரைகளாலும், அடையாளங்களாலும் ஏற்படும் நன்மை எல்லாம் கணினியின் இணைய சேவைக்கு (Internet) இணையானது என்றே சொல்லலாம். இணைய சேவையில் Search Engineகள் செய்யும் வேலையைத்தான் ஈகோவும் செய்கிறது. இணையத்தில் தேடுதலுக்கு துணையான key words களைக் கொண்டு செயல்படுவதுபோல், ஈகோவின் முத்திரைகளும், அடையாளங்களும் நினைவுகளின் அடுக்குகளில் தேடி எடுத்து வெளிக்கொணர்ந்து தருகிறது.

ஈகோ ஒவ்வொரு மனிதர்கள் மனதிலும் அவர்கள் உணராதவண்ணம், தானியங்கி ஆழ்மன செயல்முறையாக (Automatic Sub conscious process) முத்திரைகளைப் பதித்து வருகிறது. இதன் காரணமாகத்தான் மனதிலிருந்து ‘பரிந்துரைகளாக’ வெளிப்படும் ஈகோ முத்திரைகள், அவை பதிந்த உணர்ச்சி நிலையுடனேயே வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நீண்ட நாட்கள் கழித்து ஒரு நபரை வெளியூரில் சந்திக்கும்போது, அந்தச் சூழலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் ‘நீ ஊர்ல என் கூட சண்டை போட்டவன்தானே?‘ என்று வெறுப்பு காட்டுவதும் அதனால்தான்.

ஈகோ பதிக்கும் முத்திரைகளின் வழிமுறைகளை சற்று ஆராய்ந்து பார்ப்போம். ஒருவர் பிரதான சாலையில் தனியே கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, அந்த இடத்தில் அவர் ‘நான்‘ தனியே பயணிக்கிறேன் என்ற மனநிலைகொண்டவராகத்தான் பயணித்திருப்பார். தனிமையில் பயணிக்கும் யாருக்கும் அப்படியான மனநிலைதான் இருக்கும். ஆனால், அந்த இடத்தில் ஈகோ பதிக்கும் முத்திரையானது, ‘நான் கார் ஓட்டும்போது’ என்ற உட்பிரிவோடு இணைத்து உருவாக்கிக்கொள்கிறது. ஈகோ எடுத்துக்கொள்ளும் இந்த உட்பிரிவை அது பதிக்கும்போது நம்மால் உணரவே முடியாது. காரணம், கார் ஓட்டும்போது கார் ஓட்டுகிறோம் என்ற செயல் ஒரு இயல்பான செயலாக கரைந்து போய் கார் ஓட்டுகிறோம் என்ற எண்ணமே இல்லாதிருக்கும். ஈகோ பதிக்கும் அவ்வாறான முத்திரைகள் பிற்பாடு மேலெழுந்து வரும்போது ‘அன்னிக்கு கார்ல போயிட்டு இருக்கும்போது பார்த்தேன்‘ என்ற வகையில் வெளிப்படும்.

முகமூடி மனிதர்கள்

‘மனிதர்கள் எந்த ஒரு சூழலிலும் சக மனிதர்களுடன் பழகும்போது தங்களின் இயல்புக்கு மாறாக போலியாக முகமூடி ஒன்றை அணிந்தபடியே பழகுகிறார்கள்‘ என்று மானுடவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஈகோவின் முத்திரைகள் பல்வேறு விதமான வழிகளில் அவர்களின் ‘நான்‘தனை தோற்றுவித்தவாறே இருக்கிறது. வீட்டில் பாசமான குடும்ப உறுப்பினராக, நண்பர்களுக்கு ஜாலியான மனிதராக, அலுவலகத்தில் திறமையான பணியாளராக, வேறு இடங்களில் தேடல் நிறைந்தவராக, ரசனை மிக்கவராக, சுயநலக்காரராக, பரோபகாரியாக, வீரமானவராக, பயந்தவராக…. என்று சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவர் நடவடிக்கைகளும் மாறிக்கொண்டே இருப்பதால் ஈகோவின் முத்திரைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது.

இவை அனைத்திலும் உள்ளார்த்தமாக அவர்களின் ‘முகம்’ முகமூடி அணிந்த நிலையிலும், அணியாத நிலையிலும் இருந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள் எவ்வித முகமூடிகளுமின்றி, எப்போதும் நிறைவான நிலையிலான சீரான நேர்மறை கருத்துகளுடன் இயங்கும்போது ஈகோ தனது முத்திரைகளைப் பதிப்பது அறியமுடியாத ஒன்றாகவே இருக்கும். அதன் காரணமாக ஒன்றின் மேல் ஒன்றாக ஈகோ பதிக்கும் முத்திரைகள் புலப்படாத ஒன்றாக இருக்கிறது. அப்படி ஈகோவின் முத்திரைகள் புலப்படாததாக இருப்பதுதான் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. அதேநேரம் இயல்பை மீறி மனிதர்கள் முகமூடி அணிந்த சூழலில்
உருவாகும் ஈகோ

முத்திரைகள் சிக்கலாகிப்போவதோடு உறவுகள் கசந்துபோகவும் வழிவகுக்கிறது. ‘உலக வாழ்க்கையோடு பற்றுடன் இருக்கும்போது ஒவ்வொருவரும் முகமூடியை உணர்ந்தோ உணராமலோ அணிந்துகொண்டுதான் தீர வேண்டும்‘ என்பதையே உளவியலாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.வாழ்க்கையில் எப்போதும் நிஜ முகத்துடன் முகமூடி அணியாமல் இருப்பது சாத்தியமானதே இல்லை. எப்போதும் நிஜ முகத்துடன் முகமூடி இன்றி இருக்க ஞானிகளுக்கும், துறவிகளுக்கும் வேண்டுமானால் சாத்தியமானதாக இருக்கலாம். யதார்த்த வாழ்க்கையில் பயணிப்பவர்கள் அனைவரும் எப்போதும் ஏதாவது ஒரு முகமூடியை மூச்சுத்திணறலோடு அணிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இதனால்தான் முகமூடியை இயல்பாக அணிய வேண்டிய தருணங்களில் அணிந்துகொள்ளுங்கள். அவசியமின்றி அணிய வேண்டாம் என்று சொல்கிறார்கள். இங்கிலாந்தில் மனிதர்களின் நடவடிக்கைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மனிதர்கள் சராசரியாக இரண்டு முகமூடிகளை இயல்பாக அணிந்துகொள்கிறார்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஒன்று ஒவ்வொரு மனிதர்களும் இயல்பாக அமையும் முகமூடியை அணிகிறார்கள். இன்னொன்று தங்களுக்கு அமைந்த முகமூடியை விரும்பி கழற்றாமல் அணிந்துகொள்கிறார்கள்.

உதாரணமாக, முதன்முதலாக அலுவலகத்தில் வேலைக்கு சேரும்போது முதல் சில நாட்களுக்கு ‘அமைதியானவராக, அதிகம் பேசாதவராக, தரப்பட்ட வேலையை சிறப்பாய் செய்து முடிப்பவராக…’ என்று இயல்பாக அமையும் முகமூடியுடன் இருப்பார்கள். அதுவே, அப்படி ‘அமைதியானவராக, அதிகம் பேசாதவராக, தரப்பட்ட வேலையை அழகாக செய்து முடிப்பவராக…‘ உருவான முகமூடி பிடித்துப்போய், விட மனமில்லாமல் அதையே நிரந்திர முகமாக மாற்றிக்கொள்பவர்களாக இருப்பார்கள். சிலர் அலுவலகத்தில் ஒரு முகம் கொண்டவர்களாகவும், வீட்டில் ஒரு முகம் கொண்டவர்களாகவும் இருப்பது இதனால்தான்.

இதில் அவஸ்தை என்னவென்றால், ‘சார் ரொம்ப பொறுமைசாலி’ என்ற முகமூடி முத்திரை பெற்ற பின், அதைக் காப்பாற்ற எந்தச் சூழலிலும் கோபத்தை வெளிக்காட்டாமல் பொறுமைசாலியாக இருப்பதுபோல் Maintain செய்ய எடுக்கும் பிரயத்தனம்தான் கொடுமையானது. முகத்திற்கு முகமூடி அணிவதில் தவறில்லை, ஆனால் அது நிஜ உணர்ச்சிகளை பிரதிபலிப்பது போலவும், ஆளுமையை சிதைக்காதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டியது  அவசியம். நிறைவான நிலையோடு இயல்பான முகமூடியை அணியும்போதுதான் ஈகோவின் முத்திரைகளும் ஆளுமையின் வெளிப்பாட்டிற்கு வலு சேர்ப்பதாக இருக்கும். ஈகோவை அமைதிப்படுத்துவதாலும், ஈகோ மந்திரங்களாலும், நிறைவான மனநிலையை அடைந்ததும் நேர்மறை எண்ணங்களைவிட எதிர்மறை எண்ணங்கள் முதலில் மேலெழுந்து வருவதைக் காணமுடியும்… அவற்றை எப்படி அணுகுவது?

- தொடரும்

குரு சிஸ்யன் கதை

உண்மை என்பது என்ன?  

குரு ஆசிரம குடிலின் வாசலில் இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தார். அருகே சிஷ்யன் நின்று பேசிக்கொண்டிருந்தான். அப்போது ஒருவர் அங்கு வேகமாக வந்தார். குருவும் சிஷ்யனும் அவரை வரவேற்று அசிரமத்தின் திண்ணையில் அமரச் சொன்னார்கள். வந்தவர் அமராமல் குருவைப் பார்த்து “உண்மை என்பது என்ன?” என்றார். குரு புன்னகையுடன் “உண்மையை அறிந்துகொள்வோம், அதற்கு அவசரமில்லை. நீங்கள் நீண்ட தூரம் பிரயாணப்பட்டு வந்திருக்கிறீர்கள். முதலில் அமருங்கள். தாகத்திற்கு கொஞ்சம் மோர் அருந்துங்கள்...” என்றபடி சிஷ்யனைப் பார்த்தார்.

சிஷ்யன் ஆசிரமத்துக்கு உள்ளே சென்று ஒரு குவளையோடு, ஒரு சொம்பில் மோர் எடுத்துவந்து தந்தான். வந்தவர் குருவைப் பார்த்து, “மோர் அருந்திக் கொள்ளலாம். என் சந்தேகத்தை தீருங்கள்’’ என்றார். மோர் சொம்பையும் குவளையையும் வாங்கிய குரு, குவளையை ஆசிரமத்துக்கு வந்தவர் முன் வைத்து, அதில் மோரை ஊற்றினார். குவளை நிறைந்து கொண்டேவந்தது. குரு ஊற்றிக்கொண்டே இருந்தார். குவளை நிறைந்து, மோர் வழியத் தொடங்கியதும் குருவைப் பார்க்க வந்திருந்தவர் பதற்றமடைந்தார். ‘என்ன செய்கிறார், இவருக்கென்ன பைத்தியமா?’ என்று குருவை ஏளனமாகப் பார்த்தார்.

குரு மோரை ஊற்றிக்கொண்டே இருந்தார். மோர் வழிந்து ஓடியது. பொறுக்க முடியாமல் அவர், “ஐயா… நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், போதும் நிறுத்துங்கள் “ என்று கத்தினார். குரு புன்னகை மாறாமல் அவரைப் பார்த்தார். “பாருங்கள் மோர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. இந்தக் குவளை இனிமேலும் மோரைக் கொள்ளாது. இதைக்கூட உங்களால் பார்க்கமுடியவில்லையா?’’ என்றார். குரு சிரித்துக்கொண்டே,“இதைத்தான் நானும் யோசிக்கிறேன்,குவளையில் இனி கொஞ்சமும் ஊற்ற முடியாது என்பதை பார்க்க முடிந்த உங்களால்,

உங்கள் மூளையும் எண்ணங்களால் நிறைந்து வழிவதை ஏன் பார்க்க முடியவில்லை. குவளையைப் போலத்தான் உங்கள் மூளையும், நீங்கள் சேர்த்த எண்ணங்களால் அது நிறைந்து வழிந்து இந்தக் குடில் முழுவதும் வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாருங்கள். நிறைவை மீறி நிறைக்க நினைப்பதும் அறியாமைதான். எதன் கொள்ளளவையும் உணர்ந்து அறிவதுதான் உண்மையான தெளிவு. இந்த அறிவுதான் நீங்கள் கேட்ட உண்மை“ என்றார். வந்தவர் தெளிவடைந்து குருவை வணங்கிவிட்டு ‘‘இந்தத் தெளிவு பெறத்தான் உங்களை நாடி வந்தேன். மிக்க நன்றி’’ என்று கூறிவிட்டு கிளம்பினார். சிஷ்யனும் புன்னகைத்தபடி குவளையை எடுத்துக்கொண்டு ஆசிரமத்துக்குள் சென்றான்.

- ஸ்ரீநிவாஸ் பிரபு